பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சுபான்ஷு சுக்லா,
இந்த இரு பெயர்களும் நினைவுக்கு வந்ததும் வானத்தை தொட வேண்டும் என்ற ஆசையும் நிஜமாகத் தோன்றுகிறது.
அதே வேளையில், “நாமும் விண்வெளிக்குச் செல்ல முடியுமா?” என்ற கேள்வியும் உடன் எழுவது இயல்பு தான்.
எந்தவொரு மனித விண்வெளிப் பயணத்திலும் விண்வெளி வீரர்கள் மிக முக்கியமான துருப்புச் சீட்டாக இருக்கிறார்கள்.
சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையின் காக்பிட்டிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையம் வரையிலான பயணத்தை மேற்கொண்டார்.
மறுபுறம், சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒரு கடற்படை பைலட்டாகத் தொடங்கியது, அதுவே, அவரை நாசாவிற்கும், பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் அழைத்துச் சென்றது.
இயல்பாகவே, விண்வெளிக்கான பாதை ராணுவத்தின் வழியாக மட்டுமே செல்கிறதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
ஒரு சாமானிய மனிதர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற முடியுமா?
‘கரியர் கனெக்ட்’ தொடரின் இந்தக் கட்டுரையில் இந்தியாவில் விண்வெளி வீரர் ஆவது எப்படி, அதற்கு என்ன படிக்க வேண்டும், என்ன மாதிரியான தயாரிப்புகள் தேவை? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளி வீரர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பட மூலாதாரம், Reuters
விண்வெளி வீரர் ஆவது எப்படி என்று நாம் தெரிந்துகொள்வதற்கு முன், அவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லவும், அங்கு வேலை செய்யவும் மற்றும் விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக முடிக்கவும் சிறப்பாகப் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொள்கிறார்கள். அத்துடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் தொடர்பான மிக முக்கியமான பணிகளைச் செய்கிறார்கள்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி தொடர்பான கல்வி மற்றும் தகவல்களை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 237 பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அடங்கும்.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்துப் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தப் பயிற்சியாளர்களிடம் பதிவு செய்துகொள்ளலாம்.
இவர்களில் ஒருவரான மணிஷ் புரோஹித், நிம்பஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். இதற்கு முன்பு இஸ்ரோவில் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார்.
மென்பொறியாளர் அல்லது மருத்துவரைப் போன்று விண்வெளி வீரர் என்பதும் ஒரு தொழில் தான் என்கிறார் மணிஷ் புரோஹித். ‘அஸ்ட்ரோநாட்’ (Astronaut) என்ற சொல் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் விண்வெளி வீரர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சோவியத் ஒன்றியம், அதற்குப் பின்னர் ரஷ்ய விண்வெளிப் பயணிகள் ‘காஸ்மோநாட்’ (Cosmonaut) என்று அழைக்கப்படுகிறார்கள். சீனாவின் விண்வெளி வீரர்கள் ‘டைகோநாட்’ (Taikonaut) என்றும், இந்தியாவின் விண்வெளிப் வீரர்கள் ‘ககன்யாத்ரி’ (Gaganyatri) என்றும் அழைக்கப்படுகிறார்கள்” என்றார்.
இப்போது கேள்வி – அஸ்ட்ரோநாட், காஸ்மோநாட், டைகோநாட் அல்லது ககன்யாத்ரி ஆகிய இவர்களின் வேலை என்ன என்பதுதான்.
கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ‘சயஸ்ட்ரா’ (Sciastra) உடன் பணியாற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி யஷிகா பண்டிதா, விண்வெளி வீரர்களின் பொறுப்புகள் மாறுபடும் என்கிறார்.
“சிலர் சோதனைகள் செய்தல், செயற்கைக்கோள்களை ஏவுதல் மற்றும் விண்வெளி ஓடம்-கருவிகளைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். விண்வெளி ஓடத்தை இயக்கும் பைலட்கள் ‘அஸ்ட்ரோநாட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.” என்று அவர் குறிப்பிடுகிறார்.
விண்வெளி வீரர் பணியை ஒரு முழு நேர வேலையாகக் குறிப்பிடுகிறார் மணிஷ் புரோஹித். இவர்கள் விண்வெளியில் இல்லாதபோதும் விண்வெளி வீரர்களாகவே இருப்பார்கள் என்கிறார் அவர்.
