டாக்டர் ஹூ (Doctor Who) கண்காட்சிக்காக நியூசிலாந்து சென்று கொண்டிருந்தார் அதன் திட்ட இயக்குனர் ஆண்ட்ரூ டேவிஸ். முதலில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் இடையிலான அவரின் விமானப் பயணம் நன்றாகவே இருந்தது. அதன்பின் விமானம் திடீரென குலுங்க (டர்பியூலென்ஸ்) ஆரம்பித்தது.
“அந்த நிகழ்வை விவரிக்க வேண்டும் என்றால் ரோலர் கோஸ்டரில் பயணித்தது போலிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்” என்று அவர் நினைவுகூர்ந்தார். நான் என் இருக்கையில் பலமாக தள்ளப்பட்டேன். பிறகு அனைவரும் கீழே விழுந்தோம். எனது ஐபேட் எனது தலையில் வந்து விழுந்தது. என் உடல் முழுவதும் காபி கொட்டிவிட்டது. பயணிகள் மத்தியில் அதிக பதற்றம் நிலவியது. சிலர் அழுதுகொண்டிருந்தனர். அவர்களால் என்ன நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை” எனக் கூறினார் டேவிஸ்.
அவருடன் பயணித்த சிலருக்கு எலும்பு முறிவு, காயங்கள் ஏற்பட்டது. ஜெஃப் கிச்சன் என்ற 73 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
விமானம் குலுங்குவதால் மரணம் நிகழ்வது என்பது மிகவும் அரிதான ஒன்று. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. எனினும் 1981ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4 உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், காயங்களை பொருத்தவரை, அது வேறு ஒரு பார்வையை அளிக்கிறது.
பட மூலாதாரம், REUTERS/Stringer
அமெரிக்காவில் மட்டும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 207 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் பலரும் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறும் தகவல். (இதில் 166 பேர் விமான பணியாளர்கள். இவர்கள் இருக்கையில் அமராமல் கூட இருந்திருக்கலாம்)
ஆனால், காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலை பாதிப்பதால் விமான பயணம் இவ்வாறு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மேற்பரப்பில் உள்ள காற்று வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களும் கூட அடிக்கடி விமானம் குலுங்குவதற்கான காரணமாக இருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது. இது விமானம் குலுங்குவதன் தீவிரத்தையும் அதிகப்படுத்தலாம்.
“அடுத்த சில தசாப்தங்களில் விமானம் குலுங்குவதன் தீவிரம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்” என ரீடிங் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானியாக உள்ள பேராசிரியர் பால் வில்லியம்ஸ் கணித்துள்ளார்.
“தற்போது 10 நிமிடங்களுக்கு வரும் இந்த இகழ்வு, 20 அல்லது 30 நிமிடங்களாக அதிகரிக்கும்” என்கிறார்.
விமானம் குலுங்குவதன் தீவிரம் அதிகமாகும்போது அதன் ஆபத்தும் அதிகரிக்குமா? அல்லது இதைத் தடுக்க விமான நிறுவனம் தரப்பில் வழிவகை செய்யப்படுமா?
கரடுமுரடான வடக்கு அட்லாண்டிக் வழித்தடம்
விமானம் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்போது அதன் மேல் மற்றும் கீழ் அசைவுகள், உங்கள் உடலில் 1.5 கிராம் அளவிற்கு அசைவை ஏற்படுத்துவதுதான் டர்பியூலென்ஸ் (Turbulence) எனப்படுகிறது. நீங்கள் சீட்-பெல்ட் அணியாமல் இருந்தால் இது உங்களை சீட்டில் இருந்து கீழே விழவைத்து விடும்.
ஓராண்டில் உலகளவில் புறப்படும் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான விமானங்களில், 5000 விமானங்கள் தீவிரமான டர்பியூலென்ஸ் நிகழ்வை எதிர்கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்களில் 40% காயங்கள் விமானம் குலுங்கியதால் ஏற்பட்டவை என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்- அமெரிக்கா, கனடா – கரீபியன் இடையிலான வழித்தடங்கள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் செயற்கைக்கோள் இந்த வளிமண்டலத்தை ஆய்வு செய்ததில், வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இது 55% அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, டர்பியூலென்ஸ் நிகழ்வின் தீவிரம் மற்ற பகுதிகளிலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா, வடக்கு பசிபிக், வடக்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் இதில் அடங்கும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு
விமானம் குலுங்க 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
வெப்பச்சலனம் (கன்வெக்ட்டிவ்) – மேகங்கள் மற்றும் இடியால் ஏற்படும்
நிலவியல் (ஓரோகிராஃபிக்) – மலைப் பகுதிகளை சுற்றியுள்ள காற்றின் வேகத்தால் ஏற்படும்.
