மீண்டும் கரம் கோர்த்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் – காரணம் என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் மார்ச் 22ம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற பெயரிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் மீண்டும் இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி, கிழக்கு தமிழர்களின் வளர்ச்சியையும், சுபீட்சத்தையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
இந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இணைந்துக்கொண்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு