• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு | Rs 4 lakh each to families of rain related deaths Thangam Thennarasu

Byadmin

Oct 21, 2025


விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், “வடகிழக்கு பருவமழையையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயாராக உள்ளது. பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளனர். கடந்த 2 நாள்கள் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 19 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இறப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில் அவர்களுக்கு உரிய நிவாரணமாக ரூ.4 லட்சம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜபாளையம் பகுதியில் ஒரே இடத்தில் சுற்றுச்சுவர் விழுந்து 35 ஆடுகள் இறந்துள்ளன. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, குடிசை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பைத் தாண்டி, சேதமடைந்த வீடுகளை சீரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிவாரணம் வழங்குவது ஒருபுறம் இருந்தாலும் எந்த வகையிலும், உயிர்ச் சேதம் ஏற்படக் கூடாது என்பது தான் முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ள ஆணையும் அறிவுரையும் ஆகும். அதுதொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்காக தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்கும்.

நீர்வளத்துறை, வருவாய்த்துறை மூலம் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கும் இடங்களாக 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அணைகள் திறக்கும்போது கீழ் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருவாய்த்துறை இப்பணிகள் ஒருங்கிணைக்கும்.” என்றார்.



By admin