• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

விளையாட்டு அமைதியான போட்டியால் உலகை ஒன்றிணைக்க வேண்டும் | சர்வதேச ஒலிம்பிக் குழு

Byadmin

Sep 22, 2025


மோதல் மற்றும் பிரிவினையால் உலுக்கிக்கொண்டிருக்கும் உலகில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளையாட்டுத்துறை இருக்கவேண்டும் என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை உறுதியாக இருக்கிறது.

மேலும், அமைதியான போட்டி சூழலில் விளையாட்டுத்துறை  உலகை  ஒன்றிணைக்க வேண்டும்   என நிறைவேற்றுச் சபை மீண்டும்  வலியுறுத்துகிறது.

இது ஒலிம்பிக் இயக்கத்தின் மையத்தில் இருப்பதுடன் ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கையிலிருந்து ஊற்றெடுக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக இவ்வுலகில் பாவம் அறியாத இலட்சக் கணக்கான மக்களைப் பாதிக்கும் பல யுத்தங்களும் மோதல்களும் இடம்பெறுகின்றன. போரினால் பாதிக்கப்படுவோர் எண்ணற்றவர்கள்.

நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் வன்முறை மூலம் அல்ல பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும் என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழு ஆழமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் போட்டிகள் சீர்குலைக்கப்படுவது, போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளினால் வீரர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, அரசியல் பதற்றங்கள் காரணமாக போட்டிகளைப் புறக்கணித்தல் மற்றும் போட்டிகள் இரத்துச் செய்யப்படுதல் போன்றவை குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு மிகுந்த கவலை கொண்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் வீரர்கள் அமைதியாக பங்குபற்றும் உரிமையைப் பறிப்பதுடன் விளையாட்டுத்துறையின் பலத்தை ஒலிம்பிக் இயக்கம் எடுத்துக்காட்டுவதையும் தடுக்கிறது.

சமூகக் கட்டமைப்பிற்குள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பதையும் ஒலிம்பிக் இயக்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுத்துறை ஸ்தாபனங்கள் அரசியல் நடுநிலைமையைப் பேணவேண்டும் என்பதையும் ஒலிம்பிக் சாசனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் விளையாட்டுத்துறையின் சுயாட்சி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நடுநிலைமையை ஐக்கிய நாடுகள் சபை தனது பொதுச்சபை தீர்மானங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானங்கள் வெறும் குறியீடுகள் அல்ல, மாறாக உலகின் பிளவுகளிலிருந்து விளையாட்டுத்துறையின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான அறைகூவலாகும்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஒன்றிணைக்கும் திறன் மறுக்க முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அகதி ஒலிம்பிக் அணியினர் ஒலிம்பிக் கிராமத்தில் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்ததுடன் விளையாட்டு அரங்கில் அமைதியாக  போட்டியிட்டனர்.

இதே உணர்வுடன் டக்கார் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஒவ்வொரு தேசிய ஒலிம்பிக் குழுவும் தங்களது விளையாட்டு வீரர்களுடன் பங்கேற்பதற்கு தேவையான ஒரு சிறந்த மார்க்கத்தை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை உறுதிபூண்டுள்ளது.

இதன் நிமித்தம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் எதிர்காலத்திற்கு பொருத்தமான செயன்முறையை நிறைவேற்றும் வகையில் ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கைகளை பாதுகாப்பதற்கான செயற் குழு ஒன்றை அமைக்க சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.

இது சர்வதேச ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் விளையாட்டு விழா, விளையாட்டுத்துறை ஆகியன அரசியல் நடுநிலைமையும் அமைதியான போட்டியில் உலகை ஒன்றிணைப்பதையும் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒலிம்பிக் அடிப்டைக் கொள்கைகளுக்கு அமைய ஒலிம்பிக் பெறுமதிகளை எடுத்துக்காட்டுவதிலும் சமாதான தூதர்களுக்கான பங்கை வகிப்பதிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நம்பமுடியாத வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்பது உறுதி.

 

By admin