விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார்.
முதல் இன்னிங்ஸில் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் சேர்த்த கோலி, வேகப்பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆஃப் ஸ்டெம்ப் தெறிக்க ஆட்டமிழந்து வெளியேறினார்.
உள்நாட்டுப் போட்டிகளில் பயிற்சி
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் மோசமாக பேட் செய்ததைத் தொடர்ந்து, இழந்த ஃபார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டது.
இந்திய அணியில் ஏ-பிளஸ் பிரிவு ஒப்பந்தத்தில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் நீண்டகாலமாக உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்காமல் சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தனர்.
இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
கோலியின் கவலை தரும் ஃபார்ம்
அடிப்படையில், 2000ஆம் ஆண்டுக்கு அடுத்தாற்போல் நவீன கால கிரிக்கெட்டில் விராட் கோலியை ஒதுக்கி வைத்துவிட்டு கிரிக்கெட்டை பற்றிப் பேசமுடியாத அளவுக்கு அவர் பங்களித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 27ஆயிரம் ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 13,906 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,230 ரன்கள், டி20 போட்டிகளில் 4,188 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், 72 அரைசதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள், 31 அரைசதங்கள் என்று கோலியின் சாதனைகள் ஏராளம்.
ஆனால் சமீப காலமாக, விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 93 ரன்கள், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் முதல் டெஸ்டில் சதம் அடித்த பிறகு, மீதமுள்ள 4 டெஸ்ட்களிலும் 91 ரன்கள் என கோலியின் ஃபார்ம் விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஐந்து ஆண்டுகளில் நிலை என்ன?
கோலியின் கடந்த 5 ஆண்டுக்கால டெஸ்ட் சராசரி அவரது ஃபார்ம் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் பேட்டிங் சராசரி 54.97 ஆக இருந்தநிலையில், தற்போது 48.57 ஆகக் குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து கோலியின் டெஸ்ட் சராசரி 30.72 ஆகக் குறைந்த நிலையில், கடந்த 10 டெஸ்ட்களில் 22.47 என சராசரி சரிந்துவிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து விராட் கோலி டெஸ்டில் மூன்று சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆமதாபாத்தில் 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் 136 ரன்களும், 2024ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் பெர்த் டெஸ்டில் ஒரு சதமும் கோலி அடித்தார்.
மேற்கிந்தியத் தீவுகளில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இதைத் தவிர்த்து கடந்த 5 ஆண்டுகளில் கோலி டெஸ்டில் எந்த சதமும் அடிக்கவில்லை.
கோலியின் பொற்காலம்
ஆனாலும், விராட் கோலி தொடர்ந்து இந்திய அணியில் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் தொடர்கள் என அனைத்திலும் இடம் பெற்றார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் பலவீனம் ஒட்டுமொத்தமாக எதிரணிகளுக்கு அம்பலப்பட்டுவிட்டது.
இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, ராகுல் திராவிட் இருந்தவரை பேட்டிங்கில் சொதப்பும் சமயங்களில் அவர்கள் கோலியின் தவறுகளைத் திருத்தி வந்தனர். அப்போது பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் இருந்தது கோலிக்கு பெரிய உதவியாக இருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் 2014 முதல் 2019ஆம் ஆண்டுவரை கோலி உச்சத்தில் இருந்தபோது கோலி 80 சர்வதேச சதங்களை விளாசினார் அப்போது அவருக்கு பிரத்யேகமாக பேட்டிங் பயிற்சி அளித்து தவறுகளைத் திருத்தியதில் சஞ்சய் பங்கருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் சஞ்சய் பங்கர் இல்லாத நிலையில் டெஸ்ட் போட்டிகளில் கோலி 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
வெளிப்பட்ட பலவீனம்
கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் பலவீனப் புள்ளி எங்கிருக்கிறது என்பதை எளிதாக எதிரணியினர் கண்டு கொண்டு விரைவாக பெவிலியன் அனுப்பிவிடுகிறார்கள்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சௌத்தியின் வேகப்பந்துவீச்சிலும், சான்ட்னரின் சுழற்பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்த கோலி, ஆஸ்திரேலிய தொடரில் ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தில் தொடர்ந்து விக்கெட்டை கோட்டைவிட்டார். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த எதிரணியினர் சிறிது ஹோம்ஓர்க் செய்தாலே போதுமானது என்ற நிலை வந்துவிட்டது.
இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில் இன்னும் தொடர்ந்து விளையாடுவேன் என்று கோலி அறிவித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தயாரா?
பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி நடக்கும் நிலையில் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதைக் கண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட பிசிசிஐ சமீபத்தில் உத்தரவிட்டது. இதை ஏற்று ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கோலி ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்கள்.
இதில் ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருப்பதால் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலிருந்து அவரை நீக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அடுத்ததாக விராட் கோலி, டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவு கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிராக டெல்லி அணியில் 12 ஆண்டுகளுக்குப் பின் இடம் பெற்றார்.
