- எழுதியவர், ஜஸ்விந்தர் சித்து
- பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசிக்காக
-
36 வயதான விராட் கோலி ஒரு பேட்ஸ்மேன் மட்டுமல்ல, மனதிற்கு திடம் தரும் சிறந்த ஆளுமையும் கூட.
இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடியில் இருந்த போதெல்லாம் அவரது பேட்டிங் லட்சக்கணக்கான கிரிக்கெட் பிரியர்களுக்கு மருந்தானது. அவரது தோல்வி அவர்களுக்கு வருத்தமளிக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் கவாஸ்கர்-பார்டர் தொடரில் விராட் கோலி இதுவரை எடுத்துள்ள ஸ்கோர் 5, 100, 7, 11 மற்றும் 3 ஆகும். இந்த தொடரின் ஐந்து இன்னிங்ஸ்களில், விராட் ஒரு சதம் உட்பட 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு, கோலி 17 இன்னிங்ஸ்களில் 25.06 சராசரியுடன் 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரன் குவிக்கும் வேகம் குறைந்ததால், அவரது ஒட்டுமொத்த சராசரி 47.40 ஆகக் குறைந்துள்ளது. கோலிக்கு இது கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்படாத ஒரு சூழல்.
பிட்ச் அல்லது ஃபுட்வொர்க்: கோலியின் மிகப்பெரிய பிரச்னை எது?
அந்த சதத்தின் ரீப்ளேயைப் பார்க்கும்போது, ஐம்பது ரன்களைத் தாண்டிய பிறகு, அவரது பேட்டிலிருந்து பல இன்சைட் அவுட் எட்ஜுகள் ஸ்டம்புக்கு நெருங்கி வந்ததைக் காட்டுகிறது. மீதமுள்ள இன்னிங்ஸில், பந்து அவரது பேட்டில் சரிவர படவில்லை அல்லது விக்கெட் கீப்பரை நோக்கி செல்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “கோலி நான்காவது இடத்தில் பேட் செய்கிறார். ஆனால் இந்த தொடரில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே வெளியறியதால், அவர் புதிய பந்தை முன்கூட்டியே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் புதிய பந்தில் பேட்டிங் செய்ய வேண்டியச் சூழல் உருவான போதெல்லாம், அவரது விக்கெட் ஆரம்பத்திலேயே விழுந்தது. பெர்த்தில் பேட்டிங் செய்ய வந்த போது, அதற்குள் பந்து பழையதாகி இருந்தது, கோலி சதம் அடித்தார் ” என்று கூறினார்.
“10-15-20 ஓவர்களுக்குப் பிறகு கோலி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்றும் அவர் கூறினார்.
மும்பையில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் தினேஷ் லாட், ரோஹித் சர்மா போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளார்.
ஒரு பயிற்சியாளராக, அவர் கோலியின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். கோலி தனது ஃபுட்வொர்க்கில் சிக்கலை எதிர்கொள்வதாக அவர் நம்புகிறார்.
ஃபுட்வொர்க் (footwork) என்பது கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளரின் பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் கால்களை நகர்த்துவதற்கான நுட்பமாகும்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், “கோலியால் ஆஸ்திரேலிய சூழல்களுக்கு தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். இந்த பிரச்னைக்கு மிகப்பெரிய காரணம் அவரது ஃபுட்வொர்க் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக நிறைய பயிற்சி செய்துள்ளனர். டி-20 கிரிக்கெட் காரணமாக இந்த ஆட்டம் மாறிவிட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பேட்ஸ்மேன்கள் டிஃபென்ஸ் முறையை கையாளவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இப்படி விளையாடுவது எளிதல்ல” என்றார்.
இந்த தொடரில் கோலி, தொடாமல் விட்டு விட வேண்டிய பந்துகளை விளையாட முயன்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பந்து வீச்சாளர் மீது அவர் விரைவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.
வர்ணனையின் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் இதையே சுட்டிக்காட்டினார்.
“பந்து வீச்சாளர் வந்தவுடனேயே அவர் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் பேட்ஸ்மேன் கோலி. அவர் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும் போது, குறிப்பாக ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் பந்தில் அதிக வேகம் இருக்கும் போது, அவர் பந்தை விடுகிறார். ஆனால் இந்தத் தொடரில், அவர் விட வேண்டிய பந்துகளில் விளையாடியே பெரும்பாலும் அவுட்டாகியுள்ளார்” என்றார்.
இந்த தொடரில் கோலியின் தோல்வியை இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்களோடும் (pitch) தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும். இது கோலிக்கு மட்டுமின்றி அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும். சொந்த மைதானத்தில் மெதுவான ஆடுகளங்களில் விளையாடி அதிக ரன்களை சேர்க்கும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து ஆடுகளங்களில் ரன்களை எடுப்பது கடினம்.
இந்த தொடரில், மார்பு உயரத்தில் வரும் பந்தை கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விளையாட முயன்ற போது, இது மீண்டும் மீண்டும் நடந்தது.
பிரிஸ்பேனிலும், ஜோஷ் ஹேசில்வுட் இதேபோன்ற பந்தை கோலிக்கு வீசினார். அது அவரது பேட்டைத் தொட்டதும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் கையுறைகளில் பந்து இருந்தது. எனவே, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துவீச்சை விளையாடி கோலி மோசமான விளைவை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல.
ஓய்வு பற்றிய கேள்விகள்
2011 முதல் 2019 வரை கோலி 27 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். தற்போதைய மோசமான ஃபார்முக்குப் பிறகு, இந்திய அணியில் அவர் எவ்வளவு காலம் இருப்பார் என்ற கேள்வி எழுவது வெளிப்படையாகத் தெரிகிறது.
கடந்த காலத்திலும், ஆஸ்திரேலிய தொடர் பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை ஓய்வை நோக்கி தள்ளியுள்ளது.
இதில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக் ஆகியோர் அடங்குவர்.
கோலி இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவாரா இல்லையா என்பதுதான் கேள்வி அல்லது அணிக்காக ரன்களை எடுக்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? மோசமான ஃபார்மில் இருந்தாலும் கோலி மீதான தினேஷ் லாட்டின் நம்பிக்கை குறையவில்லை.
“இதற்கு முன்பும் விராட்டின் மோசமான ஃபார்ம் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து சாதித்துக் காட்டினார். அவர் கண்டிப்பாக விமர்சிக்கப்படுவார். ஆனால் அவர் எந்த அழுத்தத்தையும் மனதளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக, அவர் இப்படி வெளியேறியது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக டி20யில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் அவர் இன்னும் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்” என்கிறார் தினேஷ் லாட்.
சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி பாடம் கற்பாரா?
இளம் பேட்ஸ்மேன்களின் சிறப்பான பங்களிப்பு கோலி, ரோஹித் போன்ற மூத்த பேட்ஸ்மேன்கள் விடை பெறுவதற்கான தொடக்க காலகட்டம் வந்துவிட்டத்தை காட்டுவது போல் தெரிகிறது.
பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலுக்கு’ நீண்ட காலமாக வர்ணனை செய்து வரும் பிரகாஷ் வாகன்கர் இதுபற்றி பேசினார்.
“இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஐந்து நாள் போட்டி என்பதை மனதில் இருத்த வேண்டும. எல்லா பந்துகளையும் விளையாட முயற்சிக்கக் கூடாது. கோலியும், ரோஹித்தும் அடிக்கடி இதுபோன்று செய்வதை பார்க்கிறோம்” என்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எஞ்சியிருக்கும்போட்டிகளில் பெரிய ரன் குவிப்பது என்பது விராட் கோலியின் தேவை மட்டுமல்ல, கட்டாயமாகவும் மாறிவிட்டது. இதற்காக அவர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் அணுகுமுறையை உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான முதலிரு ஆண்டுகளில் (2004, 2005) அவர் 50 ரன் சராசரியை கொண்டிருந்தார். ஆனால் இந்த சராசரி அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறையத் தொடங்கியது.
இந்த காலகட்டத்தில், 20 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 27 ஆக இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டின் இறுதியில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு அரை சதங்கள் அடித்த பிறகு, அவர் பழைய மோசமான தருணங்களை திரும்பிப் பார்க்கவில்லை, அவருடைய சராசரி அதன் பின்னர் சரியவில்லை. அவரது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் 45 க்கு கீழே அவரது ரன் சராசரி இறங்கவே இல்லை.
2003-2004 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸிலிருந்து கோலி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த நேரத்தில் சச்சின் இதேபோன்ற நெருக்கடியான கட்டத்தில் இருந்தார். ஆனால் சிட்னியில் அவர் 436 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 241 ரன்கள் எடுத்தார். 10 மணி நேரம் கவர் டிரைவ் விளையாடாமல் பேட்டிங் செய்தார். கண்டிப்பாக கோலி அத்தகைய சாதனைகளை மீண்டும் செய்யக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் தான்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு