• Sun. Aug 31st, 2025

24×7 Live News

Apdin News

விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி | High Court dismisses case seeking action against petrol pump set up in violation of rules

Byadmin

Aug 30, 2025


சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நடத்திய ஆய்வுகளில், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறானவை என தெரியவந்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு சில புகைப்படங்களைத் தவிர, எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், புகைப்படங்களை ஆதாரங்களாக கருத முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது நல வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது என அவ்வப்போதைக்கு எச்சரிக்கைகள் விடுத்தும், எந்த அடிப்படையும் இல்லாமல், எதிர்மனுதாரர்களை துன்புறுத்தும் நோக்கில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அபராதத் தொகையை புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



By admin