0
கடந்த ஆண்டில் வெளியான ‘ மத கஜ ராஜா’ படத்தின் பிரம்மாண்டமான வணிக ரீதியிலான வெற்றிக்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்க வேண்டும் எனும் கோரிக்கையை திரையுலக வணிகர்கள் முன் மொழிந்தனர். இதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, ‘புருஷன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணொளியாக படக்குழுவினர் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த அறிமுக காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ எனும் திரைப்படத்தில் விஷால், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. சி. எஸ். அருண்குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பூ வழங்குகிறார்.
‘புருஷன்’ திரைப்படத்தின் அறிமுக காணொளியில் யோகி பாபு சின்னத்திரை நடிகராகவும், குடும்பத் தலைவியாக தமன்னாவும், அவரது புருஷனாக விஷாலும் தோன்றுவதும் மனைவிக்குத் தெரியாமல் கணவன் எக்சன் காட்சிகளில் ஈடுபடுவதும் சுந்தர் சி – விஷால் கூட்டணியின் கலக்கலான கவர்ச்சியான பிரத்யேக முத்திரையும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.