0
ஒளிப்பதிவாளரும், பிரபல நடிகருமான நட்டி நட்ராஜ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்திருக்கும் ‘ரைட் ‘திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரைட் ‘திரைப்படத்தில் நட்டி நட்ராஜ், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணாறு ரமேஷ் , தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார், யுவினா பார்தவி, ஆதித்யா சிவக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம். பத்மேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார். கொமர்சல் திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஆர் டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன் மற்றும் சியாமளா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் கதையின் நாயகனான நட்டி நட்ராஜ் காவல்துறை சீருடையில் தோன்றுவதும், படத்தின் டைட்டிலுக்கு கீழ் ‘ரைட் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பிடித்திருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.