மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை ‘அண்ணன்’ என்று குறிப்பிட்டு விஜய் புகழ்ந்து பேசியது தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டது சந்தோஷம் தந்தாலும் அரசியல் நோக்கத்தில் அவரது பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜய் தனது பேச்சு மூலம் விஜயகாந்தின் வாக்கு வங்கிக்கு குறிவைக்கிறாரா? இதுகுறித்த பிரேமலாதாவின் விமர்சனத்துக்கு தவெக பதில் என்ன? விஜயின் தவெகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?
விஜய் பேச்சும் பிரேமலதா பதிலும்
ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் பேசிய விஜய், “எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆரைப் போன்ற குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரும் மதுரையைச் சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது” என்று கூறினார்.
விஜயகாந்தை தனது ‘அண்ணன்’ என்று விஜய் குறிப்பிட்டதை முதலில் வரவேற்றாலும், “விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. லட்சம் கேப்டன்களை அவர் உருவாக்கியுள்ளார். எங்கள் வாரிசுகள் இருக்கிறார்கள், எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது வேறு யாரோ அதை வந்து பயன்படுத்திக் கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தேமுதிக ஏற்றுக்கொள்ளாது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விஜயின் பேச்சு, கடந்த தேர்தல்களில் விஜயகாந்த் பெற்றுவந்த திமுக, அதிமுக அல்லாத வாக்குகளை குறிவைத்ததாகவே பார்க்கப்படுகிறது. விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பின்னர் திரைக்கு வந்த ‘கோட்’ (GOAT) திரைப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கொண்டு விஜயகாந்தை தோன்றச் செய்தார். இதற்கான அனுமதியை பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பெற்றிருந்தார் விஜய். விஜயகாந்த் மறைந்த பிறகு, அந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் அவரைத் திரையில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, அரசியல் மேடையில் நேரடியாக விஜயகாந்த் பெயரை அவர் பயன்படுத்தியுள்ளார்.
தேமுதிக வாக்கு வங்கி
பட மூலாதாரம், DMDK
தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த தேமுதிகவின் வாக்கு சதவிகிதம், அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மறைந்த பிறகு அது மேலும் சரிந்துவிட்டது.
கடந்த2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இரண்டாம் இடம் பிடித்தார். அத்தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.59%.
விஜய்க்கு அண்ணனாக நடித்த விஜயகாந்த்
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படத்தில் விஜயகாந்த்
1993-ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்த ‘செந்தூரப் பாண்டி’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜய், ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ஓராண்டே ஆகியிருந்த நிலையில், செந்தூரபாண்டி வெளியானது. அப்போது பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த விஜயகாந்த், விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய அந்தப் படத்தில் விஜயின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விஜயை எங்களுக்குச் சிறு வயதிலிருந்தே தெரியும். அவரது ‘செந்தூரப் பாண்டி’ படத்தில் கேப்டன் நடித்துக் கொடுத்தார். இன்று அவர் நன்றாக வளர்ந்திருக்கிறார், வாழ்த்துகள். எஸ். ஏ. சந்திரசேகருடன் இணைந்து கேப்டன் 17 படங்களில் பணியாற்றியுள்ளார். அதே சமயம், விஜயகாந்த் அவர்களின் பெயரை கேப்டனின் வாக்குகளைப் பிரிப்பதற்காகச் சொல்கிறாரா? கேப்டனின் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறாரா என்றால், எங்கள் கட்சி 20 ஆண்டுகளாக செயல்படும் கட்சி. தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் இருக்கிறார்கள். கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான். இதை அவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், ஐ.டி. பிரிவினர் சரியான பதிலடி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மை நிலையை அவர்களும் உணரட்டும்.” என்று கூறினார்.
விஜயகாந்த் ஒரு கட்சிக்கானவர் அல்ல என்று கூறுகிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி. அவர் கூறுகையில், “விஜயகாந்தை ஒரு கட்சிக்கானவராக பார்ப்பது தவறு. அவர் சாதி, மதம், அரசியல் ஆகியவற்றைக் கடந்த ஒரு நல்ல பண்புள்ள ஆளுமை. எங்கள் தலைவருக்கும் அவருக்கும் இருந்தது அண்ணன்-தம்பி உறவு” என்றார்.
“உறவு வேறு அரசியல் வேறு”
உறவு வேறு, அரசியல் வேறு என்று கூறுகிறார் பிரேமலதா விஜயகாந்த் “கேப்டனை அண்ணன் என்று மேடையில் சொல்கிறார், சந்தோஷம். அவர் அண்ணன் என்றால், நாங்கள் அவரைத் தம்பி என்று கூறுகிறோம். அவ்வளவுதான். அதற்காக எங்கள் வாக்குகளை அவர் எடுத்துக் கொள்கிறார் என்றால், அதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தேமுதிக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், DMDK
படக்குறிப்பு, விஜயகாந்தை விஜய் அண்ணன் என அழைப்பதில் மகிழ்ச்சி என்கிறார் பிரேமலதா
கூட்டணிக்கு வாய்ப்புண்டா?
