தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் பிப்ரவரி 2-ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து தலைவர்களின் சிலையை திறந்து வைத்தார், தவெக தலைவர் விஜய்.
சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளன்று கட்சியின் தலைவரான விஜய், அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்ட இருப்பதாக தெரிவித்தார்.
தன்னுடைய அறிக்கையில், “மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்.
கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் தமிழக அரசியல் தளத்தில் நன்கு அறிமுகமான பலர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு மிக முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டு காலத்தில் இக்கட்சி செய்தது என்ன? தமிழகத்தின் அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என விளக்குகிறது இந்த கட்டுரை.
“மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில் தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம். எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார் விஜய்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டே, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. அதேபோன்று, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்ற இலக்குடன் அக்கட்சி செயல்பட்டு வருகிறது.
கட்சியில் சேரும் புதுமுகங்கள்
ஆரம்ப காலம் தொட்டே ‘ஆட்சியிலும் பகிர்வு, அதிகாரத்திலும் பகிர்வு’ என்ற விஜயின் முழக்கம், விடுதலைச் சிறுத்தைக் கட்சி விஜயின் கட்சியுடன் இணையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தற்போது அந்த கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, ஜனவரி 31-ம் தேதி பனையூரில் அமைந்திருக்கும் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் விஜயின் கட்சியில் இணைந்தார். வெவ்வேறு பெரிய கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்த இருவருக்கும் அக்கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பையும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பையும் வழங்கியுள்ளார் விஜய். மேலும், நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், விஜயும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் ஒன்றாக பங்கேற்பார்கள் என்ற செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இறுதியில் அந்த நிகழ்வில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில், ஆளும் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளை கூறினார் ஆதவ் அர்ஜுனா. ‘2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிப்போம்’ என்று கூறியிருந்தார் அவர். அவருடைய இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் ஓராண்டு பயணம்
கடந்த 2024-ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி ஒன்பது மாதங்களான பிறகே கொள்கைகள் தொடர்பான விவரங்களையும், கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பதையும் விக்கிரவாண்டியில் மாநாடு ஒன்றை நிகழ்த்தி அதில் அறிவித்தார் விஜய்.
அதன் பின்னர், ஃபெஞ்சல் புயலுக்கு நிவாரணம், பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, வேங்கைவயலுக்கு செல்லத் திட்டமிடுவது போன்ற அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.
தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினத்தின்போது கட்சி அலுவலகத்திலேயே அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செய்வது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
அவ்வப்போது ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, தொடர்ச்சியாக தன்னுடைய கருத்தையும் முன்வைத்து வருகிறார் விஜய். புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது, அதற்கு எதிராக தன் கண்டனங்களை பதிவு செய்தார். சமீபத்தில், பிப்ரவரி 1-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நலத்திட்டமும் இல்லை என்று கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
பொதுமக்களை சந்திக்க விஜய் மிகவும் யோசிக்கிறார், தயங்குகிறார் என்று சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. தவெகவின் ஓராண்டு பயணம் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கருதுகின்றனர். சிலரோ அக்கட்சி பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் உள்ளது என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி சாதகமாக அமையுமா?
“மக்களின் நேரத்தை விரயம் ஆக்காமல், 4 மணிநேரத்தில் மாநாட்டை முடித்த ஒரே கட்சியாக நான் இதனை பார்க்கின்றேன்,” என்று கூறுகிறார் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை படித்துவரும் திருநாவுக்கரசு.
பாதுகாப்பு மற்றும் போரியல் துறை மாணவரான அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கிய தேர்தல் வியூக வகுப்பாளர் குழுவாக விளங்கிய நிறுவனத்தில் பணியாற்றினார்.
“பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கும் மக்கள், அதிமுகவின் பக்கம் சாய்வதை பெரும்பாலாக தவிர்த்தே வருகின்றனர். மேலும், கொள்கை தலைவர்களாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள தலைவர்கள் மற்றும் அவர்களின் அரசியல் கோட்பாடுகள் போன்றவை மக்கள் மத்தியில் இன்று பேசுபொருளாக இருக்கிறது.
எனவே, ஆளுங்கட்சி மீது அதிருப்தி கொண்டவர்களுக்கான இடமாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கலாம் என்பதில் அச்சம் இல்லை,” என்று விவரிக்கிறார்.
“அரசியல் மயமாக்கப்படாத இளைஞர்கள் இதுநாள் வரை நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் சிக்கலான சித்தாந்தங்கள் என்பது இல்லாமல், எளிமையான, எளிதில் அணுகக்கூடிய ஒரு கட்சியாக தவெக இருப்பது இளைஞர்களின் வாக்குகளை விஜய் பக்கம் மடைமாற்றம் செய்யும்,” என்றும் தெரிவித்தார் அவர். மக்கள் அணுகக்கூடிய ஒரு தளமாக இக்கட்சியை உருவாக்கி வருவதே ஓராண்டு முன்னேற்றம் என்று கூறலாம், என்கிறார் அவர்.
மேற்கொண்டு பேசிய அவர், “திமுகவுக்கு எதிரான வாக்குகள் மேலும் சிதறத் துவங்கும். திமுக தன்னுடைய ‘கோர்’ (முதன்மை) வாக்காளர்களின் வாக்குகளை அடுத்தத் தேர்தலில் வென்றால் கூட மீண்டும் அவர்களால் ஆட்சி அமைக்க இயலும்” என்று கூறுகிறார், திருநாவுக்கரசு.
தவெக தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?
பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் தமிழக வெற்றிக் கழகம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். “ஒரு தேர்தலில் போட்டியிட்டு அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே ஒரு கட்சி கள அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரியவரும்,” என்று கூறினார் ஆழி செந்தில்நாதன்.
அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன், “ஒரு கட்சி உருவாக வேண்டும் என்றால், ஒன்று ஒரு வெற்றிடத்தை நிரப்ப வேண்டும், அல்லது தனக்கான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதில், எதை நோக்கமாக வைத்து விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதில் இன்று வரை எந்த தெளிவும் இல்லை,” என்று குறிப்பிடுகிறார்.
பெரிய அளவிலான ஒரு அரசியல் கொள்கை ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று கூறும் ஆழி செந்தில்நாதன், அன்று திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எதிராக ஒரு மாற்று தேவையாக இருந்தது, அந்த இடத்தை அவர் நிரப்பியதாக கூறுகிறார்.
“அந்த நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தாலும் அதே வரவேற்பும் கிடைத்திருக்கும். ஆனால் ஒரு தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் ஒரு கட்சியாக உருவெடுத்திருக்க இயலாது,” என்று மேற்கோள்காட்டுகிறார் அவர்.
ஒரு சினிமா பிரபலம் அல்லது ஒரு தொழிலதிபர் என்று ஒரு தனிநபர் அரசியலுக்கு வருகிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே ஒருவர் பின் மக்கள் நின்றுவிடமாட்டார்கள் என வலியுறுத்தும் அவர், 2014-ஆம் ஆண்டு மோதி அரசு ஆட்சியை கைப்பற்றிய காலத்துக்குப் பிறகு இங்கு நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் சித்தாந்தம் சார்ந்தே நடைபெறுவதாக சுட்டிக்காட்டுகிறார்.
“ஒரு கட்சி, ஒரு சித்தாந்தம் சார்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒரு அடையாள அரசியல் சார்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆம் ஆத்மி போன்று ஒரு பொது பிரச்னையை, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு ஒரு கட்சியாக செயல்பட வேண்டும். இதில், விஜய் எந்த பக்கம் நின்று யாருக்காக குரல் தருகிறார் என்பதில் எந்த தெளிவும் இல்லை,” என்று குறிப்பிடுகிறார்.
“சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த அரசியல்வாதிகளிலேயே மிகவும் பலவீனமான ஒரு கட்சியாக நான் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்க்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தவெகவில் தற்போது இணைந்தவர்கள் பெரிய தலைவர்கள் அல்ல என்றும் அவர்களின் பக்கம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.
“ஒரு அரசியல் கட்சி தோன்றுவதற்கான அடிப்படையும் வெற்றிடமும் இல்லாமல் வரும் ஒரு கட்சி சில காலங்கள் தாக்குப்பிடிக்கும். பிறகு கூட்டணி அரசியலுக்குள் சேர வேண்டிய நிலையே ஏற்படும்” என்பதையும் அவர் தெரிவித்தார்.
வாக்கு வங்கி அரசியல்
“கட்டமைப்பே ஏதும் இன்றி ஒரு கட்சியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இந்த கட்சி ஓராண்டாக எதையும் செய்யவில்லை,” என்று குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
“களத்தில் இறங்கி ஏன் செயல்படவில்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விஜயின் கட்சியினர் கூறும் பதில் கட்டமைப்பு ஏதும் இல்லை என்பது தான். முதலில் கட்சியை கட்டமைத்து, களத்தில் சென்று பணியாற்றி இருக்க வேண்டும். பிறகு தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிருந்தால் இந்த கட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது புரிந்திருக்கும்,” என்று அவர் மேற்கோள்காட்டினார்.
மேற்கொண்டு பேசிய அவர், “இன்று திமுகவின் ஆட்சி மீது இருக்கும் அதிருப்தி, தவெகவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமா? வாக்கு பலத்தை அதிகரிக்குமா என்பது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டிய தேவையில்லை. தேர்தலுக்கு இன்னும் குறைந்தது ஒரு வருடம் 2 மாதங்கள் இருக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார்.
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற ஒரு பெரிய அதிருப்தி தரும் நிகழ்வோ, அசாத்திய சூழலோ இங்கே எழவில்லை. ஒரு அசாத்திய சூழலின் பின்னணியிலோ, ஒரு இயக்கத்தின் அடிப்படையிலோ இந்த கட்சி உருவாகவில்லை. இது ஏற்படுத்திய தாக்கம் என்பது ஒன்றும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு