படக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.கட்டுரை தகவல்
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார்.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில், தற்போது வேறு ஒரு இளைஞர் தான்தான் தூக்கியெறியப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த நடைபாதையில் விஜய் நடந்துசெல்லும்போது பாதுகாப்பிற்காக சில பவுன்சர்கள் வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நடைபாதையை நெருங்கிவிடாதபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதையும் மீறி சில இளைஞர்கள் அந்த நடைபாதையில் ஏறினர். அப்போது விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அவர்களைத் தூக்கி கீழே வீசினர். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகவே ஒளிபரப்பாயின.
இதற்குப் பிறகு, ‘அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்’ எனக் கூறி, குன்னம் தாலுகாவில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார்.
திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பெரம்பலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷமும் அவரது மகன் சரத்குமாரும் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில், பவுன்சர்கள் தன்னைத் தூக்கியெறிந்ததால் தனது “மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கு யாருமே உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
படக்குறிப்பு, குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார்.
முதலில் கூறியதை மாற்றிப் பேசியது ஏன் என ஊடகங்கள் கேட்டபோது, “கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்” எனக் கூறினார்.
சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் த.வெ.க. தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு அந்த வழக்கு மதுரை மாவட்டம் கூடகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, “சரத்குமார் என்பவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் ஒரு வீடியோவில் மாநாட்டிற்கு 9 மணிக்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் ரயிலில் சென்றிருக்கிறார். அரியலூரில் இருந்து அந்த ரயிலே காலை 9 மணிக்குத்தான் வரும். இதிலிருந்தே அவர் சொல்வது பொய் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அவருடைய தாயார் வீடியோவில் பேசியதும் நான் இவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றுதான் கூறினார். இப்போது மாற்றிச் சொல்கிறார்” என்கிறார் சிவகுமார்.
இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இன்ஸ்டாகிராாம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “தூக்கிவீசப்பட்ட இளைஞர் நான் தான், பவுன்சர்கள் தூக்கி வீசியவுடன் கம்பியைப் பிடித்து கொள்வேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை” எனக் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய்
இது குறித்து அஜய்யிடம் பிபிசி கேட்டபோது, “மதுரை மாநாட்டில் ராம்ப்பில் ஏறியதும் பவுன்சர்கள் என்னைத்தான் தூக்கிப் போட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தேவையில்லாமல் விஜய் மீது புகார் கொடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்தால் அது நான்தான் என நிரூபிப்பேன். அந்த நபர் சொல்வது பொய்” என்று தெரிவித்தார்.
ஆனால், ராம்பில் ஏற முயன்ற பலர் இதுபோல தூக்கிவீசப்பட்ட நிலையில், அப்படி தூக்கிவீசப்பட்ட நபர்களில் சரத்குமாரும் ஒருவராக இருக்கலாம் அல்லவா என அஜய்யிடம் கேட்டபோது, அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். “அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான். வீடியோவில் இருப்பதும் நான்தான். வேறொருவர் இருந்ததாகச் சொல்வது பொய்” என்கிறார் அஜய்.
இப்போது சரத்குமார் அளித்த புகார் மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சரத்குமார் சந்தித்திருக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக சரத்குமாரைத் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை.
அவருடன் அங்கே சென்ற இந்தியத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் இது குறித்துக் கேட்டபோது சரத்குமார் ஊடகங்களிடம் பேச தயங்குவதாகத் தெரிவித்தார். “நாங்கள் தொழிலாளர்களுக்காக கட்சி நடத்துகிறோம். சரத்குமாரின் தாயார் கட்டடத் தொழிலாளர் என்பதால் அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.
சரத்குமார் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இதுபோல வீடியோ வெளியானதும், அவருடைய தாயார் இது குறித்து வீடியோவில் பேசினார். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். இதையடுத்து நான் சரத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.
கட்சியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய தாயாரும் பாட்டியும் அழுதுகொண்டேயிருந்தார்கள். பிறகு அவரே முன்வந்து தான்தான் தூக்கிவீசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு பெரம்பலூரில் புகார் கொடுத்தோம். வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு, எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. இதனால், மதுரைக்கும் சென்று எஸ்பியைச் சந்தித்தோம்” என்றார் ஈஸ்வரன்.
ஆனால், தற்போது அஜய் என்பவர் தான்தான் தூக்கிவீசப்பட்டதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, “சரத்குமாரிடம் கேட்டபோது, ராம்ப்பில் ஓடியது தான் அல்ல என்றாலும் தூக்கி வீசியது தன்னைத்தான் என்கிறார். அஜய் என்பவர் நிறைய நண்பர்களோடு சென்றதால் அவரிடம் நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. சரத்குமாரிடம் இல்லை. அப்படியே அஜய் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், அவரைத் தூக்கி வீசியதும் தவறுதானே?” என்கிறார் ஈஸ்வரன்.
இது தொடர்பாக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் கேட்டபோது, “முதலில் புகார் சொன்ன அந்த இளைஞர் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார். அவரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தும் எவ்வித முகாந்திரமும் இன்றி காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. இப்போது வேறு ஒரு இளைஞர் அது தான்தான் எனக் கூறியிருக்கிறார். வழக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பாகவே, இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும்” என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார்.
இது தொடர்பாக பேசுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.