முதல் நாளான நேற்று விராட் கோலியை நீண்ட காலத்துக்குப் பிறகு சொந்த மைதானத்தில், உள்நாட்டுப் போட்டியில் பார்க்கும் மகிழ்ச்சியில் டெல்லி அருண் ஜேட்லி மைதானமே ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது.
மைதானத்தில் விராட் கோலியை பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசாரின் இரு சக்கர வாகனங்கள் நொறுக்கப்பட்டன, ரசிகர்கள் காயமடைந்தனர். முதல்நாள் ஆட்டத்தில் விராட் கோலியின் செயல்களும், ரசிகர்களைப் பார்த்து அவர் செய்த செய்கையும் ஆட்டத்தில் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. கோலியின் வருகையை சர்வீசஸ் அணியும், டெல்லி அணி வீரர்களும் வரவேற்று, புதிய உத்வேகத்தைப் பெற்றனர்.
முதல் நாளில் சர்வீசஸ் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளான இன்று டெல்லி அணியில் விராட் கோலியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் குவிந்தனர். டெல்லி மைதானமே ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தது.
கோலி எப்படி ஆட்டமிழந்தார்?
டெல்லி 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில் விராட் கோலி களமிறங்கினார். அவர் களத்துக்கு வந்தது முதலே வேகப்பந்துவீச்சுக்குத் திணறினார். குணால் யாதவ் வீசிய பந்துவீச்சில் ஆஃப்சைடு விலகிச் சென்ற 10 பந்துகளில் 2 பந்துகள் கோலியை பீட்டன் செய்தன.
அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வான்பந்துவீசினார். ஹிமான்சு சங்வான் பந்துவீச்சில் முதல் பந்தில் கோலி பவுண்டரி விளாசினார்.
அடுத்த பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஹிமான்சு சிறிது லென்த்தை இழுத்துப் பந்துவீசினார், இதை ஃபிரன்ட் ஃபுட்டில் கோலி விளையாட முயன்றபோது, பந்து இன்ஸ்விங் ஆகி, கோலியின் பேட்டுக்கும், கால்காப்புக்கும் இடையே ஸ்டெம்பில் பட்டு போல்டானது.
பந்து ஸ்டெம்பில் பட்ட வேக்தில் ஆஃப் ஸ்டெம்ப் “கார்ட்வீலிங்” பல்டி அடித்து தெறித்து விழுந்தது. விராட் கோலி 15 பந்துகளைச் சந்தித்து 6 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலியின் பேட்டிங்கை பார்க்க குவிந்த ரசிகர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததும் அடுத்த சிறிது நேரத்திலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினர். காலையில் மனிதத் தலைகள் நிரம்பிக் காட்சியளித்த மைதானம், சிறிது நேரத்திலேயே இருக்கைகள் மட்டுமே இருக்கும் மைதானமாக மாறியது.
இந்திய அணியில் கோலி நீடிக்க வேண்டுமா?
கடந்த 5 ஆண்டுகளாக விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தெரிந்தே அவர் அணியில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பாக ரஞ்சி கோப்பைத் தொடரில் சீனியர் வீரர்கள் விளையாடினால் ஃபார்முக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பிசிசிஐ ரஞ்சி கோப்பையில் விளையாட உத்தரவிட்டது.
ஆனால், கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் போன்றோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும்போது எந்த அடிப்படையில் பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சேர்க்கப் போகிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களி விமர்சித்து வருகின்றனர்.
ஃபார்மில் இல்லாத கோலி இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டுமா என ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள விவாதம் குறித்து சென்னை எம்ஆர்எஃப் அணியின் பயிற்சியாளர் எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழிடம் பேசுகையில், “இதுபோன்ற விவாதங்கள் சீனியர் வீரர்கள் ஃபார்மில் இல்லாதபோது எழுவது இயல்புதான். கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஃபார்ம் இழப்பதும், மீட்பதும் இயல்பானது. இதை வைத்து கோலி போன்ற பெரிய வீரரை அணியில் இருந்து நீக்கக் கோருவது அபத்தமானது,” என்று தெரிவித்தார்.
மேலும், “சரியான தருணம் வரும்போது கோலி நிச்சயம் விளையாடுவார், சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய போட்டித் தொடருக்கு கோலி, ரோஹித் இருவரும் கண்டிப்பாக தேவை. இருவரின் பெயரைக் கேட்டாலே எதிரணிக்கு ஒருவிதமான பயம் இருக்கும்போது இருவரையும் நீக்குவது தோல்வியை ஒப்புக்கொள்வது போலாகும்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது யூட்ப் பக்கத்தில் கோலி குறித்து சமீபத்தில் கூறுகையில், “கோலியின் ஃபார்ம் தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. மோசமான ஃபார்மில் இருக்கிறார் எனக் கூறி கோலி மீது விமர்சனங்கள் வருகின்றன. கோலி உலகளவில் சிறந்த பேட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கோலியின் இழந்த ஃபார்மை மீட்க வேண்டுமா, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடினால் அவர் இழந்த ஃபார்மை மீட்டுவிடுவார்,” எனத் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு