“திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்” என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சீமான் விமர்சித்துள்ளார்.
“கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் என்ற கோபத்தில் சீமான் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது சீமான் விமர்சிப்பது ஏன்? இதன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், “சாதி, மதம், இனம், மொழி எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்” என்றார்.
பிளவுவாத அரசியல் செய்கிறவர்களை த.வெ.க.,வின் கொள்கை எதிரியாகக் குறிப்பிட்ட நடிகர் விஜய், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இவை நமது இரண்டு கண்கள்” எனப் பேசினார்.
சீமான் பேசியது என்ன?
இந்தப் பேச்சுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு கடும் எதிர்வினையைக் காட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சீமான், “திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கண் என்றவுடன் பயந்துவிட்டேன். சாம்பாரும் கருவாடும் வேறு வேறு. கருவாட்டு சாம்பார் எனக் கூறக்கூடாது.
அண்மையில், ‘காட்டுப் பூனையும் நாட்டுக் கோழியும் ஒன்று’ என்கிறார் விஜய். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சீமான், “அண்மையில் வந்த படத்தில் கதாநாயகன், வில்லன் என இரண்டு பாத்திரத்தையும் அவர் (விஜய்) ஏற்றதால் குழம்பிப் போய்விட்டார். திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஏன் வேண்டும் என்பதற்கான காரணம் தெரிந்திருந்தால் அவர் சொல்ல மாட்டாரா?” என விஜயை சாடினார்.
“திராவிடம் என்பது வேறு. தமிழ்த் தேசியம் என்பது வேறு. திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இனத்துக்கு நேர் எதிரான ஒன்று. என் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியம். குடிக்க வேண்டும் என்பது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
விஜய் பாணியில் விமர்சித்த சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படையே தவறாக இருப்பதாகப் பேசிய சீமான், “இது கொள்கையே அல்ல. தான் நடுநிலை என்கிறார். இது நடுநிலை அல்ல கொடுநிலை” எனக் கூறிவிட்டு, “வாட் ப்ரோ… வெரி ராங் ப்ரோ” என விஜய் பாணியிலேயே அவரைச் சாடினார் சீமான்.
அதைத் தொடர்ந்து, மாநாடு கட்-அவுட்டில் வேலுநாச்சியார் படத்தை த.வெ.க முன்னிறுத்தியது குறித்துப் பேசிய சீமான், “அவர் யார் எனச் சொல்லட்டும். சேர, சோழ, பாண்டியர், அஞ்சலை அம்மாள் யார் என அவருக்குத் தெரியாது” என்று பேசினார்.
மேலும், “பெண்ணிய உரிமை என்பதை வேலுநாச்சியாரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். 250 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளவுக்கு பெண்ணுரிமையைப் பேசியவர் வேறு யாரும் இல்லை. பெரியாரிடம் பெண்ணுரிமையை இவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்றால், வேலுநாச்சியாரிடம் இருந்து என்ன கற்றார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
‘கொள்கை வேறு. உறவு வேறு’
மறுநாள் (நவம்பர் 2) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. எனக்கு கொள்கை மொழி தமிழ்தான். இந்தி உள்பட எல்லா மொழிகளும் எங்கள் விருப்ப மொழிதான்” என்றார்.
அண்ணன்-தம்பி உறவாக நடிகர் விஜயை பார்ப்பதாக முன்னர் சீமான் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “கொள்கை வேறு. உறவு வேறு. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான். எங்களுக்கு ரத்த உறவைவிட லட்சிய உறவுதான் முக்கியம்” என்றார்.
நாம் தமிழர் வாக்குகளை பிரிக்கிறதா த.வெ.க?
“நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையை மாற்ற வேண்டும் அல்லது பேசுவதற்கு எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும்” எனவும் சீமான் கூறினார்.
த.வெ.க மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “கூட்டம் எல்லாருக்கும் வரும். ஜல்லிக்கட்டுக்கும் கூட்டம் கூடியது. நாளை இன்னாரு நடிகர் பேசினாலும் கூட்டம் வரும். மதுரையில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா?” என்றார்.
“நாம் தமிழர் வாக்குகளை த.வெ.க பிரிக்கும் எனப் பேசப்படுகிறதே?” என செய்தியாளர்கள் கேட்டபோது, “இதெல்லாம் என்ன பேச்சு? யார் ஓட்டையும் யாரும் பிரிக்க முடியாது” என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.
