• Thu. Nov 7th, 2024

24×7 Live News

Apdin News

விடுதிச் சுவர்களின் தாகம் | எஸ். சுடர்நிலா

Byadmin

Nov 4, 2024


 

குளியலறையோரமாய் வரண்டிருந்த சவற்கார நுரையில்
அச்சிடப்பட்ட
வெறுமையின் பிரதிகள்.
விடுதியறையெங்கும் ஒட்டப்பட்டிருந்தன.

தீபாவளி விடுமுறை நாளில்
வாய் பூட்டப்பட்ட கதவுகள்
வேறு வழியின்றி
மௌனத்தின் மொழிகளைக் கடன் வாங்கிப்
பேசிக்கொண்டிருந்தன தமக்கிடையே,

காற்றோடு சண்டையிட்டுப்
பல்கனிக் கம்பியிலிருந்து
தற்கொலை செய்துகொண்ட சிவப்புச்சட்டைக்குப்
புறாக்களைத் தவிர வேறு சாட்சியங்களில்லை..

ஓவென்றழும் மழையை வெருட்டும்
மின்னலுக்கஞ்சி ஒளிந்த மின்விளக்குகள்
தூரத்து அறைத் தோழியின்
தொலைபேசி முனகல்களை
மேலும் அதிகரித்திருந்தன..

தனிமைத் தாகத்தில்
பேரமைதியைச் சுவைக்கும் சுவர்களில்
நேற்றை பற்றிய நினைவுகள்
இருக்க வாய்ப்பில்லை என்ற பெருமூச்சு
மோதி வழிகிறது எனக்குள்..

இருந்தும்,
எனை விழுங்கும் என்நிழலை ஆதரிக்கும்
பெருஞ்சுவரில் தொங்கும்
ஹப்பி பேர்த்தே எழுத்துக்களின்
மென்சிரிப்பில் தான் தீர்ந்திருக்க வேண்டும்
விடுதிச்சுவர்களின் நினைவுப் பெருந்தாகம்.

எஸ். சுடர்நிலா

By admin