(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்துக்கு இன்று (நவ. 27) சென்றுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவின் கட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அவர் தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்துள்ளார். உடன் அவரது ஆதரவாளர்களும் வந்துள்ளனர்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, தவெக அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன்
பின்னணி
அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்” என்று கூறியிருந்தார்.
மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், “அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்” என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.
அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் “பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார்.