அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப். 06) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
விடாமுயற்சி படத்தின் கதை என்ன?
அர்ஜூன் கதாபாத்திரத்தில் வரும் அஜித் மற்றும் கயல் கதாபாத்திரத்தில் வரும் திரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
ஒரு கட்டத்தில் திரிஷா விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கிறார். அதற்கு அஜித் ஒப்புக்கொள்ளாமல் பிரச்னையைச் சரி செய்ய முயல்கிறார். அப்படியான சூழலில், திரிஷா காணாமல் போகிறார்.
அது, கடத்தல்தான் என்பது தெரிய வருகிறது. யார் கடத்திச் சென்றது எனக் குழம்பும் அஜித், எப்படி திரிஷாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.
திருப்பங்களும் ஆக்சன்களும் இணைந்த படமாக விடாமுயற்சியைக் கொடுக்க முயன்றுள்ளார் மகிழ்த்திருமேனி. தடம் படத்தின் மூலம் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ்த்திருமேனி, அதே தாக்கத்தை விடாமுயற்சியில் கொடுத்தாரா என்றால் கலவையான பார்வையையே ஊடக விமர்சனங்கள் முன்வைக்கின்றன.
“கதையாகவும் அதன் உருவாக்கத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் சிந்திப்பதில் பெயர் பெற்றவரான மகிழ், விடாமுயற்சியில் தமிழ் சினிமா என எடுக்கப்பட்டு வருபவை எல்லாம் சினிமாதானா என யோசிக்கும் வகையில் சில மீறல்களை நட்சத்திர நடிகரை வைத்தே செய்திருப்பதாக” தினமணி விமர்சனம் கூறுகிறது.
“பெரிதாகச் சம்பாதிக்கும் அழகான ஆணான அஜித்திடம் சரியான அன்பு கிடைக்கவில்லை என மனைவி திரிஷா இன்னோர் ஆணுடன் தொடர்பு வைத்திருப்பது, அது தெரிய வரும்போது நம்முடைய பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம் என அஜித் போன்ற நடிகர் முன்வருவது போன்ற காட்சிகள் வணிக நோக்குடன் எடுக்கப்பட்ட சினிமாவில் தைரியமாக பேசப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று தினமணி விமர்சனம் பாராட்டியுள்ளது.
“நாயகன் என்றால் கெத்தாக சுற்ற வேண்டும்; அவரின் காலடியில் பெண்கள் கிடக்க வேண்டும் என்கிற காலம் சென்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மகிழ் திருமேனி நாசூக்காக உடைத்திருப்பதாகவும்” தினமணி பாராட்டுகிறது.
‘தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம், ஆனால்…’
பட மூலாதாரம், Lyca Productions
விடாமுயர்ச்சி திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படம் என இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, அனிருத்தின் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் ஆகியவற்றைப் பாராட்டிய இந்தியா டுடே, காருக்குள் வரும் சண்டைக் காட்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது.
அஜர்பைஜான் சாலைகள், அஜித் – ஆரவ் இடையிலான சண்டைக் காட்சிகள் திரையில் பார்க்க நன்றாக இருப்பதாக தினமணி விமர்சனத்திலும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தொழ்ல்நுட்ப ரீதியாக படத்தின் தரம் உயர்வாகத் தெரிந்தாலும், கதையில் சுவாரஸ்யம் இல்லை என விமர்சித்துள்ள தினமணி, எந்தத் திரைக்கதையை நம்பி இந்தப் படத்தை எடுத்தாரோ அதுவே பலவீனமாகவும் மாறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி விமர்சனத்தின்படி, சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் சோர்வளிக்காத எடிட்டிங் ஆறுதல் அளிக்கிறது.
அஜித் நடிப்பு எப்படி?
பட மூலாதாரம், Lyca Productions
படத்தில் அஜித் நடிப்பு அதிகமாக பாராட்டப்படுகிறது. எவ்வித நாயகத்தன்மையும் இல்லாமல் அவர் நடித்து இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.
அஜித்தை மையமாகக் கொண்டே கதை உள்ள நிலையில், பாராட்டத்தக்க நடிப்பை அஜித் வெளிப்படுத்தி இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது. அஜித் மற்றும் அர்ஜூன் வரும் காட்சிகள் மங்காத்தா பட உணர்வைத் தருவதாகவும் இந்தியா டுடே கூறுகிறது.
ஆனால், உச்ச நட்சத்திர நடிகர்கள் கதையம்சமுள்ள படங்களில் நடிப்பது வரவேற்புக்கு உரியதுதான் என்றாலும் விடாமுயற்சியின் கதைக்கு அஜித் ஒன்றவில்லை என்று தினமணி விமர்சித்துள்ளது. சில வசனங்களில் செயற்கைத்தனம் அதிகமாகத் தெரிவதாகவும் தினமணி கூறியுள்ளது.
ஆனால், “ஒரு நடிகராக அஜித்துக்கு இது புதிய பரிமாணம். வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் இதில் அவருக்கு நடிப்பதற்கான இடங்கள் அதிகம். அதை அவர் கச்சிதமாகப் பயன்படுத்தவும் செய்திருக்கிறார்” என்று இந்து தமிழ் திசை பாராட்டியுள்ளது.
திரிஷா வரும் காட்சிகள் வெகு குறைவு என்பதால் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை எனவும் அர்ஜுன் தன்னுடைய பங்கைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் பாராட்டியுள்ள இந்து தமிழ் திசை, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு?
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இழுவையான காட்சிகளைக் குறைத்திருந்தால் ஒரு நேர்த்தியான த்ரில்லர் படமாக வந்திருக்கும் என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
அதோடு அந்த விமர்சனத்தில், “ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் இருந்தும் கொட்டாவி விடவைக்கும் இழுவையான இரண்டாம் பாதியால் ‘விடாமுயற்சி’ வீண்முயற்சி ஆகிவிட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.
“முதல் பாதியில் சில திருப்பங்கள் நிகழ்ந்து கதை நன்றாகச் செல்வதாக நினைத்தால், இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்துவிட்டது” என்று தினமணியும் இரண்டாம் பாதியை விமர்சித்துள்ளது.
விடாமுயற்சி, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படங்களின் தரம் உயர்ந்து வருவதற்கு சான்றாக விளங்குவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியுள்ளது.
அதேநேரம் விடாமுயற்சி, மங்காத்தா அல்லது விஸ்வாசம் அல்ல என்று கூறியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், எல்லா படங்களும் அப்படியிருக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிடுகிறது.