இன்று (பிப். 06) வியாழக்கிழமை, அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்களை இந்த பேட்டியில் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி.
விடாமுயற்சி திரைப்படத்துக்கு விளம்பரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையா?
நாங்கள் அஸர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யச் சென்றபோது அங்கு கடுமையான வெயில் காய்ந்துகொண்டிருந்தது. ஆனால், அங்கு படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் வானிலை மொத்தமாக மாறிவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதல்கட்ட படப்பிடிப்பே நிச்சயமின்றி ஆகிவிட்டது. எங்களால் எடுத்து முடிக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே வானிலை மாற ஆரம்பித்துவிட்டது. அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், திரும்பிவிட்டோம்.
அடுத்த 2-3 வாரங்களில் மீண்டும் அங்கு செல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், நாங்கள் திரும்பிச் செல்ல 3 மாதங்கள் வரை ஆகிவிட்டது. இதனால் நடிகர்கள் நமக்காக ஒதுக்கிய தேதிகளிலும் மாற்றங்கள் வந்தன. இப்படி ஒரு நிச்சயமற்ற சூழலில் படத்தின் அப்டேட் என்று எதாவது கொடுத்துவிட்டு, அது பொய்த்துப் போகக் கூடாது என்கிற கவலையும் அச்சமும் இருந்தது. இதுதான் நாங்கள் அப்போதிலிருந்தே பெரிதாக அப்டேட், விளம்பரங்கள் கொடுக்காததற்கு காரணம்.
நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. ட்வீட்டோ, எந்த பதிவோ நான் பகிரவும் மாட்டேன். தயாரிப்பு நிறுவனமும், படப்பிடிப்பு எப்போது முடியும் என்றே தெரியாத நிச்சயமற்ற சூழலில் எதையும் சொல்ல வேண்டாம் என்ற முடிவில் இருந்தனர்.
அஸர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்கிற முடிவு ஏன்?
இந்தப் படம் ஒரு சாலை வழிப் பயணம் போலத்தான். எங்களுக்கு நீண்ட நெடுஞ்சாலை, இரண்டு பக்கமும் வறண்ட பாலைவனம் போன்ற திறந்தவெளி – இப்படி ஒரு அமைப்பில் வெப்பமான, பாலைவனம் போன்ற ஒரு இடம் தேவைப்பட்டது. அபுதாபி பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து முதலில் நாங்கள் அங்குதான் சென்றோம். அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் நல்ல இடங்களும் கிடைத்தன.
ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இன்னும் சில பிரச்னைகளும் இருந்தன. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அஸர்பைஜான் நல்ல மாற்றாக இருக்கும் என்கிற யோசனை தோன்றியது.
அங்கு சென்று பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல இடங்கள் அங்கேயும் இருந்தன. அங்கேயே படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம்.
அஜித் அவர்களுக்கும் அந்தப் பகுதியின் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்தோம். அவருக்கும் பிடித்திருந்தது. எனவே படப்பிடிப்பு நடத்தினோம். ஆரம்பத்தில் வானிலை காரணமாக இடையூறு ஏற்பட்டு தாமதமானாலும், படம் பார்க்கும்போது, அது இந்தக் கதைக்கு சரியான இடம் என்பது உங்களுக்கே தெரியவரும்.
வேறொரு நாட்டில் படப்பிடிப்பு நடந்ததால் படத்தைப் பற்றிய ரகசியங்களை எளிதாகக் காக்க முடிந்தது என கூறலாமா?
ரகசியம் என்று சொல்ல முடியாது. ஆனால் படப்பிடிப்பு எளிதாக முடிந்தது. ஏனென்றால், நான் பெரிதுபடுத்திக் கூறவில்லை, அஜித்தை உலகில் எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பொது இடங்களில், (அவரைக் காண வரும்) பொதுமக்களின் இடையூறு இருந்தால் படப்பிடிப்பு சிக்கலாகிவிடும். இந்தப் படத்தின் கதையில் நிறைய காட்சிகள் நெடுஞ்சாலையில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, அந்தப் பகுதியில் சூரிய வெளிச்சம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியாது. இப்படி ஒரு சூழலில் இது இன்னும் சிக்கலாகிவிடும்.
எனவே, மக்கள் கூட்டத்தின் இடையூறு இல்லாமல், கிடைத்த சூரிய வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடத்த முடிந்தது. அந்த விதத்தில், அஸர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தியது எளிதாக இருந்தது. மற்றபடி ரகசியம் காப்பது நோக்கம் அல்ல. எந்த ஒரு படத்துக்கும் எப்படியான முன்னேற்பாடுகள் இருக்குமோ அப்படித்தான் விடாமுயற்சிக்கும் இருந்தது.
‘முன்தினம் பார்த்தேனே’ எனும் நகைச்சுவை-காதல் படம் உங்கள் முதல் படமாக இருந்தாலும் ‘தடையறத் தாக்க’ ஆக்ஷன் த்ரில்லர் படம் உங்களுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. எனவே அதுதான் உங்கள் அடையாளம் என எடுத்துக்கொண்டீர்களா?
இல்லை, எனக்கு அது ஒரு கட்டுப்பாடாகத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனக்கு எல்லா வகையான திரைப்படங்களையும் எடுக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. ஆக்ஷன் த்ரில்லரில் நான் செய்யக்கூடிய விஷயங்கள் இன்னமும் கூட இருப்பதாகவே நினைக்கிறேன். வரக்கூடிய வாய்ப்புகளும் இதைச் சுற்றியே இருக்கின்றன. எனவே, இன்னும் சில நாட்கள் இந்த வகைப் படங்களில்தான் தொடரவிருக்கிறேன்.
மீண்டும் நான் முதலில் எடுத்தது போன்ற ஒரு காதல் படம், சமூகப் படம், அரசியல், அறிவியல் புனைவு, வாழ்க்கை வரலாறு, வரலாற்றுப் படங்கள் என, பல வகையில் எடுக்க விருப்பம் உள்ளது. அவையெல்லாம் எதிர்காலத்தில் நடக்கும்.
படம் குறித்த எதிர்மறை விஷயங்கள் உங்களை பாதித்ததா?
ஆரம்பத்தில் அத்தகைய விஷயங்கள் என்னை பாதித்தன. படம் தாமதமாக நான் தான் காரணம், நான் மெதுவாக இயக்குகிறேன், இப்படி இல்லாத ஒரு விஷயத்தை, நடக்காத ஒரு விஷயத்தைச் சொல்லி, என் மீது குற்றம் சுமத்தியது என்னை பாதித்தது. என் திரை வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி ஒரு விஷயம் நடக்கிறது. ஏன் படப்பிடிப்பு தாமதமாகிறது என்பது அங்கிருக்கும் படக்குழுவுக்கும் தெரியும்.
ஆனால் அப்படியான அவதூறுகள் வந்துகொண்டே இருந்தன. அப்போது அஜித், சுரேஷ் சந்திரா, என் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் என அனைவரும் அந்த அவதூறுச் செய்திகளைப் புறக்கணித்து, வேலையில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறினர். எல்லா திரைப்படத் தயாரிப்புகளிலும் பிரச்னை இருக்கும். நான் எடுத்த கலகத் தலைவன், தடம் உள்ளிட்ட படங்களிலும் கூட வேறு சில காரணங்களால் பிரச்னைகள் வந்தன.
எனக்கு அதிக அழுத்தம் சேரும்போது என் வேலையில் அதிகமாக ஈடுபட நான் பழகியிருக்கிறேன்.
விடாமுயற்சியைப் பொருத்தவரை, அந்த அவதூறுகள் என்னைக் கலங்கடித்தது உண்மைதான். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு அதை நான் நிதானமாகக் கையாள ஆரம்பித்தேன். ஏனென்றால் இதை நினைத்து வருந்துவதோ, கோபப்படுவதோ கூட என் கவனத்தைச் சிதறவைக்கும். இது தேவையில்லாத பிரச்னை என்கிற பக்குவம் வந்தது. படம் முடிந்து, எல்லாம் தயாரானவுடன், எனக்கு என் தரப்பைப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேட்டிகளில் என் தரப்பை விளக்கினேன்.
படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது ராமாயணக் கதையின் நவீன இணை வடிவம் என்று தோன்றுகிறதே…
நீங்கள் சொன்ன மேற்கோள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதைத்தான் என் குழுவிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். கண்டிப்பாக அப்படிச் சொல்லலாம். நாங்கள் சொன்ன உதாரணமும் ராமாயணம் தான்.
டிரெய்லரில், உறவுகளைப் பற்றிய ஒரு வசனம் வருகிறது. உறவுச் சிக்கல்களையும் இந்தப் படம் அழுத்தமாகப் பேசுமா?
ஆமாம். இது ஒரு சாலைப் பயணம் தொடர்பான படம். இதில் மர்மம், பரபரப்பு, விறுவிறுப்பு எல்லாம் இருந்தாலும்கூட நான் இதை உறவுகளைப் பற்றிய கதையாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். முழுக்க இது அப்படி ஒரு படம் கிடையாது. அதற்கான இடம் படத்தில் குறைவாகவே இருந்தாலும் அதுதான் இந்தக் கதையின் அடிநாதம்.
கற்பனை சினிமா- யதார்த்த சினிமா நீங்கள் எந்த பக்கம்?
இரண்டு தரப்பும் சரியே. யதார்த்தப் படங்கள் எப்படி ஒரு வகையோ அதேபோல ஆக்ஷன் படங்களும் ஒரு தனி வகை. அது காலம் கடந்து இன்னமும் நிற்கிறது. அந்த வகைப் படங்கள் எடுக்கப்படும்போது, அந்த இயக்குநர் அந்த வகைப் படங்களுக்கான இலக்கணத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதைத் தவறாகப் பயன்படுத்தாத வரை நல்லது.
‘விடாமுயற்சி’ – லாஜிக் பிரச்னைகள் இல்லாத படமாக இருக்குமா?
எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு லாஜிக்கலாக, உண்மைக்கு நெருக்கமாக ஒரு படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறோம். அந்த தைரியம் எனக்கு அஜித் அவர்கள் கொடுத்தது. யதார்த்ததுக்குத் தொலைவான காட்சிகளை நான் பொதுவாக யோசிப்பதில்லை.
பல பேரை எதிர்த்து நின்று சண்டை போடும், நாயகனை உயர்த்திக் காட்டும் காட்சிகளில் யதார்த்தம் எங்கிருக்கிறது?
நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டது எனக்கு மகிழ்ச்சி. கூட்டமாக வருபவர்களிடம் ஒரு உளவியல் இருக்கிறது.
அந்தக் கூட்டம் அவர்களுக்கு ஒரு சக்தியைத் தரும். நம்மோடு பலர் இருக்கின்றனர் என்கிற தைரியத்தில் ஒருவரை எதிர்ப்பார்கள். அந்த கூட்டத்தில் ஒருவன் தனியாக சிக்கியிருந்தால் அதே வீரத்தோடு, தைரியத்தோடு அவன் நிற்பானா என்பது சந்தேகமே. ஆனால் கூட்ட மனப்பான்மை தரும் நம்பிக்கை தனி. இவ்வளவு பேர் நிற்கும் போது தனியாக நிற்கும் நாயகன் பயந்து ஓடிவிடுவான் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஓடினாலும் அந்தப் பக்கம் 10 பேர் தடுப்பார்கள்.
ஆனால் நீங்கள் இப்படி ஒரு மூலையில் முடக்கிய ஒருவன், உங்களிடமிருந்து ஓடாமல், உங்களை நோக்கி கையில் அரிவாளுடன், சண்டை போடத் தயாராக ஓடி வந்தால் என்ன ஆகும்?
அங்கிருக்கும் அடியாட்களும் தொழில்முறையில் சண்டை போடுபவர்கள் அல்ல. வீதியில் சண்டையிடுபவர்கள். எனவே, தங்களை நோக்கி ஓடி வருபவன், சாகத் துணிந்தே வருகிறான் என்பது அவர்களுக்குப் புரியும். ஏனென்றால் அதுதான் அவர்களின் தொழில். எனவே நாயகனின் கையால் யாருக்கு முதல் வெட்டு விழும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கும். இந்த ஒரு உளவியலை வைத்து தான் அந்தக் காட்சியை எடுத்தேன். அந்த சண்டைக் காட்சியிலும் ஒரு லாஜிக் இருக்கும்.
மேலும் இந்தச் சம்பவம், இதே அளவு இல்லையென்றாலும், இதைவிட எண்ணிக்கையில் கொஞ்சம் குறைந்த ஒரு கூட்டத்தில் உண்மையாக நடந்திருக்கிறது. அதை வைத்துதான் அந்தக் காட்சி எழுதப்பட்டது.
நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் இணைந்தது எப்படி?
நடிகர் தேர்வு ஒரு கூட்டு முடிவு தான். நடிகர் தேர்வு பற்றிய உரையாடல் வரும்போது அர்ஜுன் தான் அந்தக் கதாபாத்திரத்துக்குச் சரியாக இருப்பார் என்று எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தோன்றியது. அஜித்தும் அதையே சொன்னார். பேசிப் பார்க்கச் சொன்னார். நான் அர்ஜுன் அவர்களை சென்று சந்தித்தேன். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தது. எனவே அவரால் உடனடியாக சம்மதிக்க முடியவில்லை
ஒரு கட்டத்தில் அவர் இந்தப் படத்தில் இல்லை என்றே நினைத்துவிட்டோம்.
வேறு சில நடிகர்களை பார்க்க ஆரம்பித்தோம். அப்போது அஜித்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பேசிய போது அஜித், அர்ஜுன் என்றே வைக்கலாம் என்றார். அந்த அளவுக்கு அர்ஜுனின் இருப்பு எங்களுக்கு முக்கியமாக இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, எங்கள் படப்பிடிப்பின் தாமதம், அவர் நடித்துக் கொண்டிருந்த சில படங்களின் தயாரிப்பு சூழல் ஆகியவற்றால், அவரால் விடாமுயற்சியில் நடிக்க முடிந்தது.
ரெஜினா ஏற்கெனவே என் கலகத் தலைவனில் நடிக்க வேண்டியது. மிகத் திறமையான நடிகை. ஆனால், அவர் எட்ட வேண்டிய வெற்றியை எட்டவில்லை என்று நினைத்தேன். அவரது நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி பேசும்போது முதலில் நாங்கள் வேறு நடிகைகளைத் தான் யோசித்தோம்.
அதில் சில மிகப் பிரபலமான பெயர்களும் உள்ளன. ஆனால் தமிழ் பேசுவது, நடிப்புத் திறன் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர்களை விட ரெஜினாதான் பொருத்தமாக இருந்தார். நான் ரெஜினாவின் பெயரை உத்தேசித்தேன். தயாரிப்பு தரப்பும், அவர் தான் சரியாக இருப்பார் என்று அஜித்தும் கூறினார்கள்.
ஆரவ், நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் கலகத் தலைவன் படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதைவிட ஒப்பீட்டளவில் சிறிய கதாபாத்திரம் இது. அதனால் முதலில் இதில் அவரை நடிக்க வைக்க வேண்டுமா என்று நினைத்தேன். நிறைய பெயர்களை பரிசீலித்தாலும் யாருமே சரியாக இல்லை. எப்படிப் பார்த்தாலும் ஆரவ் தான் சரியாக இருப்பார் என்று தோன்றியது.
மற்ற கதாபாத்திரங்களைப் பொருத்தவரை, ஆரம்பத்தில் இருந்த கதை வடிவம், அரபு நாட்டுப் பகுதிகளில் நடப்பதைப் போல அமைந்திருந்ததால், அதற்குரிய பெயர்களையே கதாபாத்திரங்களுக்குத் தேடித் தேடி வைத்தேன். பல மொழிகளைச் சேர்ந்த தென்னிந்தியர்கள் அதில் இருப்பார்கள். பல பிரபலமான நடிகர்களிடமும் இதுகுறித்துப் பேசி வைத்திருந்தோம். ஆனால் பின்னர் கதையின் சூழல் அஸர்பைஜான் என்று மாறியது. உண்மையில் அங்கு இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே, அந்தப் பெயர்கள் இங்கு பொருத்தமாக இல்லை. போலியாகத் தெரிந்தது. எனவே, அந்த நாட்டின் நடிகர்களையே நடிக்க வைத்துவிட்டோம். அது தற்போது நன்றாகவும் அமைந்துள்ளது.
திரைக்கதையில் அஜித்தின் பங்களிப்பு உண்டா?
அவர் படப்பிடிப்பில் மேம்படுத்துவார். அவர் மிகவும் தாராள மனம் கொண்ட நடிகர். எனவே, அந்தக் காட்சியில் மற்ற நடிகர்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த யோசனைகள் சொல்வார். மிக இயல்பாக அது நடக்கும்.
ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து படம் எடுக்கும் போது, அவருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தம் வந்திருக்குமே? அதை எப்படி சமாளித்தீர்கள்?
அந்த அழுத்தம் என்னிடமிருந்தே வந்தது. ரசிகர்களுக்காக இதைச் செய்யலாமே என்று படப்பிடிப்பில் அஜித்திடம் சென்று பேசுவேன். ஆனால், அது எதுவுமே வேண்டாம் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். நாம் தெளிவான ஒரு படத்தை எடுப்போம் என்பார். அதற்கான சுதந்திரத்தையும் எனக்குத் தந்தார். எனவே, அப்படி ஒரு அழுத்தத்துக்குத் தேவையில்லாமல் போனது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு உணவகத்தில் அஜித் ரசிகர்கள் விளையாட்டாக பாடிய மெட்டையே படத்தின் பின்னணி இசையாக மாற்றியிருக்கிறார் அனிருத், அது யாருடைய யோசனை?
அது அனிருத்தின் யோசனை தான். அவர் ஒரு அதிசயம் என்றே நான் கூறுவேன். அவரை நாம் சரியாக மதிப்பிட்டிருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரது மெட்டுகள் எப்படிச் செல்லும் என்றே நம்மால் யூகிக்க முடியாது. அவர் பாடல்கள் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. விடாமுயற்சியின் பாடல்கள் ஹிட் ஆகிவிட்டன. பின்னணி இசையில் இந்தப் படத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறார் அனிருத்.
நீங்கள் விஜய்க்கு சில கதைகள் யோசித்திருந்ததாகவும், அதில் ஒரு கதையை அவர் தேர்வும் செய்திருந்தார் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் உங்களால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போனதில் வருத்தம் உள்ளதா?
அது இருக்கதானே செய்யும். ஆனால் பழையதை நினைத்து, அது நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிப்பதில் பலனில்லை. விஜய் போன்ற மிகப்பெரிய நடிகருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது கண்டிப்பாக வருத்தம் தான். அதை மறுக்க முடியாது.
விஜய்க்காக எழுதப்பட்ட கதைகளின் நிலை தற்போது என்ன?
கதைகள் இயல்பாக உருவாகும். விஜய் என்று வரும்போது அவருக்காக சில விஷயங்கள் சேர்க்கப்படும். அந்தக் கதைகள் இன்னமும் இருக்கின்றன. அவை கண்டிப்பாக திரைப்படங்களாக மாறும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.
உச்ச நடிகரை வைத்து படம் இயக்கிய பிறகு அதே அளவுக்கு பெரிய படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற ஒரு சிக்கல் இயக்குநர்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது. உங்கள் திட்டம் என்ன?
தொடர்ந்து இதேபோன்ற பெரிய படங்களைத்தான் இயக்க வேண்டும் என்ற வரையறையை நான் எனக்கு வகுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் முன்தினம் பார்த்தேனே போல படம் எடுக்க ஆசை இருக்கிறது. என்னிடம் வளர்ந்து வரும் நாயகர்களுக்கான கதைகள் உள்ளன. நாம் என்ன மாதிரியான இயக்குநராக இருக்க விரும்புகிறோம், எப்படியான படங்களை இயக்க விரும்புகிறோம் என்பதுதான் முக்கியம்.
எனக்குப் பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுக்க விருப்பம் இருக்கிறது. அதே நேரம், அப்படி இல்லாத சிறிய பட்ஜெட் படங்களை இயக்கவும் எனக்கு விருப்பம் உள்ளது. அப்படியான கதைகளும் என்னிடம் உள்ளன. எனது பயணம் ஒரே திசையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் எடுக்க விரும்பும் படங்களை எடுக்க வேண்டும்.
அப்படியான படங்களுக்கென உங்களால் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரிய முடியுமா?
கண்டிப்பாக. தடம் ஆரம்பித்த சமயத்தில் ஒரு பெரிய நடிகரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. லைகா தயாரிப்பில் என்னை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள் என்று அழைத்தார். ஆனால், நான் அருண் விஜய்க்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என்று சொன்னேன். அதை அவரும் புரிந்துகொண்டார். இதை நான் ஏற்கனவே சில பேட்டிகளில் கூறியிருக்கிறேன். எனவே, அந்த வாய்ப்புக்கு நான் ஒப்புக்கொண்டிருந்தால் எனக்குப் பெரிய சம்பளம் கிடைத்திருக்கும். பெரிய பட்ஜெட் கிடைத்திருக்கும். ஆனால் அதை நான் செய்யவில்லை. அப்படியான ஒரு இயக்குநராகத் தான் நான் இருந்திருக்கிறேன். பணம் முக்கியமென்றாலும் அது மட்டுமே எப்போதும் எனக்கு முக்கியமல்ல.
இந்தப் படம் பிரேக் டவுன் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக்கா?
தயாரிப்பு தரப்பில், இதுகுறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதற்கான ஒரு ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட்டிருக்கிறேன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு