பட மூலாதாரம், NASA
கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூமியிலிருந்து இருவரும் புறப்பட்டனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தைப் பரிசோதிப்பதற்காக எட்டு நாள் பணிக்காகச் சென்றனர்.
ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். நாசாவின் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹாகும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
விண்வெளி நிலைய செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய தருணங்கள்
முன்னதாகவே வீடு திரும்ப விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்டதற்கு, குறுகிய காலத்திற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகவே வந்ததாக புட்ச் வில்மோர் கூறினார்.
மேலும் மனித விண்வெளி பயணம் “எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டமிடலை அடிப்படையாக கொண்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
கீழே உள்ள குடும்பங்களுக்கு இது ஒரு “ரோலர்கோஸ்டர்” அனுபவமாக இருந்ததாகவும், ஏனெனில் தாங்கள் எப்போது திரும்பி வருவோம் என்பது அவர்களுக்கு தெரியாது, இதுதான் கடினமான பகுதி என்றும் கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
முரண்பாடுகளைக் கையாள்வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது எதிர்கால பயணங்களை எளிதாக்கும் என்று நம்புகிறோம் என்றும் விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.
வயதுக்கு ஏற்ப விண்வெளிப் பயணம் கடினமாகிறதா?
பட மூலாதாரம், NASA/BOEING
அந்த குழுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, வயதாகும்போது விண்கலனின் ஏதேனும் அம்சங்கள் கடினமாகிவிடுமா என்பதுதான்.
விண்வெளியில் இருக்கும் போது வலிகள் போய்விடுகின்றன என்று பட்ச் வில்மோர் கூறினார். சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் தூங்குவது உண்மையில் எளிதானது என்று கூறினார்.
இந்தப் பணியின் மிக உற்சாகமான பகுதி என்னவென்று கேட்கப்பட்டபோது, விண்வெளி உடையில் உள்ள மற்றொரு நபரை, விண்கலத்தின் நுழைவாயிலைத் திறந்து உள்ளே கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அதுவே பெருமையான தருணம் என்றும் வில் மோர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, குழு ஒன்பதை பூமிக்கு அழைத்து வர ஆவலுடன் இருப்பதாக ஹேக் கூறுகிறார்.
விண்வெளியைப் பார்ப்பது மிகவும் உற்சாகமான விஷயம் என்று சுனிதா கூறினார். “சூரியன் உண்மையில் சுறுசுறுப்பாக உள்ளது. பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.” என்றும் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்.
பட மூலாதாரம், EPA
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதாகத் தெரிகிறது என்று ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதன் நிலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
“விண்வெளி நிலையத்தில் எவ்வளவு அறிவியல் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
“தற்போது நாம் நமது உச்சத்தில் இருக்கின்றோம் என்று நான் கூறுவேன்,” என்றார் சுனிதா.
மேலும், “ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2030 வரை இது செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதுவே மிகச் சரியானது என நினைக்கின்றேன்.” என்றும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.
வில்மோரிடம் அவரது ஒன்பது மாத விண்வெளி அனுபவத்தில் முக்கியமான பாடம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போது, அவரது நம்பிக்கை மிக முக்கியமாக இருந்ததாக கூறினார்.
அடுத்து நடக்கப்போவது என்ன ?
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பதில் அளித்த ஹேக், “சில குறுகிய நாட்களில்” க்ரூ 10 விண்வெளி வீரர்கள் வருவார்கள் என்றும், “ஒரு வெற்றிகரமான, நீண்ட காலப் பணியின் முடிவில்” இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன், க்ரூ 10 விண்வெளி வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என்றார்
ஆனால், இவர்கள் பூமி திரும்பும் நாள் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
“மார்ச் 12க்கு முன்பாக இல்லை” என்றாலும் மாற்று விண்கலமான ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
விண்வெளி வீரர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது இதுவே முதல் முறை அல்ல.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து அவர்கள் பல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் இவர்கள் இருவரையும் “கிட்டத்தட்ட விண்வெளியில் கைவிட்டதாக” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
வழக்கத்துக்கு மாறாக நீண்ட விண்வெளிப் பயணம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 272 நாட்கள் இருந்துள்ளனர்.
பெரும்பாலான விண்வெளி பயணங்கள் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும்.
ஆனால் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் தாங்கள் அங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், அனைத்து விண்வெளி வீரர்களும் பங்களிக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
சுனிதா வில்லியம்ஸ் 1998 இல் நாசாவால் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் சுனிதா என்று நாசா கூறுகிறது.
மேலும் விண்வெளி நிலையத்திற்கான ரஷ்யாவின் பங்களிப்பு குறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து மாஸ்கோவில் பணியாற்றினார் சுனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், அவர் ரோபோடிக்ஸ் பிரிவில் பணிபுரியத் தொடங்கினார். சுனிதா வில்லியம்ஸ் தனது முந்தைய இரண்டு பயணங்களின் போது மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்தார்.
மேலும் 50 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்கள் என்ற அளவுடன் விண்வெளியில் அதிக நேரம் நடந்தவர் என்ற பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
வில்மோர் புட்ச் இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் விண்வெளியில் 178 நாட்கள் கழித்துள்ளார் என்று நாசா கூறுகிறது, இருப்பினும் அவரது சமீபத்திய பயணம் இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம்.
மேலும், ஜூலை 2000 இல் நாசாவால் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை கேப்டன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு