• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பில் அகழ்வு

Byadmin

Sep 29, 2025


மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது.

அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான பக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணியை இன்று முன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்,  தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.

இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin