நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்ற அறிவிப்பின் காரணமாக திரையுலகத்தினர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள விஜயின் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஐக்கிய அரபு அமீரகம், கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் உள்ள விஜயின் ரசிகர்கள் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்காக முன்பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில் விவரிக்க இயலாத பல்வேறு காரணங்களால் இப்படத்தை திட்டமிட்ட திகதியில் வெளியிடப்பட முடியவில்லை என வருத்தத்துடன் படக் குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய விஜய், ‘ஜனநாயகன்’ படத்தினை வெளியிடும் போது எதிர்பாராத சிக்கல் உருவாகலாம் என சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனிடையே இப்படத்தின் தணிக்கை சான்றிதழை இந்திய தேசிய திரைப்பட தணிக்கை வாரியம் வழங்கிட கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இது தொடர்பான விசாரணை கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருவதால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விஜயின் ‘ஜனநாயகன்’ வெளியீடு தள்ளிவைப்பு appeared first on Vanakkam London.