பட மூலாதாரம், Gautham Vasudev Menon
தமிழ்த் திரையுலகில் வலுவான காதல் கதைகளைச் சொல்வதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தனி இடமுண்டு.
2001-ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திரைத்துறையில் 25-வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இயக்கம், நடிப்பு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனது பட கதாநாயகிகள் எனப் பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
பாடலுக்கு முக்கியத்துவம்
கேள்வி: உங்கள் படங்களில் பாடலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பல ஆல்பங்கள் ஹிட் ஆகின்றன. அதற்கு காரணம் என்ன?
பதில்: ”எனக்குப் பாடல்கள் மீது காதல் அதிகம். அதற்கு காரணம் அம்மா, அப்பா மற்றும் சிறு வயதில் ரசித்த பாடல்கள். 1960-70களில் வந்த பாடல்கள் அம்மாவுக்கு அத்துப்படி. அந்தப் பாடல்கள் குறித்து என்னிடம் பேசுவார். பாடல்கள் மீதான ரசனை எனக்கும் தொற்றிக்கொண்டது. நாயகன் படம் பார்த்துவிட்டு இன்ஜினியரிங் வேண்டாம், சினிமா பக்கம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
நான் கதை எழுதும்போது பேப்பர்வொர்க்கில் கூட பாடல்கள் வரும் இடத்தை உடனே கடந்து போகமாட்டேன். எந்த மாதிரியான பாடல் வர வேண்டும், யார் பாட வேண்டும், எப்படி படமாக்கப்பட வேண்டும் என நிறைய யோசிப்பேன். என் குழுவுடன் தீவிர விவாதம் நடத்துவேன்.
‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற வாரணம் ஆயிரம் பட பாடல் வரி அவ்வளவு பிரபலம். கதை எழுதும்போதே இந்த மாதிரி வரிகள் வர வேண்டும் என நிறைய யோசித்தேன். அதை ஒரே வரியில் அழகாக கொடுத்தார் கவிஞர் தாமரை. பாடலுக்கு இசை மட்டுமல்ல, வரிகளும் முக்கியம். ‘மல்லிப்பூ’ பாடல் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, 2 நாட்கள் அந்த பாடகியுடன் இருந்து வரிகளை சரி பார்த்தார் தாமரை.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
‘முதல் டியூனிலேயே உருவானது’
கேள்வி: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என நீங்கள் யாருடன் இணைந்தாலும் அந்த பாடல்கள் பேசப்படுகிறதே?
பதில்: ”ஒரு பாடலை உருவாக்குவதற்கு முன்பாக, அந்தப் படத்தில் கதை, சூழல், வரிகள், இசை, குரல் எனப் பல விஷயங்களை நிறைய பேசுகிறோம். என்னுடன் பணியாற்றும்போது அவர்களும் ஒருவிதத்தில் சந்தோஷம் அடைகிறார்கள். அதற்கேற்ப நானும் களம் கொடுக்கிறேன். குறிப்பாக, ‘அஞ்சல’ பாடலை உருவாக்கும்போது ஏகப்பட்ட லேயர், ஏன் டான்ஸ் ஸ்டெப் கூட யோசித்தோம்.
இதுவரை 20 படங்கள் இயக்கி இருக்கிறேன். அதில் நடுநிசி நாய்கள் படத்தில் மட்டும் பாடல் கிடையாது. மற்ற 19 படங்களில் 85 பாடல்கள் இருக்கிறது. அதில் 45 பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கினார். இந்த 85 பாடல்கள் அனைத்தும் முதல் டியூனிலேயே உருவானது என்பது ஆச்சரியமான விஷயம். நானோ, இசையமைப்பாளரோ இன்னொரு டியூன் இருக்கலாமே என யோசித்ததே இல்லை. அந்த வகையில் நான் லக்கி. ஒவ்வொரு பாடலுக்கும் அவ்வளவு உழைப்பு இருக்கிறது. நாளை பாடல் ரிலீஸ் என்றால் முதல்நாள் வரைக்கும் கூட ரஹ்மான் சார் அதை செதுக்குவார். நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அவர் வேலையை விட்டுக்கொடுக்க மாட்டார்.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
கேள்வி: உங்களுக்கு இசையமைப்பாளர் ஆகின்ற ஆசை இருக்கிறதா?
பதில்: ”இசையமைப்பாளர் ஆவது எளிதல்ல. நீ தானே என் பொன்வசந்தம் பாடல்களை லண்டனில் பதிவு செய்தோம். அந்த சமயத்தில் 80 இசைக் கலைஞர்களுடன் இளையராஜா பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் ஒரு வார்த்தை கூட அவர்களுடன் பேசவில்லை. தனது மியூசிக் நோட்டை கொடுத்து அதன் மூலமாக பேசினார். அந்த குழுவில் பல மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களுடன் இசை மொழி மூலமாகவே பேசினார். நாங்கள் ஆச்சரியப்பட்டோம். அந்த மொழியை கற்பது சாதாரணமல்ல.”
கேள்வி: சினிமாவில் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறீர்களா?
பதில்: ”என் படத்தில் பாடல்கள் பலம். ஆனால், பாடல்கள் இல்லாத நடுநிசி நாய்களைக் கொடுத்தேன். அந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரம் சர்ச்சைக்கு உள்ளாகி கடும் விமர்சனங்கள் வந்தது. என் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார்கள். உண்மையில் அந்த கதையின் தன்மை, கதாபாத்திரம் குறித்து தவறாக புரிந்துகொண்டார்கள்.
வேட்டையாடு விளையாடு படத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட கதாபாத்திரங்கள் இருந்தன. பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஜோதிகாவை வேறு மாதிரி காண்பித்தோம். ஏன், காக்க காக்க படத்துக்கு முதலில் வேறு மாதிரியான விமர்சனங்கள் வந்தன. சிலர் புரியவில்லை என்றார்கள். என்னை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா கூட என் பாணியில் இருந்து மாறுபட்டவை. ஆனாலும் அவை என் படங்கள். முழுக்க இசையை மையமாக வைத்து ஒரு படம் இயக்க ஆசை, அதற்கான கதையும் இருக்கிறது.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
நடிகராக அனுபவம் எப்படி?
கேள்வி: திடீரென நடிகராக மாறி படங்களில் நடித்துள்ளீர்கள், அந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
பதில்: ”இனிமேல் நடிகனாக அதிக படங்களில் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட முடிவை எடுத்துவிட்டேன். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும்போது, நடித்துவிட்டு வெளியே வரும்போது ‘நாம் இதுக்காக வரவில்லை. நம் சினிமா கனவு வேறு’ என மனதளவில் நினைக்கிறேன். வெற்றிமாறன் விடுதலையில் நடிக்க அழைத்தபோது மறுக்க முடியவில்லை. வெற்றிமாறன் ஸ்டைல், செட் எப்படி இருக்கும்னு பார்க்கலாம் என அதில் நடித்தேன். அன்வர் ரஷீத்துக்காக டிரான்ஸ் பண்ணினேன். இனிமேல் நடிக்கமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய நடிகன் அல்ல, அந்த துறை சந்தோஷம், பாராட்டைக் கொடுத்தாலும், இனி படம் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தப்போகிறேன். நடிக்க ஆசைப்பட்டு என்னிடம் உதவியாளராக சேர நினைப்பவர்களைச் சேர்க்க மாட்டேன். நடிப்பு வேறு, இயக்கம் வேறு.”
கேள்வி: உங்களிடம் இருந்து ஆன்மிக படம், சரித்திர படங்கள் வர வாய்ப்பு இருக்கிறதா? முதல்மரியாதையை ரீமேக் பண்ண ஆசை என்று முன்பு சொன்னீர்களே?
பதில்: ”ஆமாம், கமல் சாரை வைத்து முதல் மரியாதையை ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. அடுத்து ஒரு இளமையான காதல்கதையை இயக்கப் போகிறேன். ஜெயமோகனிடம் கூட அப்படிப்பட்ட ஒரு கதை இருக்கிறது, பேசி இருக்கிறேன். இன்றைக்கு இளமையான காதல் கதை பண்ண நடிகர்கள் இல்லை. பல ஹீரோக்களின் திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
ஹீரோயின்கள் தனித்துவமாக இருப்பது எப்படி?
கேள்வி: உங்கள் படங்களில் பெண் கதாபாத்திரங்கள், குறிப்பாக ஹீரோயின்கள் தனித்துவமாக இருப்பது எப்படி?
பதில்: ”நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த, பழகியவர்களை என் கதாபாத்திரங்களாக கொண்டு வருகிறேன். குறிப்பாக, என் ஹீரோயின், என் நிஜ வாழ்க்கையுடன் அதிகம் தொடர்பு உடையவர்கள், காக்க காக்க ஜோதிகா கதாபாத்திரம் ஸ்டைல் என் அம்மாவின் பாதிப்பில் உருவானது. வேட்டையாடு விளையாடு ஜோதிகா கதாபாத்திரம் எனக்கு நன்கு தெரிந்தவர்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி, என் மாடி வீட்டில் இருந்தவர். அந்தப் படத்தை அவருக்கு காண்பித்தேன். அழுதுகொண்டே படம் பார்த்தார். அப்போது என் குழுவில் இருந்தவர்கள், இந்த பெண் யார், எதற்காக அழுகிறார்கள் என என்னிடம் கண்களால் கேட்டார்கள். அது தனி அனுபவம். வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி, திருச்சியில் ஆர்இசியில் படித்தபோது சென்னைக்கு வந்த ரயிலில் பார்த்த தோழி கதாபாத்திரம். நாங்கள் போகின்ற ரயிலில் அப்படிப்பட்ட பெண்ணை பார்த்ததே இல்லை என என் நண்பர்கள் கேலி செய்வார்கள். என் படங்களில் வரும் ஹீரோ கதாபாத்திரம் பெரும்பாலும் நான்தான்.”
கேள்வி: ரஜினியுடன் இணைந்து படம் பண்ண வேண்டியது மிஸ் ஆனது எப்படி?
பதில்: ”ஆம், நான் கதை சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை. இயக்குநர் ரஞ்சித்துக்கு அந்த வாய்ப்பு போனது. நான் இத்தனை ஆண்டு சினிமாவில் குறைவான படங்களே இயக்கி இருக்கிறேன். கடந்த சில ஆண்டுளாக துருவநட்சத்திரம் பட வெளியீடு காரணமாக நிறைய வேலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
கேள்வி: ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்க ஆசை இருக்கிறதா?
பதில்: ”இப்போதைக்கு முடியாது. அவர்கள் இரண்டு பேருமே உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களை இணைத்து ஸ்கிரிப்ட் செய்வது சவாலானது.”
கேள்வி: துருவ நட்சத்திரம் எப்போதுதான் வெளியாகும்?
பதில்: ”அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிட்டோம். ஒரே ஒரு விஷயம் மட்டுமே இருக்கிறது. விரைவில் படம் வெளியாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த படம் இயக்கினேன். அந்தப் படத்தை 45 நாளில் முடித்தோம்.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
கேள்வி: சினிமாவால் உங்களுக்கு நேர்ந்த மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: ”என்னை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் சென்றபோது அவர் பிசியாக இருந்ததால், 8 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் நான் தர்புகா சிவாவிடம் சென்றேன். அதில் ஹீரோ தனுஷுக்கு உடன்பாடு இல்லை. கொஞ்சம் அப்செட்டாக இருந்தார். ஆனால், பாடல்கள் ஹிட்டான பின் அவரின் எண்ணம் மாறியது. மீண்டும் சூர்யாவுடனும், கமல்ஹாசனுடனும் படம் பண்ண தயாராக இருக்கிறேன். அவர்களும் வர தயார்.
அதற்கான கதை, சூழ்நிலை அமைய வேண்டும். சிம்பு உடனும் படம் பண்ண தயாராக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருப்பது காதல் கதை. அவர் வேறு மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார். சூர்யாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 25வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு அவர் வந்து, என்னை வாழ்த்தினாரே? மாதவன் கால்ஷீட்டால் தான் என் வாழ்க்கை மாறியது. காக்க காக்க வெற்றியால் கமல் சார் படம் கிடைத்தது. மாற்றங்கள் அழகானவை”
கேள்வி: உங்கள் படங்களில் படத்தொகுப்பு (எடிட்டிங்) வித்தியாசமாக இருக்கும் என்கிற பார்வை உள்ளது. அதன் பின்னணி என்ன?
பதில்: ”எடிட்டர் ஆண்டனியின் பங்கு அதில் முக்கியமானது. காக்க காக்க ஹீரோ அறிமுகமே எடிட்டிங் நிகழ்த்திய மாயாஜாலம் தான். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் அவர் சினிமா, நிஜம் இரண்டையும் பிரித்து காண்பித்திருந்தார்.”
பட மூலாதாரம், Gautham Vasudev Menon
விண்ணைத்தாண்டி வருவாயா
கேள்வி: விண்ணைத்தாண்டி வருவாயா படம், மறு வெளியீட்டில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடுகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ”அந்தப் படம் அவ்வளவு அனுபவங்களை கொடுத்திருக்கிறது. உண்மையில் அந்தப் படத்துக்கு யோசித்த கிளைமாக்ஸ் வேறு. சிம்பு சிரஞ்சீவி படத்தை இயக்குவார். அப்போது சோகமாக இருக்கிறார். காதல் விஷயத்தை கேள்விப்பட்டு, சிரஞ்சீவி ஹெலிகாப்டரில் அவரை அழைத்து வந்து திரிஷாவுடன் சேர்த்து வைக்கிறார் என வைத்திருந்தேன். என் குழு மகிழ்ச்சியாக இருந்தது. 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்தவுடன் எனக்கே அது மோசமாகத் தோன்றியது.
அதன் பின்னர் இப்போதைய கிளைமாக்ஸ்க்கு மாற்றி எழுதினேன். ஆரோமலே பாடல், அந்தப் பயணம், காதல் டோன் கிளைமாக்சை மாற்றியது. 1000 நாட்களுக்கு மேலாக என் படம் ஒரே தியேட்டரில் ஓடுவது மகிழ்ச்சி. இப்போதும் அந்தப் படத்துக்கு என்னிடம் டிக்கெட் கேட்கிறார்கள். நான் அடிக்கடி அங்கே சென்றது இல்லை. இந்த காதலர் தினத்துக்கு அந்தப் படத்தை பார்க்க நினைக்கிறேன்.”
கேள்வி: சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த படங்கள் எவை?
பதில்: ”மலையாளத்தில் நிவின் பாலி நடித்த சர்வம் மாயா பார்த்தேன், மிகவும் வியந்தேன். மாரி செல்வராஜின் பைசன் பார்த்தவிட்டு, மனம் திறந்து பாராட்டி வாட்ஸ்ஆப்பில் நீண்ட செய்தி அனுப்பினேன். இசையமைப்பாளர் நிவாசையும் பாராட்டினேன். மணி ரத்னம், பாரதி ராஜா படங்களை அடிக்கடி பார்க்கிறேன். வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பலமுறை பார்த்து ரசிக்கிறேன். சத்யா, குணா பிடித்தமான படங்கள்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு