0
வின்ட்சர் கோட்டையில் டிரம்ப்-எப்ஸ்டீன் ஆகியோரின் புகைப்படம் திட்டமிட்டு காண்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்திற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்திற்கு முன்னதாக மேற்படி வின்ட்சர் கோட்டையில் டிரம்ப்-எப்ஸ்டீன் ஆகியோரின் புகைப்படம் மற்றும் அவர்களைப் பற்றிய மேற்கோள்கள், தலைப்புச் செய்திகள் ஆகியவை ஒளிரச் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
தீங்கிழைக்கும் தகவல்தொடர்புகள் மற்றும் பொதுத் தொந்தரவு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 4 ஆண்களும் கைது செய்யப்பட்டதாக தேம்ஸ் வேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் டிசெம்பர் 12 ஆம் திகதி வரை நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை தொடர்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் கிழக்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபரும், இலண்டனைச் சேர்ந்த 36 மற்றும் 50 வயதுடைய இருவர் மற்றும் கென்ட் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரும் அடங்குவர்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தில் அரச முடிசூட்டு விழாவுக்கு பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை
வின்ட்சர் கோட்டையின் வெளிப்புறச் சுவரில் திட்டமிட்டு காண்பிக்கப்பட்ட படங்களில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் 2019இல் சிறையில் இறந்த பிரபல நிதி மோசடியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இவர்களது உறவு குறித்த மேற்கோள்கள் மற்றும் தலைப்புச் செய்திகளும் படங்களுடன் காண்பிக்கப்பட்டன.
புதன்கிழமை காலை, வின்ட்சரில் ஒரு வேன், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனின் படத்துடன் “இங்கிலாந்திற்கு வரவேற்கிறோம், டொனால்ட்” என்ற செய்தியையும் காட்சிப்படுத்தியது.
டிரம்ப், 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டிருந்தார். ஆனால், அவர் குழந்தைப் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான எந்தவொரு தவறான செயலிலும் அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்படவில்லை.