• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

“விவசாயிகளின் வயிற்றில் அடித்து, நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன்” – திருவாரூரில் விஜய் காட்டம் | Vijay on the paddy procurement centres scam

Byadmin

Sep 20, 2025


திருவாரூர்: “நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என பல கோடி ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், “இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் பேசியது: “திருவாரூர் என்றாலே தியாராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகத்துக்கு வரும். ஏனெனில், அது இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியது நான்தான் என்று மார்தட்டி சொன்னது யார் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.

ஆனால், அவருடைய மகனான முதல்வர் இப்போது என்ன செய்கிறார்? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டைய போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக்கிறாரு. திருவாரூர் மாவட்டம்தான் அவங்களோட சொந்த மாவட்டம்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. ஆனா, இங்க திருவாரூர் கருவாடா காயுது. அதை கண்டுகொள்ளவே இல்லை.

உங்க அப்பா பெயர்ல பேனா வைக்கணும் சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயர வைக்கறீங்க. ஆனா, உங்க அப்பா பிறந்த இந்த திருவாரூர் மாவட்டத்துல அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சார். நாகப்பட்டினம் போன்றே திருவாரூர்லயும் அதிகமா குடிசைப் பகுதிகள் இருக்கு. இங்க இருக்கும் பல்கலைக்கழகத்துல எல்லா துறைகளும் உள்ளதா? இருக்காதே! இங்க இருக்கற மருத்துவக் கல்லூரியே வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையிலதான் இருக்கு. இங்க இருக்கிற மருத்துவக் கல்லூரியில் எல்லா கருவிகளும் வேலை செய்யுதா? செய்யாதே!

திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்துக்கு சரியா ஒரு ரோடு இருக்காதே! கும்பகோணம், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், நீடமாமங்கலம் ஆகியவற்றுக்கு புதுசா ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 50 வருஷமா நிறைவேறாம இருக்கு. இந்த மாவட்டத்துல ஒரு அமைச்சர் இருக்காரு. அவருடைய வேலை, முதல்வரோட குடும்பத்துக்கு சேவை செய்வது. அதுதான் அவரோட வேலை. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம புரிய வைக்கணும்.

உங்களுடன் ஸ்டாலின்… உங்களுடன் ஸ்டாலின்… உங்களுடன் ஸ்டாலின்-னு உங்க குடும்பத்துக்கு மட்டும்தான் நீங்க சொல்லிக்கணும். மக்கள்கிட்ட நீங்க அதை சொல்லவே முடியாது. ஏன்னா, நீங்கதான் மக்கள் கூடவே இல்லையே. இதை நான் சொல்லல. ஒரு ஃபேமசான வார பத்திரிகையில் சொல்லி இருக்காங்க. அதைத்தான் நான் சொல்றேன்.

டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது. அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல ரூ.40 கமிஷன் வாங்கறாங்க. ஒரு டன்னுக்கு ரூ.1,000 கமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க. இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.

சி.எம். சார்… இது உங்க ஆட்சியில நடந்திருக்கு. உங்களுக்கு வேனா, 40-க்கு 40 என்பது தேர்தல் ரிசல்டா இருக்கலாம். ஆனா, இந்த டெல்டா விவசாயிகளுக்கு 40-க்கு 40-ன்னா அது அவங்க வயித்துல அடித்து நீங்க வாங்கன கமிஷன். சி.எம். சார் இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க” என கேள்வி எழுப்பினார் விஜய்.

தவெகவின் லட்சியம் என்ன என்பது குறித்துப் பேசிய விஜய், “கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே. எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம். எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு என்று அடிப்படை விஷயங்களில் சமரத்துக்கு இடமே இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை என்ன என்பதை எளிமையா சொல்லணும்னா, ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி. இதுதான் எங்கள் லட்சியம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “எங்கே போனாலும், இந்தக் கூட்டம் ஓட்டு போடாது என்று சொல்கிறார்கள். அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா?” என தவெக தொண்டர்களைப் பார்த்து விஜய் கேட்க, இல்லை இல்லை என அனைவரும் கூற, அனைவருக்கும் நன்றி என விஜய் தெரிவித்தார்.



By admin