பட மூலாதாரம், TVK
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
“தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் மறைமுக ஒப்பந்தம் உள்ளது என சொல்லலாமா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்?” என, அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
திருச்சியில் அக்டோபர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் சம்பவத்தில் தவெக மீதான அரசின் அணுகுமுறையை அவர் விமர்சித்தார்.
“ஆனால், அப்படியெல்லாம் ஓர் அரசாங்கம் நடந்து கொள்ள முடியாது” என தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தி.மு.க அரசு பயப்படுகிறதா? விமர்சனம் எழுவது ஏன்?
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பட மூலாதாரம், Getty Images
என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
“கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா?” என, முதலமைச்சர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மட்டும் பதில் அளித்தார்.
‘தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?’
இந்தநிலையில், கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா என்ற கேள்வியை வி.சி.க தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
திருச்சியில் அக்டோபர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் சம்பவத்தில் அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம் சுமத்தி அதன் மூலம் அரசியல் செய்வதில் விஜய் குறியாக இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது” எனக் கூறினார்.
“கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக துளியும் வருத்தமோ, குற்ற உணர்வோ அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் ககைகளில் சிக்கியிருக்கிறார் என்பதைக் காணும்போது கவலையளிக்கிறது” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய திருமாவளவன், “அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு உள்ள முகாந்திரம் விஜய்க்கு இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
‘விஜய் மீது வழக்குப் பதிவு செய்யலாம்’
பட மூலாதாரம், Vijayan
“தவெகவின் தலைவராக விஜய் இருக்கிறார். நெரிசலுக்கு கூட்டம் கூடுவதில் ஏற்பட்ட குறைபாடுதான் பிரதான காரணமாக உள்ளது. அதிக மக்கள் கூடும்போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை” எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்,
“இதனை அரசாங்கம் செய்ய முடியாது” எனக் கூறும் கே.எம்.விஜயன், ” அவரது கட்சியை அவர் தான் கவனிக்க வேண்டும். ஒரு கட்டடம் கட்டும்போது விபத்து ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீதுதான் வழக்குப் போடுவார்கள். அந்தவகையில் கரூர் சம்பவத்துக்கு அக்கட்சியே பொறுப்பாக முடியும்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய கே.எம்.விஜயன், “எந்த இடத்தில் அதிக கூட்டம் கூடினாலும் அங்கு குழப்பம் இருக்கும். அதை சரிசெய்யும் வகையில் ஒருங்கிணைப்பதற்கு கட்சி நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
“அவ்வாறு ஒருங்கிணைக்காமல் இருந்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யலாம்” எனவும் குறிப்பிட்டார்.
தி.மு.க அரசு அமைதியாக இருப்பது ஏன்?
பட மூலாதாரம், TVK
” விஜய் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தால் அது அரசியலாக்கப்படும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நீதித்துறை சார்ந்து விசாரணை நடந்ததாக பார்க்கப்படும்” எனக் கூறுகிறார் கே.எம்.விஜயன்.
“அரசு, அவசரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதைக் காட்டுவதற்காக அமைதியாக உள்ளனர். இவ்வாறு அரசு கையாள்வது என்பது சாதாரண விஷயம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கே.எம்.விஜயன், “ஒரு நபரைக் கைது செய்து தேவையற்ற பிரபலத்தைக் கொடுக்காமல் தடுக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் பார்க்கலாம்” என்கிறார்.
“நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அந்த நடவடிக்கையை கண்ணியத்துடன் எடுக்கப்பட்டதைப் போன்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாகவே பார்க்கிறேன்” எனவும் கே.எம்.விஜயன் தெரிவித்தார்.
ஆனால், “இந்த விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை” எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.
விஜய் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
பிபிசி தமிழிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ” ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆணையத்தின் அறிக்கை வரும் வரையில் யார் பொறுப்பு என யாரையும் குறிப்பிட முடியாது. கரூர் விவகாரத்தில் சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
“விஜய் குற்றவாளியா… இல்லையா என்பதைக் கூற முடியாது. அவரின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கும்போதே அந்த இடத்துக்கு எவ்வளவு பேர் வர முடியும் என்பதை உணர்ந்து அனுமதியை மறுத்திருக்கலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களைப் பாதுகாப்பது தான் அரசு நிர்வாகத்துக்கு முக்கியமானது” எனக் கூறுகிறார். ராதாகிருஷ்ணன்.
தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், “பரப்புரை நடந்த இடத்துக்கு தாமதமாக விஜய் வந்தததை ஒரு காரணமாக கூற முடியாது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நிர்வாகம் தயாராக இருந்திருக்க வேண்டும். மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ஆட்சியர் தான் தலைவராக இருக்கிறார்” என்கிறார்.
“குற்றம் சுமத்துவதைவிட இவ்வளவு பெரிய தோல்வி யாரால் ஏற்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
“வழக்கில் விஜய் பெயரை சேர்த்தாலும் எடுபடுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வந்தது மட்டும்தான் அவர் செய்த ஒரே வேலை. அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் தான் ஊகித்திருக்க வேண்டும். அந்தவகையில் அரசு இயந்திரம் தோல்வியடைந்துவிட்டது” எனக் கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.
பட மூலாதாரம், Ravikumar
‘முதல்வரை பலவீனமாக காட்டுகிறார்’
“இந்த விவகாரத்தில் அரசு நியாயமான அணுகுமுறையுடன் நடந்து கொள்ளவில்லை” எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இறப்புகளுக்கு விஜய்தான் பொறுப்பு என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் இறந்துவிட்டதாக கூறியபோதும் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார்” எனக் கூறுகிறார்.
முதலமைச்சரை பலவீனமான நபராக காட்டுவதைத்தான் விஜய் விரும்புவதாகக் கூறும் ரவிக்குமார், “தன்னை அரசுக்கும் மேலானவராக காட்டிக் கொள்ள முற்படுகிறார். அரசு பத்து லட்சம் அறிவித்தால் தான் 20 லட்சம் தரப் போவதாக கூறுகிறார்” என்கிறார்.
“ஆளும் அரசை பலவீனமானதாக தனது பேச்சில் காட்டுகிறார். தி.மு.க ஆட்சியின் அணுகுமுறையும் அதையொட்டியே இருக்கிறது. அவரைப் பார்த்து ஆளும்கட்சி பயப்படுவதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் பார்ப்பார்கள்” எனவும் ரவிக்குமார் கூறுகிறார்.
“இது அரசாங்கத்துக்கு பலவீனமானதாக முடியும்” எனக் கூறும் ரவிக்குமார், ” மாவட்ட நிர்வாகத்துக்கு பொறுப்பு எனக் கூற முடியாது. விஜயைத்தான் பொறுப்பானவராக வழக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘கூட்டணிக் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை’
“தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தினால் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. கொடிக்கம்பம் அகற்றும் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வி.சி.க கொடிக் கம்பங்கள்தான்” எனவும் ரவிக்குமார் தெரிவித்தார்.
மேலும், “கூட்டணிக் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது தயங்காத முதலமைச்சர், 41 பேர் மரணத்துக்குக் காரணமான விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவதாகவே பார்க்க முடியும்” என்கிறார் ரவிக்குமார் எம்.பி.
பட மூலாதாரம், ANI
‘அப்படியெல்லாம் செயல்பட முடியாது’ – டி.கே.எஸ்.இளங்கோவன்
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தி.மு.க செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், “விஜயை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் பேசுகிறார். அப்படியெல்லாம் ஓர் அரசாங்கம் நடந்து கொள்ள முடியாது” எனக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நாங்கள் அரசியல் கட்சியை மட்டும் நடத்தவில்லை. ஓர் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசு நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், ” கரூரில் தவெக பரப்புரை நடந்த அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கொடுத்துள்ளோம். ஒரு கட்சிக்கு அனுமதி கொடுத்துவிட்டு மற்ற கட்சிக்கு கொடுக்காவிட்டால் அக்கட்சியைப் பார்த்து நாங்கள் பயந்துவிட்டதாக பரப்புவார்கள்” எனக் கூறுகிறார்.
“கரூர் பரப்புரைக்கு பத்தாயிரம் பேர் கூடுவார்கள் எனக் கூறியதால் அவர்கள் முதலில் கேட்ட இடங்களை மறுத்துவிட்டு வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை” எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், TVK
தி.மு.க – தவெக இடையே ரகசிய உடன்பாடா?
கரூர் பரப்புரை தொடர்பாக அனைத்தையும் விசாரித்த பின்னரே காவல்துறை அனுமதி கொடுத்ததாகக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், “அங்கு கூடிய கூட்டம் ஜெனரேட்டர் அறையை உடைத்தது. மதியம் வரவேண்டிய தவெக தலைவர் இரவு தான் வந்தார். வெயில் காரணமாகவும் தண்ணீர், உணவு இல்லாமலும் மக்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்” என்கிறார்.
” விசாரணை ஆணையம் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஏன் தாமதமாக வந்தார் எனக் கேள்வி எழுப்பி நாங்களாக நடவடிக்கை எடுக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.கவுக்கும் தவெகவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக திருமாவளவன் கூறுவது குறித்துக் கேட்டபோது, ” அதை ஏற்க முடியாது. ‘எங்களின் ஒரே எதிரி தி.மு.க தான்’ என விஜய் பேசி வருகிறார். அவருடன் நாங்கள் எப்படி அனுசரித்து செல்ல முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், டி.கே.எஸ்.இளங்கோவன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு