மத்திய அரசு, 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள் வேலை எனப் பொதுவாக அறியப்படுகிறது) திட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு ‘வளர்ச்சியடைந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025’, அதாவது ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM JI) என்று பெயரிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2005ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கொண்டு வந்தது, இதன் கீழ் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
புதிய சட்டத்தில் இதை ஒரு வருடத்தில் 125 நாட்களாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளைவிட மத்திய அரசுக்கு ‘அதிக அதிகாரம்’ உள்ளது என்றும், அதே நேரம் மாநில அரசுகள் முன்பைவிட ‘அதிக பணத்தை’ செலவிட வேண்டியிருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அத்துடன், மகாத்மா காந்தியின் பெயரையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை நீக்குவதன் மூலம், அரசு மகாத்மா காந்தியை ‘அவமதிக்கிறது’ என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், இது தற்போது உள்ளதைவிட சிறந்த திட்டம் என்றும், கிராமப்புற மக்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் அரசு கூறுகிறது.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் மசோதாவை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.
எப்படி வேறுபடுகிறது?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமானால், 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக இது அமலுக்கு வரும்.
இந்தப் புதிய திட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்கள் விருப்பத்தின் பேரில் திறன் தேவையற்ற வேலைக்கு முன்வந்தால், அவர்களுக்கு ஒரு வருடத்தில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
தற்போது ஒரு வருடத்தில் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், அது தொடர்பான பணிகளின் கீழ் மக்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அரசு கூறுகிறது.
அத்துடன், சாலைகள், நீர் தொடர்பான உள்கட்டமைப்பு போன்ற கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமென அரசு கூறுகிறது.
இது கிராமப்புறங்களுக்குச் சிறந்த இணைப்பை வழங்குவதோடு, கிராம மக்களுக்குச் சிறந்த சந்தை வாய்ப்பையும் வழங்கும் என்று அரசு கூறுகிறது.
புதிய மசோதாவால் தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் அதிக பலன் பெறுவார்கள் என்றும் அதிக வெளிப்படைத்தன்மை வரும், மேலும் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும் என்றும் அரசு கூறுகிறது.
பட மூலாதாரம், Kalpit Bhachech/Dipam Bhachech/Getty Images
படக்குறிப்பு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2005ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கொண்டு வந்தது (கோப்புப் படம்).
மத்திய மற்றும் மாநில அரசின் பங்கு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை ‘மேம்படுத்தும்’ நோக்கத்துடன் 2005ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் நாட்டின் அனைத்து மாவட்டங்களும் அடங்கும்.
இந்தத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியின் முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும் என்றும், அதே நேரம் பொருட்கள் போன்றவற்றுக்கான செலவை மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஏற்கும் என்றும் விதிகள் உள்ளன.
ஆனால், புதிய மசோதாவில், இதன் கீழ் ஏற்படும் மொத்த செலவில் 60 சதவீதம் மத்திய அரசு ஏற்கும், மீதமுள்ள 40 சதவீத செலவை மாநில அரசு ஏற்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு இந்தச் செலவில் 90 சதவீதத்தை ஏற்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு தினசரி வேலையின்மை கொடுப்பனவு வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவுச் செலவை மாநில அரசு ஏற்கும். இந்த விதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலும் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி
அரசின் வாதங்களும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும்
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 16 அன்று, வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மகாத்மா காந்தியை ‘அவமதிக்கும்’ செயல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஷிவ்ராஜ் சிங் செளஹான் மறுத்தார்.
“இந்த மசோதாவால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்படும். அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். மகாத்மா காந்தியும் கிராமங்களின் மேம்பாட்டையே விரும்பினார். அப்படியிருக்க, புதிய மசோதா எப்படி அவரை அவமதிக்கும்?” என்று அவர் கூறினார்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கொண்டு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியைவிட நாங்கள் இதில் அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளோம். கிராமங்களின் வளர்ச்சி எங்கள் லட்சியம். மகாத்மா காந்தி விரும்பியதைத்தான் நாங்கள் செய்கிறோம். அதுதான் தீன் தயாள் உபாத்யாயாவின் கொள்கை” என்றார் அவர்.
அரசு ‘மறைமுகமாக’ ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது, அதன் ‘முழு கட்டுப்பாடும்’ மத்திய அரசின் கைகளில் இருக்கும் என்றும், மாநில அரசுகள் ‘அதிகம் செலவு’ செய்ய வேண்டியிருக்கும், ஆனால் ‘புகழ் மத்திய அரசுக்குச் செல்லும்’ என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகையில், “இந்த மசோதாவுக்கு நான் கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தபோது கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவளித்தன. இது மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதை நிரூபிக்கிறது.
புதிய மசோதாவில் மத்திய அரசுக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எந்த மாநிலத்திற்குக் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கும். ஆனால் தற்போதைய திட்டத்தில் நிதி நிர்ணயிப்பதில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் பங்கு இருந்தது,” என்று கூறினார்.
“முந்தைய அரசுகளின் அனைத்து திட்டங்களின் பெயரையும் மாற்றும் இந்தச் செயல் புரிந்துகொள்ள முடியாதது,” என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
இந்த மசோதாவை நிலைக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்திய அவர், “விவாதம் மற்றும் சபையின் ஆலோசனை இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதைத் திரும்பப் பெற வேண்டும், அரசு ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வர வேண்டும். இதைக் குறைந்தபட்சம் ஆழமான ஆய்வு மற்றும் விரிவான விவாதத்திற்காக நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்,” என்றார்.
ராகுல் காந்தியும் இந்த மசோதா தொடர்பாக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் இட்ட பதிவில், “இந்தப் புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை அவமதிப்பதாகும். மோதி அரசு ஏற்கெனவே பரவலான வேலையின்மையால் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது, இப்போது இந்த மசோதா கிராமப்புற ஏழைகளின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியாகும்,” என்று கூறினார்.