கிளியர் ஏர் – காற்றின் வேகம், திசையில் ஏற்படும் மாற்றம்
இதில் ஒவ்வொன்றும் தீவிரமான டர்பியூலென்ஸ் நிகழ்வை ஏற்படுத்தும். கன்வெக்ட்டிவ், ஓரோகிராஃபிக் பெரும்பாலும் தவிர்க்கப்படக் கூடியவை. ஆனால் கிளியர் ஏர் என்பது, அதன் பெயருக்கு ஏற்ப அதை நம்மால் பார்க்க முடியாது. சில சமயங்களில் எங்கிருந்தாவது திடீரென தோன்றும்.
பட மூலாதாரம், KIRILL KUDRYAVTSEV /AFP via Getty
கன்வெக்ட்டிவ் மற்றும் கிளியர் ஏர்-ஐ பொருத்தவரை இதற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணியாகும்.
காலநிலை மாற்றத்திற்கும், இடிக்கும் இடையிலான தொடர்பு சிக்கலானதுதான். வெப்பமான சூழல் அதிக ஈரப்பதத்தை கொண்டிருக்கும். அந்த கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதம் இணைந்து அதி தீவிரமான இடியை உருவாக்கும்.
இதை விமானம் குலுங்குவதுடன் தொடர்புப்படுத்துகையில், கன்வெக்ட்டிவ் என்பது வளிமண்டலத்தில் குறிப்பாக மேகத்திற்குள் காற்றின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை பொறுத்தது. மேலும் குமுலோனிம்பஸ் அல்லது இடியுடன் கூடிய மேகங்களை விட மேலும் கீழும் தீவிரமான காற்றுகளை நீங்கள் காண முடியாது.
இதுதான் கடந்த 2024ஆம் ஆண்டில் ஆண்ட்ரு டேவிஸ் பயணித்த விமானம் குலுங்க காரணம்.
தெற்கு மியான்மரில் வெப்பச்சலனம் ஏற்படக்கூடிய பகுதியில் விமானம் பறந்ததால், 19 வினாடிகள் தீவிரமான டர்பியூலென்ஸ் ஏற்பட்டு, ஐந்தே வினாடிகளில் 178 அடி உயரம் குறைந்தது என சிங்கப்பூர் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், MediaNews Group/Boston Herald via Getty Images
உலக வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்போது, மின்னலின் தாக்கம் 12% அதிகரிக்கும் என 2014ஆம் ஆண்டு அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் ஓர் ஆய்வு கூறுகிறது.
“கடந்த சில ஆண்டுகளில் 80 மைல்களுக்கு மேல் விட்டம் கொண்ட பெரிய புயல்கள் பரவுவதை நானே கவனித்திருக்கிறேன், இது அரிதாக நடப்பவை” என்கிறார் வணிக விமான நிறுவனத்தின் விமானி கேப்டன் நாதன் டேவிஸ்.
“மற்ற மேகங்கள் மீது ஒன்றிணையாமல் இருக்கும் பட்சத்தில், பெரிய குமுலோனிம்பஸ் மோகங்களை அவ்வளவு எளிதில் பார்க்க இயலாது.” என்கிறார்.
தெளிவான காற்றால் விமானம் குலுங்குவதும் விரைவில் அதிகரிக்கும். விமானம் செல்லும் பாதையில் காற்றுக்கு தொந்தரவு ஏற்படும்போது இதுபோல் நடக்கும். (விமானம் பறந்துகொண்டிருக்கும் அதே உயரத்தில், காற்று வளிமண்டலத்தில் 6 மைல் தூரத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும்)
அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் விமானத்தின் பாதையில் காற்றின் வேகம் மணிக்கு 160 மைல் முதல் 250 மைல் வரை மாறுபடும்.
வடக்கில் குளிர்ச்சியான காற்றும், தெற்கில் வெப்பமான காற்றும் இருக்கும். இந்த வெப்பநிலை மாற்றம் மற்றும் காற்றில் இருக்கும் மாறுபாடு ஆகியவை டெய்ல்விண்ட் (Tailwind- பின்னால் இருந்து வீசும் காற்று) முறையில் பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு உதவும். இது பயண நேரம் மற்றும் எரிவாயுவை குறைக்கும். ஆனால் இதுவே டர்பியூலென்ஸ் நிகழ்வுக்கும் காரணமாகும்.
