12
விரிவுரையாளர் கொலை – விசாரணைகளை பாதிக்கும் வாக்குமூல தகவல்கள்!!!
— — —
*சமூக வலைத்தளங்கள் மாத்திரம் அல்ல, சில பொலிஸார் வாக்குமூல வெளியேற்றத்துக்கு உடந்தை…
*உறவினர்களை மனரீதியாக பாதிக்கும் செய்திகள்…
*இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்க 6.2 – 6.5 விதிகள் சொல்வது என்ன?
*நிகழ்நிலை காப்புச் சட்டம், உரிய முறையில் தயாரிக்க மறுத்த அரசாங்கம்…
*செவ்வந்தியின் வாக்குமூலங்கள் வெளியானமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால்….
— — —
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், கொலை செய்யப்பட்டமை, அது தொடர்பாக பொலிஸார் பெறும் வாக்குமூலங்கள், சமூக வலைத்தளங்களில் வெளி வருகின்றமை ஆபத்தானது – ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறானது என்பது உண்மை..
ஆனால் இதற்குப் பொலிஸார் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
ஏனெனில், ஊடகங்களுக்கு ஒழுக்க விதிகள் இருப்பது போன்று, குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் முறைகள் பற்றி பொலிஸாருக்கும் ஒழுக்க நெறிகள் உண்டு.
நேபாளத்தில் இருந்து செவ்வந்தி கடத்தி வரப்பட்ட தகவல்கள், செவ்வந்தி வழங்கிய வாக்குமூலங்கள் பிரதான ஊடகங்களில் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தன.
இதற்கு சில பொலிஸ் அதிகாரிகள் காரணம். பொலிஸார், தங்களுடைய சில வீரதீர செயல்களை ஊடகங்களில் வெளியிடலாம். அதற்கு உரிமை உண்டு. அது சர்வதேச நடைமுறையும் கூட.
ஆனால், சமூகத்தை பாதிக்காத முறையில் சில ஒழுக்க விதிகளின் கீழ், செவ்வந்தி விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் செயற்படவில்லை.
செவ்வந்தியை சில பொலிஸாரும் சில ஊடகங்களும் பிரமுகராக்கி, செவ்வந்தி அந்தக் கொலைக்கு உதவி செய்த முறை கூட, சில சமூக வலைத் தளங்களில் சாதனையாக சித்தரிக்கப்பட்ட தொனி (Tone) தெரிந்தது.
கொலை செய்தால், பிரமுகராக முடியும் என்ற ஒரு பிழையான பிம்பம் இளம் சமூகத்தில் பரவியது.
அது போன்ற ஒரு பிம்பம் விரிவுரையாளர் கொலை விவகாரம் ரீனேஜ் பருவ பிள்ளைகளுக்கு தவறான கற்பிதம் செய்கிறது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் இலங்கையில் இல்லை. கணினி குற்றப் பிரிவில் (Cyber Crime Unit / Computer Crime) முறையிட்டால். பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இரண்டொரு சம்பவங்களைத் தவிர, பகிரங்கமாகக் குற்றம் இழைக்கும் சில சமூக வலைத்தளத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
குறிப்பாக வடக்கு கிழக்கில் நடைபெறும் பல குற்றச் செயல்களுக்கு எதிராக கணினி குற்றப்பிரிவு சட்ட நடவடிக்கை எடுப்பதே இல்லை…
சிங்களப் பகுதிகளிலும் சில குற்ற செயல்கள் பற்றிய விடயங்களில், கணினி குற்றப்பிரிவு நடவடிக்கை எடுப்பதில்லை. அதில் அரசியல் நோக்கம் இருக்கலாம்…
இப் பின்னணயில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது, ஊடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
அரசியல் ரீதியான கருத்துக்கள் – அரசாங்கத்தை விமர்சிக்கும் முறைகள் போன்றவற்றில் இச் சட்டம் பல குளறுபடிகளுடன் அமைந்திருந்தமை எதிர்ப்புக்கு பிரதான காரணம்.
சமூக வலைத்தளங்கள், சில முகவரி அற்ற செய்தி இணையங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஒழுங்குமுறை (Regulation) இருக்க வேண்டும் என்பதில் ஊடக அமைப்புகள் கவனம் செலுத்தி இருந்தன .
ஆனால், சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தல் என கூறிக் கொண்டு தொழில்முறை பத்திரிகையாளர்களை (Professional journalists) கட்டுப்படுத்தும் நோக்கம், சட்டத்தில் இருந்தது.
ஆகவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான கருத்துகள்- ஒழுக்க நெறிகளுக்கு மாறான செய்திகள் எல்லாவற்றுக்கும் காரண – காரியமாக அமைவது பொறுப்பு அற்ற அரசியல் தலைவர்கள் தான்.
2023 இல் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உரிய முறையில் தயாரிக்கப்பட்டு, பிரித்தானிய விதிகளை போன்று அமுல்படுத்தி இருந்தால், விரிவுரையாளர் கொலை – செவ்வந்தி கைது ஆகிய செய்திகளை வெளியிட்ட முறைக்கு எதிராக, சில சமூக சமூக வலைத்தளங்கள் – சில யூரிப் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனாலும் விரிவுரையாளர் கொலை பறறிய வாக்குமூலங்களை பிரசுரித்த சில செய்தி இணையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
ஊடக ஒழுக்க விதிகள் – செய்தியாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய விளக்கங்கள் பின்வருமாறு;
- A) வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் நீதிமன்ற செய்திகளை குறிப்பாக கொலை போன்ற குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு, இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (Editor’s Guild of Sri Lanka) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு Press Complaints Commission of Sri Lanka ஆகியவற்றின் நெறிமுறைகள் உண்டு.
- B) செய்திகள் துல்லியமாக, சிதைக்கப்படாமல், பக்கம் சாராமல் இருக்க வேண்டும். விசாரணையில் உள்ள வழக்குகள், பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது, நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) ஏற்படாமல் கவனமாக எழுத வேண்டும்.
அதாவது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முன்னர் பொலிஸார் சந்தேக நபர்களிடம் பதிவு செய்யும் வாக்குமூலங்கள் செய்தியாகப் பிரசுரிக்க முடியாதவை.
(சில வாக்குமூலங்களை பிரசுரிக்கலாம். அனுபவமுள்ள செய்தியாளார்கள் அதனை நிதானமாக கையாள்வர்)
- C) இவை பற்றி பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின், ஒழுக்க விதி 2 – 6.5 ஆகிய பகுதிகளில் உண்டு. குறிப்பாக இள வயதினர் புரியும் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் படங்களும் பெயர்களும் தவிர்க்கப்பட வேண்டும்.
சங்கத்தின் ஏனைய விதிகளிலும் அவமதிப்பு பற்றிய விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, பொலிஸாரிடம் சந்தேகநபர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் (statements / confessions) நேரடிச் செய்தியாக வெளியிடுவது சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கும் உள்ளாகும். அதாவது, அது தவறான தகவல் பரப்பு குற்றமாக கருதப்படும்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்கள், மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை மாத்திரம் சட்டரீதியாக பிரசுரிக்க முடியும்.
பொலிஸாரின் விசாரணைகள் முடிவடையும் முன்னர், ஆரம்பத்தில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் செய்தியாக வெளிவந்தால், தொடர்ச்சியான விசாரணைக்கு அது இடையூறாக அமையும், அது வழக்கின் நியாயத்தை பாதிக்கும்.
பொலிஸாரின் விசாரணையில் (Police investigation) பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் சட்ட ரீதியான உண்மையான ஆதாரங்கள் (legal proof) அற்றவை.
எந்தவிதமான அழுத்தங்களும் (voluntary) இன்றி நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாக்குமூலங்கள் மாத்திரமே சட்ட ரீதியானதாக அமையும்.
ஆகவே, பாரதூர குற்றச் செயல்கள் குறிப்பாக கொலை போன்ற விடயங்களில் பொலிஸார் பெறும் வாக்குமூலங்கள் அல்லது பொலிஸ் வெளியிடும் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு என கருதப்படும்.
ஆகவே, சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அந்த வாக்குமூலங்களை உண்மை என கருதி வெளியிடுவது குறித்த ஊடக நிறுவனத்தின் தவறான வழிநடத்தல் என கருதப்படும்.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை அந்த சந்தேக நபர் குற்றவாளி அல்ல (presumption of innocence)
அதுவும் கொலை குற்றங்கள் தொடர்பான விடயங்களில் பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட சந்தேக நபர் அல்லது சந்தேகநபர்களின் உறவினர்கள் – நண்பர்கள் அத்தகைய ஊடக நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும்.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து, அவர்களின் பரிந்துரையில், குறித்த செய்தி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால் ஆணைக்குழுவின் பரிந்துரையுடன் வழக்குத் தாக்கல் செய்யவும் முடியும்.
ஆகவே, பொலிஸ் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகவல்கள், நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட (public record) தகவல்கள், பொதுப் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படும் அறிவிப்புகள் ஆகியவற்றை ஊடகங்கள் வெளியிட முடியும்.
விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தகவல்கள், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் போன்றவற்றை ஊடகங்கள் வெளியிட முடியாது என்பது கட்டாய விதி. இவை சர்வதேச ரீதியான நடைமுறைகளும் கூட.
பிரதான ஊடகங்கள் கவனிக்க வேண்டியவை….
1) குறிப்பாக பொலிஸாருக்கு (Police) வழங்கிய வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் முழுமையாக ஏற்கப்படாது.
2) பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு (Police officer)-வழங்கிய வாக்குமூலங்கள் செய்தியில் பயன்படுத்த முடியாது.
3) பொலிஸ் தலைமையகம் தவிர்ந்த ஏனைய பொலிஸாரின் அறிக்கை (Police statement) சட்டப்படி பலவீனமானது.
குறிப்பு – தவறான தகவல் வெளிப்பாடுகள் – ஒழுக்க விதிகளுக்கு மாறான செய்திகளை “ஊடக ஜனநாயகம்” – ”ஊடக சுதந்திரம்” ”கருத்து சுதந்திரம்” என்ற ரீதியில் ஒப்பிட முடியாது.
-அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்