அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கஸான்ட்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் இந்தப் படத்தின் கதை குறித்த செய்திகள் ஓய்வதாக இல்லை.
‘துணிவு’ திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதற்கு அடுத்து அஜித் நடிக்கப்போகும் படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால், விரைவிலேயே அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
மகிழ் திருமேனி அதற்கு முன்பாக, ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’, ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதில் தடையறத் தாக்க, தடம் போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால் ‘விடாமுயற்சி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் 2023இல் தொடங்கியது. இதற்கு நடுவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தப் படம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை ஒட்டி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்பாக, படம் பொங்கலுக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது அஜித் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
இந்நிலையில்தான், படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகியுள்ளது. படமும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விடாமுயற்சி’ தயாரிப்பில் இருந்தபோது, படத்தின் கதை குறித்து சில செய்திகள் வெளியாகின. அதாவது, இந்தப் படம், 1997இல் ஜொனாதன் மாஸ்டோவ் இயக்கத்தில் வெளியான ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீ-மேக் என்று சிலர் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர்.
இந்தப் படத்திற்கான அனுமதியை படக்குழுவினர் பெறுவது தொடர்பாக சில தகவல்களையும் யுட்யூப் சேனல்களில் சிலர் பேசினர். ஆனால் படக் குழுவோ, தயாரிப்பு நிறுவனமோ இது தொடர்பான எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
விடாமுயற்சி படத்துடன் இணைத்துப் பேசப்படும் பிரேக்டவுன் படத்தின் கதை என்ன?
‘பிரேக்டவுன்’ திரைப்படம் 1997இல் ஜொனாதன் மாஸ்டோவ் இயக்கத்தில் வெளியானது. ஜொனாதன் மாஸ்டோவ், இதற்குப் பிறகு யு-571, டெர்மினேட்டர் 3 ஆகிய படங்களை இயக்கியிருந்தார். ‘பிரேக்டவுன்’ படத்தில் கர்ட் ரஸ்ஸல், கேத்லீன் குவின்லான், ஜே.டி. வால்ஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தின் துவக்கத்தில் நாயகன் ஜெஃப்பும் நாயகி ஆமியும் தங்களது புதிய வானத்தில் பாஸ்டனில் இருந்து சான் டியாகோவுக்கு பயணம் செய்கின்றனர். அப்போது ஒரு டிரக்குடன் ஏற்படவிருந்த விபத்து மயிரிழையில் தவிர்க்கப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து பெட்ரோல் போட ஜெஃப் வாகனத்தை நிறுத்தும்போது, அந்த டிரக்கின் டிரைவர் நாயகனுடன் சண்டையிடுகிறார். அங்கிருந்து ஜெஃப்பும் ஆமியும் புறப்பட்டுச் செல்கின்றனர்.
சிறிது நேரத்திலேயே அவர்களது வண்டி நின்றுவிடுகிறது. ஆமி, சாலையில் வரும் ஒரு பெரிய டிரக்கில் ஏறி, அடுத்ததாக வரும் உணவகத்தில் இருந்து போன் செய்து உதவி கேட்கப் போவதாகச் சொல்லிச் செல்கிறார்.
அதற்குப் பிறகு தனியாக இருக்கும் ஜெஃப், தனது வாகனத்தைப் பரிசோதிக்கும்போதுதான், வேண்டுமென்றே அதில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அதைச் சரிசெய்து ஆமியை தேடிச் செல்கிறார் ஜெஃப்.
ஆமி செல்வதாகக் கூறிய உணவகத்தில் யாரும் அவரைப் பார்க்கவில்லை என்கிறார்கள். அதன் பிறகு தனது மனைவியை ஏற்றிச் சென்ற அந்த டிரக் டிரைவரை ஜெஃப் பார்க்கிறார். ஆனால், தான் யாரையுமே ஏற்றிச் செல்லவில்லை என்று கூறி அதிர வைக்கிறார் அந்த ட்ரெக் டிரைவர்.
அவனது டிரக்கை ஷெரீஃபின் உதவியுடன் சோதித்தாலும் அதில் யாரும் இல்லை. ட்ரெக் டிரைவர் ஏன் பொய் சொல்கிறார், ஆமிக்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
இது ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். ஒன்றரை மணிநேரமே ஓடக்கூடிய இந்தப் படம், 90களின் இறுதியில் அதிகம் பேசப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது.
சமீபத்தில் வெளியான விடாமுயற்சி டிரெய்லரில் கார் பயணத்தின் ஊடாகக் கதை நகர்வதைப் போல் தெரிவது ரசிகர்கள் மத்தியில் சில யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், டிரெய்லரில் டிரக் ஓட்டுநராக அர்ஜுன் வருவது, காவல்துறை அதிகாரி ஒருவர் சாலையில் வாகனத்தைத் தடுத்து நிறுத்துவது, த்ரிஷா சாலையில் ஏதொவொரு வாகனத்தை நிறுத்த சைகை செய்வது போன்ற சில ஷாட்கள் உள்ளன.
இந்தக் காட்சிகள், பிரேக் டவுன் படத்தின் தழுவலாக இது இருக்கலாம் என்ற அனுமானத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வில்லனாக வரும் அர்ஜுன் டிரக்கை நிறுத்திவிட்டுப் பேசுவது போன்ற ஒரு ஷாட் டிரெய்லரில் வருவதும் இந்த அனுமானத்திற்கு வலு சேர்த்திருப்பதாக விவாதிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரேக் டவுன் படத்தில் ஏமி மட்டுமே பெண் கதாபாத்திரம். ஆனால், விடாமுயற்சியில் அதற்கு முரணாக ரெஜினா கசாண்ட்ரா உள்பட வேறு சில பெண் கதாபாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.