“இதை ஒரு போர் விமானி இருப்பதைப் போலப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் போர் நடப்பதில்லை. அப்படியென்றால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்களைத் தாங்களே பயிற்றுவித்துக் கொள்கிறார்கள், தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தரைவழி ஆதரவுப் பணியாளர்களைச் சிறந்தவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
விண்வெளி வீரர் ஆவது எப்படி?
பட மூலாதாரம், EPA
இந்தியா 2027-ஆம் ஆண்டிற்குள் தனது முதல் மனித விண்வெளிப் பயணமான ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. இதற்காக நான்கு பைலட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுபான்ஷு சுக்லாவும் ஒருவர்.
இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் மற்றும் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகிய மற்ற மூவரும் இந்திய விமானப்படை அதிகாரிகளே.
இவர்கள் கடினமான உடல் மற்றும் மன ரீதியான சோதனைகளுக்குப் பிறகு பல விமானப்படை பைலட்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் ரஷ்யாவில் 13 மாதங்கள் கடினமான பயிற்சியைப் பெற்றனர்.
ஆனால் ஒரு சாமானிய மனிதர் விண்வெளி வீரர் ஆக விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
இதற்கென்று எந்தவொரு குறிப்பிட்ட பாடமோ, திட்டமோ அல்லது பயிற்சியோ கிடையாது. இருப்பினும், விண்வெளி வீரராவதற்கு ஒருவர் பின்பற்ற வேண்டிய சில படிநிலைகளும் உள்ளன.
“10-ஆம் வகுப்பு முடிவுகள் வந்த உடனே இது தொடங்கிவிடுகிறது. 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுப்பது தான் முதல் படி, அதில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் முக்கிய பாடங்களாக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு இளநிலைப் பட்டமும் இதே துறையில் செய்வது அவசியம்,” என்கிறார் மணிஷ் புரோஹித்.
ஆனால் விண்வெளி வீரராவதற்கு ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து முதுநிலை அல்லது முனைவர் பட்டமும் பெறுவது அவசியம். குறிப்பாக கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் அல்லது ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் போன்ற பாடங்களில் பட்டம் பெறவேண்டும்.
இதற்குப் பிறகு இஸ்ரோ அல்லது ஏதேனும் ஒரு விண்வெளி முகமையின் சார்பாக வெளியிடப்படும் காலிப் பணியிடங்கள் தொடர்பான தேர்வுகளை எழுத வேண்டும்.
நாசாவும் இதையேதான் செய்கிறது, அது விண்வெளி வீரர்களின் குழுவிற்காக விண்ணப்பங்களைக் கோருகிறது. இதன் கீழ் தேவையான தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள் நாசாவின் அங்கமாக முடியும்.
மருத்துவத் தகுதி முக்கியமானது
பட மூலாதாரம், X/@AstroPeggy
விண்வெளி வீரராக விரும்புவோருக்கு உடல் தகுதி மிக முக்கியமானது.
இதனால்தான் ராணுவ பைலட்களுக்குத் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மணிஷ் புரோஹித் கூறுகிறார்.
“ராணுவ பைலட்களுக்குக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. வெவ்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்குவது எளிதல்ல. எந்த நேரத்திலும் மாறக்கூடிய சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது, ஆபத்தான நேரங்களிலும் மனதை எப்படி அமைதியாக வைத்திருப்பது என்பது அவர்களுக்குத் தெரியும்.”
“தற்போது நமது எல்லா விண்வெளி வீரர்களும் போர் விமானிகளாக இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் உடல் தகுதியைப் பொருத்தவரை இவர்கள் உலகில் மிகச் சிறந்தவர்களில் அடங்குவர். அவர்களின் புற அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறன் மிக அதிகமாக உள்ளது. மன ரீதியாக அவர்கள் வலிமையானவர்களாக மாறிவிட்டார்கள். அவர்களை யாராலும் உடைக்க முடியாது.”
“போர் விமானிகளாக இருப்பதாலேயே, அதிக ஆபத்து மற்றும் அதிக மன அழுத்தம் நிறைந்த வேலை என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு முடிவை எப்படி எடுக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த மனிதர்களுக்கு அதிவேகத்தில் விமானத்தை ஓட்டத் தெரியும். ஒரு நொடியில் வேகம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ இவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது, அல்லது ஜெட் விமானம் சமநிலை இழந்து கீழே விழத் தொடங்கினாலும் இவர்களுக்குச் சமாளிக்கத் தெரியும். எட்டு-ஒன்பது லட்சம் ட்ரில்லியன் கிலோ எடையுள்ள ராக்கெட் பறக்கிறது, கீழே நெருப்பு இருக்கிறது. விண்கலம் மிக வேகமாகச் செல்கிறது. இதனைக் கையாளுவதற்கு இதுவரை போர் விமானிகளே சரியான தேர்வாகக் கருதப்படுகிறார்கள்.”
“யாராவது ஒருவருக்குத் திடீரென்று இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் அல்லது இது போன்ற வேறு பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் தாங்கும் திறன் பரிசோதிக்கப்படுகிறது, அதாவது ஒருவர் எவ்வளவு பொறுத்துக்கொள்ள முடியும் மற்றும் அந்த நேரத்தில் அவர்கள் எவ்வளவு சாதாரணமாக நடந்துகொள்ள முடியும் என்பது பார்க்கப்படுகிறது.”
இஸ்ரோவில் சேர என்ன தேவை?
பட மூலாதாரம், Getty Images
முதலாவதாக இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து பொறியியல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முனைவர் அல்லது முதுநிலைப் பட்டம் இருக்க வேண்டும்.
விமானம் ஓட்டிய அனுபவம் இருப்பதால் இந்திய விமானப்படை விமானிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்பவர்கள் விண்வெளி வீரராக (Astronaut) முடியும். ஆனால், இஸ்ரோ உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உங்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இந்தப் பயிற்சி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போது இந்தியாவில் இது போன்ற ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. ஆனால் ககன்யான் ஏவப்பட்ட பிறகு இது நடக்கலாம். ஆனால் உலகளாவிய நிலவரப்படி, விண்வெளி வீரராவதற்கு வயது 35 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
மணிஷ் புரோஹித்தின் கூற்றுப்படி, உயரத்திற்கும் ஒரு வரம்பு உள்ளது. கண் பார்வைத் திறனும் நன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் கனவு நாசா (NASA) என்றால்…
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க விண்வெளி முகமையான நாசாவில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே விண்வெளி வீரர்களாக முடியும்.
யஷிகா பண்டிதாவின் கூற்றுப்படி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம் STEM) துறையில் பட்டம் தேவைப்படுகிறது.
ஆனால் ஒரு இந்தியர் நாசாவில் சேர விரும்பினால் என்ன செய்வது?
“நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் அல்லது ஐரோப்பிய விண்வெளி முகமை… இவை அனைத்தும் உத்தி ரீதியான கட்டமைப்புகள். இங்கு பணிபுரிபவர்கள் நாட்டின் மிக முக்கியமான தொழில்நுட்பத்தில் பணிபுரிகிறார்கள். நான் இஸ்ரோவில் பணிபுரிகிறேன் மற்றும் நான் ஒரு இந்தியர் என்றால், நான் ஒரு அமெரிக்கரை வந்து இஸ்ரோவில் பணிபுரிய அனுமதிப்பேனா? ஆம், யாராவது இந்திய வம்சாவளி அமெரிக்கராக இருந்தால், அவர்கள் நாசாவில் பணிபுரிவது சாதாரணமான விஷயம்.” என்கிறார் யஷிகா பண்டிதா.
இவை அனைத்தையும் தவிர, எந்த ஒரு நாட்டிலும் விண்வெளி வீரராவதற்குத் தேவையான திறன்கள் தலைமைத்துவம், குழுவாக பணியாற்றுவது மற்றும் தகவல் தொடர்பு ஆகும்.
இறுதியாக, ஒரு விண்வெளி வீரரின் சம்பளம் எவ்வளவு?
இதனைப் பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் ஊதியம் தொடர்பான தரவுகளை வைத்திருக்கும் மற்றும் அதனை ஆய்வு செய்யும் பொருளாதார ஆய்வு நிறுவனத்தின்படி, இந்தியாவில் ஒரு விண்வெளி வீரருக்கு சராசரியாக ஒவ்வொரு மாதமும் 90 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் சம்பளம் கிடைக்கிறது. இது தவிர போனஸ் மற்றும் பிற வசதிகளும் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு