0
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு உலகம் முழுவதும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 9) இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, வட அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகிப்பாளர்கள், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெளியீடு ஒத்திவைப்பிற்குக் காரணமாக, படத்திற்கு இன்னும் மத்திய திரைப்படத் தணிக்கைக் கழகத்தின் (CBFC) தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததே பிரதான காரணம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து NDTV செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஜனவரி 9) தீர்ப்பை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே திரைப்படம் தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படாததால், படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த மாதம் டிசெம்பர் 19ஆம் திகதி, திரைப்படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யும்படி மத்திய திரைப்படத் தணிக்கைக் கழகம் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் வரை திரைப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதால், உலகளாவிய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வெளியீட்டு திகதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் நடிகர் விஜய்யின் நடிப்புத் துறையில் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுவதால், இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இதனால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட செய்தி ரசிகர்களை பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர், புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.