“காலநிலை மாற்றம் விமானத்தின் பாதையில் தெற்கே உள்ள காற்றை வடக்கே உள்ள காற்றை விட அதிகமாக வெப்பமாக்குகிறது. இதனால் வெப்பநிலை வேறுபாடு வலுவடைகிறது.” என பேராசிரியர் வில்லியம்ஸ் விளக்குகிறார்.
‘எனது குழந்தைகளையும் பாதிக்கிறது’
விமானம் சற்று தீவிரமாக குலுங்கும்போது அது பயணிகளை இருக்கையில் இருந்து கீழே தள்ளும். காயங்கள் மட்டுமல்லாது, சில சமயங்களில் உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தும். இது பயணிகளை கவலையில் ஆழ்த்துகிறது.
அடிக்கடி நிகழும் இந்த விமான டர்பியூலென்ஸ் சம்பவங்களை வருத்தத்திற்குரியதாக பார்க்கிறார் டேவிஸ். “என்னை மட்டுமல்ல. எனது குழந்தைகளையும் பாதிக்கிறது” என்கிறார்.
“எனக்கு மிக மோசமான சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. எனினும் டர்பியூலென்ஸ் என்பது அனைவரும் கவலைகொள்ள வேண்டிய ஒன்று தான்”
ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான பிரிட்டன் இளைஞர்கள் விமானத்தில் பறக்கவே அஞ்சுவதாக சமீபத்திய ‘YouGov’ ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இந்த விமானம் குலுங்கும் சம்பவங்கள் விமான பயணத்தை ஒரு ‘கெட்டக்கனவு’ போல உணரச்செய்கிறது.
நார்ஃபோக்கில் இருந்து விமானத்தில் பயணித்த வெண்டி பார்கர் என்பவர் கூறுகையில், “என்னைப் பொருத்தவரை அதிக முறை விமானம் குலுங்குவது என்பது அசம்பாவிதம் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், உயிர் பிழைப்பதற்கு குறைவான வாய்ப்பு உள்ளது என்றும் அர்த்தம்”
விமானத்தின் இறக்கைகள், டர்பியூலென்ஸ் மிகுந்த காற்றில் பறக்கவே வடிவமைக்கப்பட்டவை. முன்னாள் விமானியும், தற்போது பயிற்றுவிப்பாளருமாக உள்ள கிறிஸ் கீன், “விமானத்தின் இறக்கைகள் எந்தளவிற்கு வளையக்கூடியவை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஒரு சோதனையின்போது போயிங் 747 பயணிகள் விமானத்தின் இறக்கைகள் 25 டிகிரி வரை வளைந்தன. இது மிகவும் அதிகமானது. மிகப்பெரியளவில் விமானம் குலுங்கும்போதுகூட இந்தளவிற்கு இறக்கைகள் வளையாது” என்றார்.
இருப்பினும், விமான நிறுவனங்களைப் பொருத்தவரை, பொருளாதார செலவுகள் ஒரு மறைமுக கவலையாகவே உள்ளது. அது டர்பியூலென்ஸ் நிகழ்வுகளால் ஏற்படும் பொருட்செலவு.
டர்பியூலென்ஸ் நிகழ்வுகளால் ஏற்படும் பொருட்செலவு
காலநிலை மற்றும் வெப்பநிலையை கண்காணிக்கும் ‘AVTECH’ என்ற நிறுவனம் வானிலை மையத்துடன் இணைந்து விமானிகளுக்கு விமான டர்பியூலென்ஸ் குறித்த எச்சரிக்கையை அளித்து வருகிறது. இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு விமான நிறுவனத்திற்கு 1,80,000 முதல் 1.5 மில்லியன் யூரோ வரை செலவாகிறது.
இது விமான டர்பியூலென்ஸ் நிகழ்விற்குப் பிறகு அதை பரிசோதித்து சரிசெய்வது, விமானம் தாமதமாக புறப்படுவது, வேறு பாதையில் திருப்பிவிடுவது உள்ளிட்டவைகளுக்கு ஆகும் இழப்பீடு தொகை, தவறான பாதைக்கு செல்வதால் ஏற்படும் செலவுகளும் இதில் அடங்கும்.
பட மூலாதாரம், Kevin Carter/GETTY
டர்பியூலென்ஸ் நிகழ்வுகளை ஏற்படுத்தும் புயல்களை தவிர்க்க விமானங்களை திசை திருப்புவது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என யூரோகண்ட்ரோல் கூறுகிறது. இது ஐரோப்பிய விமானப் போக்குவரத்திற்கு காலநிலை மாற்ற எச்சரிக்கைகள் தொடர்பான உதவிகளை வழங்கும் ஒரு சிவில்-ராணுவ அமைப்பாகும்.
உதாரணமாக நிறைய விமானங்களுக்கு பாதைகளை மாற்ற வேண்டியிருந்தால், ஒரு சில பகுதிகளில் வான்வெளியில் அதிக நெரிசல் ஏற்பட்டுவிடும்.
இது விமானி மற்றும் வான்வெளி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு அதிக வேலைப்பளுவை தரக்கூடும் என்கிறார் யூரோகண்ட்ரோல் அமைப்பின் ஒரு செய்தித்தொடர்பாளர்.
புயல்களைத் தவிர்த்து பறப்பதற்கு அதிக நேரமும் எரிபொருளும் தேவைப்படுகின்றன.
உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், மோசமான வானிலை காரணமாக “விமான நிறுவனங்கள் கூடுதலாக பத்து லட்சம் கிலோமீட்டர் சுற்றி விமானங்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் 19,000 டன் கூடுதலாக கார்பனீராக்சைடு (CO2) உற்பத்தி செய்யப்பட்டது” என்று யூரோகண்ட்ரோல் கூறுகிறது.
தீவிர வானிலை மாற்றங்கள் கணிக்கப்பட்டுள்ளதால், 2050ஆம் ஆண்டுக்குள் விமான டர்பியூலென்ஸ் மற்றும் மோசமான வானிலை காரணமாக மேலும் அதிக விமானங்கள் திருப்பிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிறுவனங்கள், பயணிகளுக்கான செலவுகளை இது மேலும் அதிகரிக்கும்.
விமான நிறுவனங்கள் எவ்வாறு தயாராகி வருகின்றன?
“சமீபகாலமாக இந்த விமான டர்பியூலென்ஸ் நிகழ்வுகளை முன்கூட்டிய கணிப்பது ஓரளவு மேம்பட்டு உள்ளது. அது துல்லியமாக இல்லாவிட்டாலும், 75% கிளியர் ஏர் டர்பியூலென்ஸ் நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும்” என்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.
“20 ஆண்டுகளுக்கு முன்பு இது 60%ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருவதற்கு காரணம் சிறந்த ஆய்வுகள்” எனக் கூறினார்.
விமானங்களில் வானிலை ரேடார் உள்ளது. அவை புயல்களை முன்கூட்டியே கணிக்கக்கூடியது. கேப்டன் டேவிஸ் விளக்குவது போல், “ஒரு விமானப் பயணத்திற்கு முன், பெரும்பாலான விமான நிறுவனங்கள் கணினி மாடலிங் அடிப்படையில், விமானம் செல்லும் பாதை முழுவதும் எந்தெந்த பகுதிகளில் டர்பியூலென்ஸ் நிகழும் என்பதை விவரிக்கும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கும்.”
“இது 100% துல்லியமானது அல்ல, ஆனால் நாம் செல்லும் வழியில் மற்ற விமானங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறிக்கைகளுடன் இணைந்து நல்ல யோசனையை வழங்குகிறது”
பட மூலாதாரம், RUNGROJ YONGRIT/EPA – EFE/REX/Shutterstock
அமெரிக்காவில் உள்ள சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், 10,000 அடிக்கு இருந்த கேபின் சேவையை சமீபத்தில் 18,000 அடியாக மாற்ற முடிவு செய்தது. இந்த உயரத்தில் தரையிறங்குவதற்கு தயாராக பெல்ட்களுடன் பணியாளர்கள் மற்றும் பயணிகளை அமர வைப்பதன் மூலம், விமானம் குலுங்குவதால் ஏற்படும் காயங்களை 20% குறைக்கும் என சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் கூறுகிறது.
மேலும் கடந்தாண்டு, கொரியன் ஏர்லைன்ஸ் அதன் எகானமி பயணிகளுக்கு நூடுல்ஸ் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு விமானம் குலுங்கும் சம்பவங்கள் இரட்டிப்பாகி வருவதாகவும், இதனால் சூடான நூடுல்ஸ் மூலம் பயணிகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.