தேமுதிக-தவெக கூட்டணி சாத்தியம் பற்றிக் கேட்டதற்கு, டிசம்பர் மாதத்துக்குப் பிறகே அது குறித்துத் தெரியும் என்று தெரிவித்தார் லயோலா மணி.
“எங்கள் தலைவர் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தைச் செயற்குழு, பொதுக்குழு கூடித் தலைவரிடம் கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் மாதத்துக்குப் பிறகு அது குறித்த செய்திகள் வெளிவரும்” என்றார்.
மேலும் அவர் “விஜயகாந்த் – விஜய் உறவை நாங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை. விஜயகாந்த் மக்களின் அன்பைப் பெற்றவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், அனைவராலும் கொண்டாடப்படக் கூடியவர். விஜயகாந்தும் எம்.ஜி.ஆர். ரசிகர், எங்கள் தலைவரும் எம்.ஜி.ஆர். ரசிகர். அவரை அரசியல் குறியீடாக மட்டுமே பார்ப்பது தவறு. அரசியல் களத்தில் எழுப்பப்படும் அவதூறுகளுக்கும் பொய்களுக்கும் பதில் சொல்ல முடியாது” என்றார்.
திரைப்பட ரசனை வேறு, அரசியல் வேறு என்கிறார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக தலைமை நிலையச் செயலாளருமான ப. பார்த்தசாரதி. அவர் கூறுகையில், “கேப்டன் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கவில்லை. அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். 2005-ல் தேமுதிக தொடங்கிய போது, ரசிகர் மன்றங்களில் இருப்பவர்கள் வேறு கட்சிகளிலிருந்து ராஜினாமா செய்துவிட்டுத் தனது கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதேபோல, விஜய்க்கும் அனைத்துக் கட்சிகளிலும் ரசிகர்கள் இருப்பார்கள் என்பது இயல்புதான்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Parthasarathy
படக்குறிப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக தலைமை நிலையச் செயலாளருமான ப. பார்த்தசாரதி
அதே சமயம் தேமுதிக வாக்குகள் விஜய்க்கு மாறாது என்றும் அவர் கூறினார். “கேப்டன் மீது விஜய்க்கு மட்டுமல்ல, சூர்யா, விஷால் என திரை உலகில் உள்ள பலருக்கும் நல்ல மதிப்பு உண்டு. எங்கள் பொதுச் செயலாளர் கூறியது போல, விஜய்யை நாங்கள் “எங்கள் வீட்டுப் பிள்ளை”யாகப் பார்க்கிறோம். ‘செந்தூரப் பாண்டி’ படத்தில் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணனாக நடித்திருந்தார். அதுதான் அவர்களுக்கிடையிலான உறவு. விஜய்க்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தேமுதிக வாக்கு அவருக்கு மாறப் போவதில்லை.” என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்று கேட்டதற்கு, “நாங்கள் திமுக, அதிமுக, பாஜக என எந்த கட்சியுடனும் கூட்டணி இருக்கும் என்றோ, இல்லை என்றோ இப்போது கூறவில்லை. ஜனவரி மாதத்துக்குப் பிறகே அறிவிப்பு வெளியாகும்” என்றார் பார்த்தசாரதி.
விஜயகாந்த் வாக்குகளை குறிவைக்கிறாரா விஜய்?
“தற்போது விஜயகாந்தின் வாக்கு வங்கியை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலைதான் உள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்ள விஜய் நினைக்கிறார். அதைத் தடுத்து நிறுத்தும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இல்லை. விஜயகாந்தின் வாக்குகள் விஜய் பக்கம் திரும்பிவிடலாம் என்ற தேமுதிகவின் பயம் நியாயமானது” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
அவர் மேலும் கூறுகையில், “விஜயகாந்தின் வாக்காளர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களே; குறிப்பாக 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். விஜயகாந்த் இல்லாத இந்தச் சூழலில், அவரது மகன்களால் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. இளம் வாக்காளர்களின் ஆதரவு குறித்து விஜய் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் நகர்ப்புற, படித்த, முதியவர்கள் மத்தியில் விஜய்க்குப் போதிய ஆதரவு இல்லை. தேர்தல் என்று வரும்போது அனைத்துத் தரப்பினரின் வாக்குகளும் தேவை. தற்போதைக்கு அப்படியான ஆதரவு தமிழ்நாட்டில் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது. அதிமுக அதில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறலாம்” என்றார்.
தேமுதிக – விஜய் கூட்டணி அமைப்பது தற்கொலைக்குச் சமம் என்கிறார் பத்திரிகையாளர் மாலன், “தேமுதிக எந்தப் பக்கம் செல்வது என்று பிரேமலதா விஜயகாந்த் இன்னும் முடிவு செய்யவில்லை. அதேநேரம், விஜயுடன் செல்வது தற்கொலைக்குச் சமமாக இருக்கும்; விஜயகாந்தின் வாக்குகளை அவர்களே எடுத்து விஜய்க்கு வழங்குவது போல் இருக்கும்.” என்பது அவரது கருத்து.