0
தமிழ் சினிமாவில் திரையுலக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கும் நடிகரான விஷால் ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ எனும் திரைப்படத்தில் விஷால், தம்பி ராமையா, யோகி பாபு , அர்ஜய் , துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சுப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி வந்த இயக்குநர் ரவி அரசுக்கும், படத்தின் நாயகன் ஆன விஷாலுக்கும் படப்பிடிப்பு தளத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இயக்குநர் ரவி அரசு படத்திலிருந்து விலக.. அவருக்கு பதிலாக தயாரிப்பாளரின் நலனுக்காக படத்தினை இயக்கும் பொறுப்பை விஷால் ஏற்றிருக்கிறார். எனவே இப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதனிடையே விஷால் நடிப்பில் உருவாகி வந்த ‘துப்பறிவாளன் 2’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும், விஷாலுக்கும், அப்படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதும், அதன் காரணமாக ‘துப்பறிவாளன் 2’ படத்தினை தொடர்ந்து விஷால் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது என்பதும் ஆனால் அந்தப் படத்தின் பணிகள் அத்துடன் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.