சீமானின் பேச்சுக்கு த.வெ.க-வின் பதில் என்ன?
சீமானின் விமர்சனம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் லயோலா மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், “இதுபோன்ற பேச்சுகள் வரவே செய்யும். மக்கள் பணி செய்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். ஏதோவோர் உணர்வின் அடிப்படையில் சீமான் பேசுகிறார். அதை மௌனமாகக் கடந்து போகவே விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
“திராவிடமும் தமிழ்த்தேசியமும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பதைத் தனது கருத்து என்றுதான் விஜய் சொன்னாரே தவிர, கருத்தியலாக அவர் அதைக் கூறவில்லை. அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்” என்கிறார் லயோலா மணி.
மக்களுக்கு என்ன சித்தாந்தம் தேவையோ அதை நோக்கி த.வெ.க பயணிப்பதாகவும் த.வெ.க-வை ஒருவர் விமர்சிப்பதைவிட பல கோடி பேர் வாழ்த்துவதையே தங்கள் கட்சி பார்ப்பதாகவும் லயோலா மணி குறிப்பிட்டார்.
“தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை பிரதான எதிரிகளாகப் பார்க்கிறோம். பாசிசமும் ஊழல் நிறைந்த அரசும் இருக்கக்கூடாது என்பதுதான் த.வெ.கவின் நிலைப்பாடு. சீமான் எப்போதும் எங்களின் சகோதரர். அவரை விமர்சிப்பதற்காக அரசியல் களத்திற்கு நாங்கள் வரவில்லை” என்கிறார்.
சீமான் பேசியதன் பின்னணி என்ன?
அதேநேரம் சீமானின் பேச்சை விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன், தமிழக வெற்றிக் கழகத்தால் வாக்கு வங்கியில் பாதிப்பு வரலாம் என்ற கோபத்தின் வெளிப்பாடாக சீமான் பேசியதைத் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“விஜய் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக உள்ளது. ஒரு மண்ணில் எந்த சித்தாந்தம் தோன்றியதோ, அந்த மண்ணுக்கு அது செய்த பங்களிப்பு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். திராவிட சித்தாந்தம் என்றால் பெரியார்தான். அவரது போராட்டம், வாழ்க்கை ஆகியவற்றால் பலன் பெற்ற மண்ணாக தமிழ்நாடு உள்ளது” என்றார் அவர்.
“தமிழ்நாட்டின் நலன், தமிழ் மக்கள் மேம்பாடு ஆகிய அரசியல் கூறுகளை உள்ளடக்கியதுதான் தமிழ்த் தேசியம். தமிழர்களை முன்னேற்றிய ஒன்றை இரண்டு கண்கள் என விஜய் கூறியதில் என்ன தவறு?” என அய்யநாதன் கேள்வி எழுப்புகிறார்.
மாநாட்டில் விஜய் பேசிய பேச்சின் மூலம் நாம் தமிழர் கட்சியுடன் த.வெ.க கூட்டு சேராது என்பதைப் புரிந்து கொண்டதால், தனது எதிர்ப்பை சீமான் வெளிக்காட்டுவதாகக் கூறுகிறார் கா.அய்யநாதன்.
நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன?
இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், “வாக்குகளை விஜய் பிரிப்பார் என நினைத்திருந்தால் அப்போதே எதிர்த்திருப்போம். இது விஜய் மீதான காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ இல்லை. இதுவொரு சித்தாந்த முரண்” என்கிறார்.
“காலம் காலமாக ஏமாற்றப்பட்ட மக்கள், தாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என்ற விழிப்புணர்வைப் பெற்று வரும் சூழலில் அதை மீண்டும் விஜய் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதால் எதிர்க்கிறோம்” என்றார் கார்த்திக்.
தனது அரசியல் வருகையை பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சி வரவேற்றதாகக் கூறும் இடும்பாவனம் கார்த்திக், “கடந்த ஆறு மாதங்களாகத் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. மாநாட்டில் பேசிய பின்னரே விமர்சிக்கிறோம்” என்றார்.
“திரைக் கவர்ச்சியை நம்பி அரசியலை ஓட்டிவிடலாம் என விஜய் நினைக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை” என்றும் கடுமையாக இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.