படக்குறிப்பு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர்.
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இருப்பினும், இத்தொடரின் முந்தைய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதால், தொடரை அந்த அணி வென்றுள்ளது.
இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 69 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் ஷர்மா சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா- விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் குவித்தது.
தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ்
இந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த குல்தீப் யாதவ் இம்முறை அணியில் இடம்பெற்றார். நித்திஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இப்போட்டியில் ஆடவில்லை. அந்த இடத்தில் குல்தீப் களமிறங்கினார். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்களாகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முதல் 3 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்திருந்தவர்கள், அதன்பின் மெல்ல ரன் வேகத்தை அதிகரித்தார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய 7வது ஓவரில் மார்ஷ் சிக்ஸரும், ஹெட் பௌண்டரியும் அடித்து ரன் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள்.
6.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஹெட், சிராஜ் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் அளித்து அவுட் ஆனார். 25 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்கள் எடுத்தார்.
ஹெட் வெளியேறியபிறகு மிட்செல் மார்ஷ் அதிரடியைத் தொடர்ந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே பந்துவீசிய குல்தீப் ஓவரிலும் ஓவருக்கு ஒரு பௌண்டரி அடித்தார். அவரை சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அக்சர் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் மார்ஷ் போல்டானார். அவர் 50 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்களை கடந்தது.
டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆரம்பத்தில் நன்கு ரன் சேர்த்தனர். அனைவருக்குமே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அவர்களால் அதைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. மேட் ரென்ஷா மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடி அரைசதம் (56 ரன்கள்) அடித்தார்.
மிடில் ஆர்டரும், லோயர் மிடில் ஆர்டரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாததால் 46.4 ஓவர்களிலேயே 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.
அக்ஷர் பட்டேல்- வாஷிங்டன் சுந்தரின் ‘ஸ்பெல்’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அக்ஷர் பட்டேல்
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் இந்திய அணியை இந்தப் போட்டியில் நல்ல நிலைக்குக் கொண்டுவந்தது அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இணைந்து வீசிய ஸ்பெல் தான்.
ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கையாகவும் அதிரடியாகவும் ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்த இரு ஸ்பின்னர்களும் தான். இவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியால் தான் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 6 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து மிட்செல் மார்ஷின் மிக முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் அக்சர் .
மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா என நன்கு ஆடிக்கொண்டிருந்த இரண்டு பேட்டர்களை வெளியேற்றினார் வாஷிங்டன் சுந்தர். பிரசித், சிராஜ், குல்தீப் ஆகியோரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய 237 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ரோஹித்- கோலி பார்ட்னர்ஷிப்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில்லும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடி வந்த நிலையில், 10வது ஓவரில் அலெக்ஸ் கேரி வீசிய பந்தில், ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில்.
அவர் 26 பந்துகளில், 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என 24 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில்- ரோஹித் ஜோடி 69 ரன்களை எடுத்திருந்தது.
அதன் பின், விராட் கோலி களமிறங்கினார். முந்தைய இரு போட்டிகளிலும் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்- அவுட்’ ஆகியிருந்தார்.
முதலில் தடுமாறிய கோலி, விரைவாக மூன்று பவுண்டரிகளை அடித்து, நிலைத்து நின்று ஆட தொடங்கினார். மறுபுறம், ரோஹித்தும் அதிரடியாக விளையாடிய நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர்.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர்.
இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 38.3 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும். தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிவந்த கோலி, அதிலிருந்து மீண்டு தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் இந்தப் போட்டியில் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோலி, தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடப் போகிறார்கள் என்ற செய்தி வெளியானதும், அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த எதிர்பார்ப்பை இந்தப் போட்டியில் தான் ரோஹித்- கோலி ஜோடி பூர்த்தி செய்துள்ளது.
ஆஸ்திரேலியே அணி 2-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை வெல்ல, இந்திய அணி இந்த போட்டி மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
“எப்போதும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவதை விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டின் இனிமையான நினைவுகளை மறக்க முடியாது. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பி வருவோமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் எந்தமாதிரியான பாராட்டுகளைப் பெற்றாலும், கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்,” என்று போட்டிக்குப் பிறகு ரோஹித் கூறினார்.
விராத் கோலி பேசுகையில், “தொடர்ச்சியான டக் அவுட்களில் இருந்து மீண்டு வந்தது நல்லது. ரோஹித்துடன் பேட்டிங் செய்வது எளிது, இது போட்டியை வெற்றியோடு முடிக்கும் ஒரு ஆட்டமாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டோம். அப்படித்தான் வெற்றி பெற முடியும். இந்த நாட்டிற்கு வருவதை நாங்கள் எப்போதும் விரும்புவோம்.” என்று கூறினார்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் மிகச்சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். மிடில் ஓவர்களில் நிலைமையை சரிசெய்தோம். நமது அணியின் ‘சேஸ்’ (Chase) பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மிடில் ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர், வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்ஷித் மிடில் ஓவர்களில் வேகமாக பந்து வீசினார், அது தான் எங்களுக்குத் தேவை. ரோஹித், கோலி இத்தகைய ஆட்டத்தை பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர். மீண்டும் ஒருமுறை அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.” என்று கூறினார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 202 ரன்கள் எடுத்து, ‘தொடரின் நாயகன்’ பட்டமும், மூன்றாவது போட்டியில் அடித்த சதத்திற்காக ‘ஆட்ட நாயகன்’ விருதையும் வென்றார் ரோஹித் சர்மா.