சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (வி.சி.க) தலைவர் தொல்.திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர்.
நடிகர் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்பதை அந்த நூலின் பதிப்பகத்தார் உறுதி செய்துள்ளனர். இருவரும் ஒரே நிகழ்வில் பங்கேற்பது குறித்து அரசியல் ஏதும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தங்கள் கொள்கைகள், செயல்திட்டங்களை விளக்கிப் பேசும் போது அக்கட்சியின் தலைவர் விஜய், “இப்போது சொல்லப்போவது தான் அரசியல் குண்டு. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்,” என்று பேசியிருந்தார்.
அதே மாநாட்டில், “திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்று தி.மு.க-வைச் சாடி பேசியிருந்தார்.
இந்த மாநாட்டுக்கு முந்தைய சில வாரங்களில் தான் ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழக்கம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது அக்கட்சியின் நீண்ட கால முழக்கம் என்றாலும், சமீப காலத்தில் இந்தக் குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன.
“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல,” என்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது குறித்துப் பேசிய போது திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தான், விஜய் தன் கட்சி மாநாட்டில் பேசியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுப்பதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
திருமாவளவனின் விளக்கம்
மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க-வுக்கு வி.சி.க விடுத்த அழைப்பு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வி.சி.க இல்லாமல் தி.மு.க-வால் வெல்ல முடியாது என்று வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசியது உள்ளிட்ட சமீபத்திய விவகாரங்களால் தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் விஜயும் ஒரே மேடையில் பங்கேற்கப் போவது என்பது கூட்டணிக்கான சமிக்ஞையா என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், தாங்கள் தி.மு.க கூட்டணியில் உறுதியாக நீடிக்கிறோம் என்றும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் என்று கூறுவது சரியல்ல என்றும் கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நூலின் இணை பதிப்பாளர் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ எனும் தேர்தல் வியூக நிறுவனமாகும். வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா?” என்று கூறி, விஜய்யுடன் கூட்டணி தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘விழாவில் விஜய் பங்கேற்கிறார்’
அம்பேத்கர் குறித்த நூல் ஒன்றைப் பதிப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நூலுக்கான பணிகளை தொடங்கியதாக கூறும் பதிப்பகத்தார், விஜய் இந்நிகழ்வில் உறுதி செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே இந்த விழாவுக்கு தன்னை அழைத்ததாகவும் ,அப்போதே விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த விழாவை ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் , முதல்வர் ஸ்டாலின் வெளியிட தான் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பதிப்பகத்தார் தெரிவித்ததாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நூலை யார் வெளியிடுவார் என்பது குறித்து முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
இது வி.சி.க நடத்தும் நிகழ்ச்சியா?
இந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைகள் எழுப்பப்படுவதற்கு மற்றொரு காரணம்; இந்த நூலின் இணை பதிப்பாளர் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’, வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனால் நடத்தப்படுகிறது.
‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற வி.சி.க-வின் முழக்கம் குறித்து பொதுவெளியில் அதிகமாகப் பேசப்பட்ட போது, ஊடக நேர்காணல் ஒன்றில், ஆதவ் அர்ஜூன் தி.மு.க-வைச் சாடிப் பேசியிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அளித்து இருந்த பேட்டியில், தி.மு.க-வைக் குறிப்பிட்டு, “30% வாக்கு வங்கி இருந்தால் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடலாமே. வட மாவட்டங்களில் வி.சி.க-வின் வாக்கு வங்கி இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது,” என்று பேசியிருந்தார்.
மேலும், தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கும் வகையில், “நேற்று வந்தவர், சினிமாவிலிருந்து வந்தவர், துணை முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் எங்கள் தலைவர் வரக்கூடாது?” என்று பேசியிருந்தார்.
தி.மு.க இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்சியின் மூத்தத் தலைவரும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இதற்கு பதிலளித்திருந்தார். “முதிர்ச்சியின்றி பேசுவது கூட்டணி அறத்துக்கு சரிவராது. இதனை திருமா ஏற்கமாட்டார், நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.
‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் தொழிலதிபர் சாண்டியாகோ மார்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூன், 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தி.மு.க-வின் பிரசாரக் குழுவில் பணியாற்றி வந்தார். 2021-ஆம் ஆண்டு முதல் வி.சி.க-வின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவர் 2020-ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற வி.சி.க பிரசார ஊடகத்தைத் துவங்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து பதிப்பகமே முடிவு செய்கிறது என்று ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத, ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ குழுவைச் சேர்ந்தவர், “விஜயை அழைப்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. மாநாடு குறித்து இப்படியொரு சர்ச்சை வரும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. மேடையில் யார் இருக்க வேண்டும், நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வது பதிப்பகம். இந்த நூலின் விற்பனை, விளம்பரம் ஆகியவை ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ பொறுப்பு. அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற செய்தியை எடுத்துச் செல்ல விரும்புகிறோம். எனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளோம்,” என்றார்.
‘ஊகங்களைத் தவிர்க்க இயலாது’
தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் இடையிலான சர்ச்சைகள் குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 8) வெளியிட்ட அறிக்கையில் விளக்கமளித்திருந்தார் திருமாவளவன்.
“மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என்று கூறியது பரந்த பார்வை மற்றும் பொதுநல நோக்கத்துடன். ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கம் கால் நூற்றாண்டு காலக் கோரிக்கை, புதிதாக இப்போது பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறோம் என வேண்டுமென்றே நம்மை தி.மு.க-வுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்க முயன்றனர்,” என்கிறார்.
“மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் நாம் குரல் எழுப்புகிற போதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்
ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பதை எந்த எதிர்ப்பார்ப்புடன் விஜய் அறிவித்தார் என்று தெரியாது என்று கூறியுள்ள திருமா, “இது வி.சி.க-வின் கோரிக்கை தானே, எனவே அவர்களைக் குறிவைத்துதான் விஜய் பேசியுள்ளார் என்ற ஊகங்கள் தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்,” என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.