மாற்று வழிகள் என்ன?
இன்னும் சில ஆய்வுகள் இறக்கைகளை உருவாக்குவதில் மாற்று வழிகளுக்கான ஆலோசனைகளை வழங்கியது.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள், பலத்த காற்றில் ஓர் ஆந்தை எப்படி சீராக பறக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். அதில், மோசமான காற்றில் பறக்கும்போது ஆந்தையின் இறக்கைகள் ஒரு ‘சஸ்பென்ஷன்’ போல செயல்பட்டு தலை மற்றும் உடற்பகுதியை உறுதிப்படுத்துகிறது எனக் கண்டறிந்துள்ளனர்.
‘ஒன்றிணைந்த இறக்கை வடிவமைப்பு சிறிய அளவிலான விமானங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். இது பலத்த காற்று மற்றும் டர்பியூலென்ஸ் நிகழ்வுகளை தடுக்க உதவுகிறது’ என 2020ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி ப்ரொசீடிங்ஸ்-இல் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு செய்தது.
அதேசமயத்தில், ஆஸ்திரியாவில் உள்ள டர்பியூலென்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், இலகுரக விமானங்களுக்கான டர்பியூலென்ஸ்-ஐ தடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாகக் கூறியது. அதில் விமான டர்பியூலென்ஸ் கணிக்கப்பட்டு, சென்சார் மூலம் இறக்கைகளுக்கு சிக்னல் அனுப்பப்படும். இதனால் இறக்கைகள் அதை எதிர்கொள்ள தயாராகும்.
இவை இலகுரக விமானங்களில் மிதமான டர்பியூலென்ஸ்-ஐ 80% குறைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
பட மூலாதாரம், NurPhoto via Getty
அதன்பின் பலரும் ஏஐ தொழில்நுட்பம் தான் இதற்கு தீர்வு எனக் கூறினர். ஃபோரியர் தகவமைப்பு கற்றல் மற்றும் கட்டுப்பாடு (FALCON) என்ற தொழில்நுட்பம் என்பது ஒரு இறக்கையின் குறுக்கே டர்பியூலென்ஸ் காற்று எவ்வாறு பாய்கிறது என்பதைக் நிகழ்நேரத்தில் தெரிந்துகொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும். இது விமான டர்பியூலென்ஸ் நிகழ்வை முன்கூட்டியே கணித்து, இறக்கையில் உள்ள ஒரு பகுதிக்கு கட்டளைகளை வழங்கி, எதிர்கொள்ள உதவுகிறது.
“இதுபோன்ற தொழில்நுட்பங்கள் சிறிது காலம் தான் நீடிக்கும். ஆனால், விமானப் போக்குவரத்துத் துறையில் நிலையான எதிர்கால தொழில்நுட்பம் வேண்டும்” என விண்வெளி பொறியாளரும் சேஃப் லேண்டிங்கின் உறுப்பினருமான ஃபின்லே ஆஷர் தெரிவித்துள்ளார்.
“இவை அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் பெரிய வணிக விமானங்களில் ஏற்பட வாய்ப்பில்லை.”
ஆனால் டர்பியூலென்ஸ் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதும், தீவிரமானதாக மாறுவதும் பெரிதும் கவலைப்பட வேண்டிய விஷயமில்லை என நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
“டர்பியூலென்ஸ் என்பது பொதுவாக மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று” என கேப்டன் டேவிஸ் கூறுகிறார்.
ஆனால் சீட் பெல்ட் அணிந்துகொண்டு நீண்ட நேரம் இருக்கையில் இருந்தால் நல்லது.
ஆண்ட்ரூ டேவிஸ் இதை ஒரு கடுமையான அனுபவத்திற்கு பின் தான் புரிந்துகொண்டார்.
“நான் மிகவும் பதற்றம் அடைவேன் என்பது உண்மைதான், முன்பு போல எனக்கு பறக்க ஆவலும் இல்லை. ஆனால் அதனால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் மாட்டேன்”
“நான் இருக்கையில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட் அணிந்துவிடுவேன். தேவையென்றால் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு வேண்டியதை எடுத்துக்கொண்டு, மீண்டும் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக்கொள்வேன்” என்கிறார் ஆண்ட்ரூ டேவிஸ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு