விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன?
இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி என்ற பெயர் தவிர்க்க முடியாதது.
பாரம்பரிய டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் அந்தந்த வடிவத்துக்கு ஏற்றாற்போல் தகவமைத்து தன்னைத் தயார் செய்து விளையாடக் கூடியவர்.
அதனால்தான் கோலியின் ரசிகர்கள் அவரை “கிங் கோலி” என்று புகழ்கிறார்கள்.
களத்தில் சுறுசுறுப்பு
சச்சின், திராவிட், கங்குலி, லாரா, உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் எட்டிய இலக்கை மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்தவர் விராட் கோலி.
விராட் கோலி களத்தில் இறங்கிவிட்டாலே சக வீரர்களை குஷிப்படுத்துவது, விக்கெட் வீழ்த்தினால் பாராட்டுவது, எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அமைதியாகப் போகாமல் பதிலடி கொடுப்பது, தன்னைச் சீண்டினால் விடமாட்டேன் என்ற ரீதியில் கிண்டல் செய்வது என களத்தை எப்போதுமே பரபரப்பாக வைத்திருப்பார்.
கோலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் சரி, அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பும் சரி, களத்தில் அவரது ஆவேசம், ஆர்வம், உற்சாகம், ஆர்ப்பணிப்பு உணர்வு துளிகூட குறையவில்லை, மாறவும் இல்லை.
இந்திய கிரிக்கெட் பல ஜாம்பவான்களை தந்துள்ளது. அமைதியாகச் சாதித்து, மக்கள் நாயகர்களாக வலம் வந்த கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி போன்றோரை இந்திய கிரிக்கெட் அடையாளப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் விராட் கோலியும் ஒரு சமகால ஜாம்பவானாக பார்க்கப்படுகிறார்.
கோலியின் கடைசி பார்டர் கவாஸ்கர் தொடரா?
வரும் 22ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு மிகவும் முக்கியவத்தும் வாய்ந்த தொடராக உள்ளது.
அதேநேரம், தனது கிரிக்கெட் வாழ்க்கை தோல்வியுடன் முடிந்துவிடக் கூடாது என்பதால் விராட் கோலிக்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனென்றால் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசியாக விளையாடும் பார்டர்-கவாஸ்கர் தொடராக இது இருக்கக்கூடும். அதன் காரணமாகவும் இந்தத் தொடர் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்
விராட் கோலி, 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்களை சேர்த்துள்ளார். 29 சதங்கள், 31 அரைசதங்கள் என கோலியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் மிரட்சியை ஏற்படுத்துகின்றன.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தால் சராசரியை சரிய வைக்கும் விதத்தில் இருந்துள்ளது. ஏனென்றால், 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கோலி டெஸ்ட் அரங்கில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலி 250 ரன்கள் மட்டுமே டெஸ்டில் சேர்த்து 22 சராசரி வைத்துள்ளார் என கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கோலியின் டெஸ்ட் சராசரி 2019ஆம் ஆண்டு நவம்பரில் 55 ஆக இருந்த நிலையில் சமீபத்திய மோசமான ஃபார்ம் காரணாக 47 ஆகக் குறைந்துவிட்டதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இவ்வளவு மோசமான ஃபார்மில் விராட் கோலி இருந்தும், அவர் பார்டர்-கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கியது வியப்பை ஏற்படுத்தியது.
‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ‘தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்’, பஞ்சாபி நாளேடுகள், உள்ளிட்ட பல நாளேடுகள் கோலியின் புகைப்படத்தை வெளியிட்டு தலைப்புச் செய்தியாக்கின.
“தி ஹெவி கிரவுன்”, “கோட்”, “தி ரிட்டன் ஆஃப் தி கிங்”, “கோலி’வுட் இன் ஆஸ்திரேலியா”, “ஹோலி கோலி” என ரசிக்கக்கூடிய தலைப்பில் கோலிக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டன.
ஒரு பேட்டர் ஃபார்ம் இழந்த நிலையில் அவர் விளையாட வரும்போது அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைவிட விமர்சனங்களே அதிகம் இருக்கும். ஆனால், கோலியின் விவகாரத்தில் அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் கால்பதித்தவுடன் அவரை அந்நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
விராட் கோலி ஃபார்மில் இல்லாவிட்டாலும் ஏன் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன என்பதற்கு அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சுவரஸ்யமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ரசிகர்கள்
ரிக்கி பாண்டிங் ஐசிசி தளத்துக்கு அளித்த பேட்டியைக் குறிப்பிட்டுள்ள தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், “விராட் கோலியின் செயல்பாடுகள், சவாலான பேட்டிங், ஆஸ்திரேலியர்களின் திறமைக்கு சவால்விடும் போக்கு, ஸ்லெட்ஜிங்கில் பதிலடி தருவது, நெஞ்சுக்கு நேராக நிற்கும் திமிர் ஆகியவை ஒரு ஆஸ்திரேலியரை போன்று இருப்பதால், அவரை சக நாட்டவராக நினைத்து ஆஸ்திரேலிய நாளேடுகளும், ஊடகங்களும் கொண்டாடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.
திறமையான எந்த நாட்டு கிரிக்கெட் வீரருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் வீரராகத் தற்போது கோலி பார்க்கப்படுகிறார்.
கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கூட கோலியை புகழாமல் இருக்கவில்லை.
ஐசிசி தளத்துக்கு பாண்டிங் அளித்த பேட்டியில் “கோலி ஒரு சூப்பர் ஸ்டார் பேட்டர். அவர் விளையாடும் போக்குதான் அவருக்கு ரசிகர்களைக் கொடுத்துள்ளது. களத்துக்கு வந்துவிட்டால் கிரிக்கெட்டின் மீதான அர்ப்பணிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, போராட்டக் களம், கிரிக்கெட் திறமை ஆகியவைதான் ஆஸ்திரேலிய ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அதனால்தான் கோலிக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் இருக்கிறது. இதுபோன்ற சூப்பர் ஸ்டார் பேட்டர்கள் உலகம் முழுவதும் தங்களுக்கென தனித்துவமான ரசிகர்களை உருவாக்கிக் கொள்வார்கள்” எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கோலியின் உச்சமும் சரிவும்
விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2016 முதல் 2019 வரை உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அனைத்து அணிகளும் கோலியை கண்டு அஞ்சின என்பதில் சந்தேகமில்லை. 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை கோலி டெஸ்ட் போட்டியில் 4,208 ரன்கள் சேர்த்தார், இதில் 16 சதங்கள், 10 அரைசதங்கள் அடங்கும். இதில் 7 இரட்டை சதங்களை அடித்து கோலி சாதனை புரிந்துள்ளார்.
ஆனால், 2020ஆம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலியின் ஃபார்ம் ஆட்டம் கண்டது. குறிப்பாக அவரிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்த பிறகு அவரின் பேட்டிங் மந்தமானது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,838 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். அதிலும் சமீபத்தில் வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியின் மோசமான ஃபார்ம் உச்சத்துக்குச் சென்றது.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் டாப்-20 வரிசையில் இருந்தே கோலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோலியின் பெயர் ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இதுதான் முதல்முறை.
அசைக்க முடியாத நம்பிக்கை
இருப்பினும் கோலி போன்ற “கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” வீரர் ஒரு போட்டியில் சிறந்து ஆடினாலும் இழந்த ஃபார்மை மீட்பார். கோலி போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் வீரருக்கு ஃபார்ம் ஒரு பொருட்டல்ல என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் கோலி குறித்து தலைப்பிட்டு பல செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் கோலியின் ஃபாரம் குறித்து பெரிதாக எந்த ஊடகமும் விமர்சித்து எழுதவில்லை.
மேலும், கோலி மீதான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி மைக்கேல் கிளார்க், பாண்டிங், லாங்கர், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரே, சேப்பல் போன்ற பலரும் புகழ்ந்துள்ளனர். இதன்மூலம், கிரிக்கெட்டில்தான் கோலி ஃபார்ம் இழந்துவிட்டார், ஆஸ்திரேலிய ரசிகர்களின் மனதில் இல்லை என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் நம்புவதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி ஒன்றில், “ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனை அளப்பரியது. இந்தியாவில் கோலி சாதித்த சாதனைகளைவிட, ஆஸ்திரேலிய மண்ணில் கோலி சாதித்தது அதிகம். இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால், அதில் நிச்சயம் கோலி அதிக ரன்கள் சேர்த்த பேட்டராக இருப்பார் என்று கணிக்கிறேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கோலி ஆஸ்திரேலியாவில் சாதிப்பாரா?
பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலான பேட்டராக கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் நம்புகிறார்கள்.
கோலியின் ஃபார்ம் மீதான நம்பிக்கையைவிட, அவரின் திறமை, கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். கடந்த காலங்களில் கோலி தனது அடையாளத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அழுத்தமாக விட்டுச் சென்றது இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2011 முதல் 2023ஆம் ஆண்டு வரை 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,042 ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 2011 முதல் 2020 வரை ஆடிய கோலி, 1,352 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 6 சதங்கள் அடங்கும்.
அதாவது கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 8 சதங்களில் 6 சதங்கள் அந்நாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் கோலியின் சராசரி 54 ரன்கள் என்றபோதே அங்கு கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம்.
இந்தத் தொடரில் விராட் கோலி ஏராளமான சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் சேர்த்த இந்திய பேட்டர் என்ற வகையில் 1,809 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 458 ரன்கள் தேவை, தற்போது கோலி 1,352 ரன்களுடன் உள்ளார்.
அடிலெய்ட் ஓவல் மைதானம் கோலிக்கு ராசியானது. இந்த மைதானத்தில்தான் 2012ஆம் ஆண்டு முதன்முதலில் கோலி தனது சதத்தைப் பதிவு செய்தார். இந்த மைதானத்தில் மட்டும் கோலி 509 ரன்கள் சேர்த்து 63 சராசரி வைத்துள்ளார். லாராவின் 610 ரன்கள் சாதனையை இந்த மைதானத்தில் கோலி இந்த முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தனது 100வது சர்வதேச போட்டியையும் ஆஸ்திரேலிய மண்ணில்தான் கோலி 3வது டெஸ்டில் விளையாடுவார்.
இந்தத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகும் விதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் முன்பாகவே கோலி அங்கு சென்றுவிட்டார். பெர்த் நகரில் 22ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக கோலி தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு