படக்குறிப்பு, மருத்துவர்கள் தாமஸ் பீட்டர், திதியா கே. தாமஸ் மற்றும் மனூப்கட்டுரை தகவல்
எழுதியவர், சிராஜ்
பதவி, பிபிசி தமிழ்
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள உதயம்பேரூர் எனும் பகுதியில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு நடந்த ஒரு சாலை விபத்தும், அந்த விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு 3 மருத்துவர்கள் அதே இடத்தில் அளித்த அவசர சிகிச்சையும் நாடு முழுவதும் கவனத்தைப் பெற்றது.
அந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த லினு என்ற நபர், மூச்சு விட சிரமப்பட்ட சூழலில் சாலையில் கிடந்துள்ளார். அப்போது, அந்த வழியாக பயணித்த மருத்துவர்கள் மனூப், தாமஸ் பீட்டர் மற்றும் திதியா கே. தாமஸ், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியோடு, லினுவுக்கு ‘கிரிகோதைரோடமி’ (Cricothyrotomy) என்ற அவசரகால சிகிச்சையை அளித்தனர்.
“பொதுவாக போர் சூழல்களைத் தவிர்த்து, கிரிகோதைரோடமி சிகிச்சையை இப்படி பொதுவெளியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், லினு மூச்சு விட முடியாமல் திணறுவதைக் கண்டேன். அப்படியே விட்டால், அவர் அங்கேயே உயிரிழந்திருக்கக்கூடும். எனவே, அந்தச் சிகிச்சையை சாலையில், முறையாகவே செய்தோம். அது பலனும் அளித்தது. ஆனால், அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லினு, புதன்கிழமை இரவு (டிசம்பர் 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என பிபிசியிடம் கூறினார் மருத்துவர் மனூப்.
இருப்பினும், எந்தவித உபகரணங்களும் இன்றி, ஒரு ரேஸர் பிளேடு (Raser Blade) மற்றும் 3 ஸ்டராக்களைக் (Straw) கொண்டு, சாலையில் இவர்கள் செய்த அவசர சிகிச்சை பலராலும் பாராட்டப்பட்டது.
நடந்தது என்ன?
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதி
“ஞாயிற்றுக்கிழமை இரவு நானும் என் மனைவியும் என் அம்மா வீட்டில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். 8.30 மணிக்கு உதயம்பேரூர் வந்தபோது, சாலையில் ஏதோ விபத்து நடந்திருப்பது தெரிந்தது. இறங்கி பார்த்தபோது, ஒரு நபர், படுகாயமடைந்த நபரின் தலையை சரியான முறையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் பிடித்திருந்த முறையைப் பார்த்ததும் அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம் என யூகித்து அருகில் சென்றேன்” என விவரித்தார் மருத்துவர் தாமஸ் பீட்டர்.
தாமஸ் பீட்டரும், அவரது மனைவி திதியா கே. தாமஸும், கொச்சியின் கடவந்த்ராவில் உள்ள இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அதிகாரிகளாக (RMO) பணியாற்றி வருகின்றனர்.
படுகாயமடைந்த லினுவின் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர், மருத்துவர் மனூப்.
டிசம்பர் 21ஆம் தேதி இரவு, உதயம்பேரூரில் லினு வந்த இருசக்கர வாகனமும், மனு, விபின் என்ற இருவர் வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் மூவரும் தூக்கி எறியப்பட்டனர்.
“விபின் என்பவருக்கு பெரிய காயங்கள் இல்லை. மனுவுக்கு சுயநினைவு இருந்தாலும், முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வரும்வரை அவரை அசையாமல் படுத்திருக்குமாறு கூறினேன். ஆனால், சுயநினைவின்றி கிடந்த லினுவின் முகம் முழுவதும் ரத்தத்தால் நனைத்திருந்தது.” என்கிறார் தாமஸ்.
தொடர்ந்து பேசிய தாமஸ், “மருத்துவர் மனூப் எங்களிடம் லினுவின் ஆபத்தான நிலையை விளக்கினார். லினுவின் முகத்திலும், முதுகெலும்பிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன, பற்கள் உடைந்திருந்தன. அவர் மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார், காற்றுப் பாதை அடைந்திருந்தது. ஆக்சிஜன் இல்லையென்றால், மூளையில் காயம் அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் எடுத்த வேறு சில முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.”
“ஆம்புலன்ஸ் வருவதும் தாமதமாகிக் கொண்டிருந்தது. உடனடியாக அவருக்கு கிரிகோதைரோடமி செய்ய முடிவு செய்தோம். அங்கிருந்த காவல்துறை, உள்ளூர் மக்களிடம் நிலையை விளக்கினோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஒரு ரேஸர் பிளேடும் இரண்டு ஸ்ட்ராக்களும் கொண்டுவரப்பட்டன. 10 முதல் 15 பேர் தங்கள் கைபேசி மூலம் அளித்த ஃபிளாஷ் வெளிச்சம் எங்களுக்கு உதவியது. கிரிகோதைரோடமி சிகிச்சையை மருத்துவர் மனூப் மேற்கொண்டார். நாங்கள் தேவையான உதவிகளை வழங்கினோம்” என்கிறார்.
கிரிகோதைரோடமி என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கிரிகோதைரோடமி என்பது ஒரு முக்கியமான அவசரகால செயல்முறையாகும். மூச்சுத் திணறல் ஏற்படும் சூழலில் மற்ற வழக்கமான முறைகள் பயனற்றதாக இருக்கும்போது காற்றுப்பாதை அடைப்பை சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்காவின் தேசிய நல கழகம் தெரிவிக்கிறது.
மருத்துவ நிபுணர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய இந்த செயல்முறையில் கிரிகோதைராய்டு சவ்வில் ஒரு கீறல் இடப்பட்டு, அதன் வழியாக மூச்சுக்குழாயில் ஒரு குழாய் (Tube) செருகப்படும். அவசர காலங்களில் மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சையை (Tracheostomy) விட இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இதற்கு குறைந்த உபகரணங்கள் மற்றும் நேரம் தேவைப்படுகிறது.
“லினுவின் கழுத்தில் ரேஸர் பிளேடு மூலம் 3 அங்குலத்திற்கு கீறல் இடப்பட்டு, அதில் ஒரு ஸ்ட்ரா பொருத்தி, காற்றை ஊதினேன். அது வேலை செய்தது. லினுவின் சுவாசத்தில் மாற்றம் தெரிந்தது. காற்றுப்பாதை அடைப்பு சரிசெய்யப்பட்டது.” என்கிறார் மருத்துவர் மனூப்.
ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் ஏற்றப்பட்ட லினு, 15 நிமிடத்தில் அருகிலிருந்த வைட்டிலா நகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார் மனூப்.
“அங்கிருந்த மருத்துவரிடம் அனைத்தையும் விளக்கினேன். ஆனால், மருத்துவமனையை அடைந்த சில நிமிடங்களில் லினுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.” என்று மருத்துவர் மனூப் கூறுகிறார்.
அதேபோல, முதுகெலும்பில் பலத்த காயமடைந்த மனுவுடன் தாமஸும், அவரது மனைவி திதியாவும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றனர்.
பாராட்டுகளும், எதிர்மறை கருத்துகளும்
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, காவல்துறை, பொதுமக்கள் உட்பட பலரும் உதவியதால் தான் இது சாத்தியமானது என்கிறார் மருத்துவர் தாமஸ்.
“இது நாங்கள் மூன்று பேர் மட்டுமே செய்த ஒரு விஷயமல்ல. காவல்துறை, பொதுமக்கள் உட்பட பலரும் உதவியதால் தான் இது சாத்தியமானது. குறிப்பாக, நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, லினுவுக்கு வழங்கிய சிகிச்சையை அங்கிருந்த மக்கள் யாரும் காணொளியாகப் பதிவு செய்யவில்லை.” என்கிறார் மருத்துவர் தாமஸ்.
இந்த மூன்று மருத்துவர்களின் செயலைப் பாராட்டிய இந்திய மருத்துவ சங்கம் (IMA), “இந்த மருத்துவர்களின் மன உறுதியும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பும், அடுத்து வரும் அனைத்து இளம் மருத்துவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்” என்று கூறியது.
“நாங்கள் பாராட்டுகளுக்காக அல்லது ஊடக வெளிச்சத்துக்காக இதைச் செய்யவில்லை. அந்த நொடியில் என்ன தேவையோ அதைச் செய்தோம். லினுவின் உயிரைக் காப்பற்றுவதே எங்கள் மூவரின் நோக்கமாக இருந்தது. ஆனால், புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி லினு இறந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது” என்கிறார் தாமஸ்.
ஆனால் லினு இறந்தபிறகு, தாங்கள் கொடுத்த அவசர சிகிச்சை குறித்து இணையத்தில் எதிர்மறையான கருத்துகள் எழுவதாகக் கூறுகிறார் மருத்துவர் மனூப்.
“அன்று நாங்கள் லினுவுக்கு கிரிகோதைரோடமி சிகிச்சை அளிக்கும்போது, ரெஸ்பிரெடரி அரெஸ்ட் (Respiratory arrest- உடலுக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபடும் நிலை) ஏற்பட்டு அவர் உயிரிழந்திருந்தால், அங்கு இருந்த மக்கள் எங்களுக்கு எதிராக திரும்பியிருப்பார்கள்.”
“பின்விளைவுகள் குறித்து அறிந்தே, லினுவைக் காப்பாற்ற அந்தச் சிகிச்சையை செய்தோம். கடந்த இரு நாட்களாக மருத்துவமனையில் இருந்த லினுவைக் குறித்து நான் விசாரித்துக் கொண்டே தான் இருந்தேன்” என்கிறார் மனூப்.
தலையில் ரத்தக்கசிவு, மாரடைப்பு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பு காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 24) லினுவின் உயிர் பிரிந்ததாகக் கூறுகிறார் மனூப்.
“மீண்டும் இதுபோன்ற சூழலில் யாரேனும் சிக்கிக்கொண்டால் நிச்சயம் நான் உதவுவேன். ஆனால், இணையத்தில் எளிதாக முன்முடிவுகளோடு பேசிவிடுகிறார்கள். அதைக் கடந்து வருவது தான் கடினமாக உள்ளது” என்கிறார் அவர்.