கொலம்பியாவில் உள்ள அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்ட அந்தப் பத்து பாம்புகள், பல நாட்கள் உணவின்றி இருந்தன. பின்னர், அவற்றுக்கு மிகவும் ஆபத்தான உணவொன்று வழங்கப்பட்டது. அந்த உணவு, அதிக நச்சுத் தன்மை கொண்ட டார்ட் தவளைகள்.
இந்தத் தவளைகளின் தோலில் ஹிஸ்ட்ரியோனிகோ டாக்சின்கள், பியூமிலியோ டாக்சின்கள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த வேதிமங்கள் உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சீர்குலைக்கக் கூடியவை.
பத்தில் ஆறு ‘ராயல் கிரவுண்ட் பாம்புகள்’ அந்த ஆபத்தான உணவை உண்பதைவிடப் பட்டினியாகவே இருக்க விரும்பின. மீதமுள்ள நான்கு பாம்புகள் துணிச்சலாக அந்தத் தவளைகளை வேட்டையாடின. ஆனால், இரையை விழுங்குவதற்கு முன், அவை தவளைகளைத் தரையில் வைத்துத் தேய்த்தன.
“சில பறவைகள் தங்கள் இரையின் உடல் மீதுள்ள நச்சு வேதிமங்களை நீக்குவதற்காகத் தரையில் தேய்ப்பதைப் போலவே இதுவும் இருந்தது,” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் வலேரியா ராமிரெஸ் காஸ்டனெடா. இவரும் இவரது குழுவினருமே இந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
அந்த நான்கு பாம்புகளில் மூன்று பாம்புகளுக்கு அந்த உணவால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இரையில் மீதமிருந்த நச்சு வேதிமத்தைக் கையாளும் திறன் அந்தப் பாம்புகளின் உடலுக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
உயிரியல் போர்
உயிரினங்கள் ஒன்றையொன்று கொல்ல, பல கோடி ஆண்டுகளாகக் கொடிய ரசாயனங்களைப் பயன்படுத்தி வருகின்றன. முதலில் தோன்றிய நுண்ணுயிரிகள், தங்கள் போட்டியாளர்களை அழிக்கவும், தாங்கள் நுழையும் செல்களை தாக்கவும் ரசாயனங்களைப் பயன்படுத்தின.
பின்னர் விலங்குகள் தங்கள் இரையை வேட்டையாடவும், வேட்டையாடும் உயிரினங்களிடம் இருந்து தப்பிக்கவும் நச்சு வேதிமங்களைப் பயன்படுத்தின.
தாவரங்களும் தாவர உண்ணிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க இதையே செய்தன. இதற்குப் பதிலடியாக, பல விலங்குகள் இந்த நச்சு வேதிமங்களை எதிர்க்கும் வழிகளைப் பரிணாம வளர்ச்சியில் உருவாக்கின. சில விலங்குகள் அந்த நஞ்சினை சேமித்து வைத்துத் தங்களை எதிர்ப்பவர்கள் மீது ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.
விலங்குகள் நச்சு வேதிமங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்கின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மனிதர்களுக்கான நஞ்சுமுறிவு சிகிச்சைகளை மேம்படுத்த இது உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.
“ஒரு வேதிமத்தின் சில மில்லிகிராம்கள் மட்டுமே போதும், அது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் மாற்றிவிடும்,” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியலாளர் ரெபேக்கா டார்வின்.
பட மூலாதாரம், Hirampereira/ iNaturalist
படக்குறிப்பு, அதிக நச்சுத்தன்மை கொண்ட ‘மூன்று வரிகள் உடைய டார்ட் தவளைகள்’
உயிரினங்கள் பல்வேறு வழிகளில் நச்சுத்தன்மையைப் பெறுகின்றன. சில உயிரினங்கள் தாங்களாகவே நஞ்சினை உருவாக்குகின்றன. உதாரணமாக, புஃபோனிட் தேரைகள் கார்டியாக் கிளைகோசைடுகளை (Cardiac glycosides) உற்பத்தி செய்கின்றன. இவை செல்களின் செயல்பாட்டிற்கு மிக அவசியமான சோடியம்-பொட்டாசியம் பம்பின் (Sodium-potassium pump) இயக்கத்தைத் தடுக்கின்றன.
பஃபர்ஃபிஷ் (Pufferfish) போன்ற சில உயிரினங்கள், நச்சு வேதிமங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை தங்கள் உடலில் கொண்டுள்ளன.
பல விலங்குகள் தங்கள் உணவின் மூலம் நஞ்சினை பெறுகின்றன. நச்சுப் பூச்சிகளை உண்ணும் டார்ட் தவளைகளும், அந்தத் தவளைகளை உண்ணும் பாம்புகளும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.
சில உயிரினங்கள் நச்சு வேதிமங்களை எதிர்க்கும் வகையில் தங்கள் உடலில் மாற்றங்களைச் செய்துள்ளன. உதாரணமாக, நச்சுத்தன்மை வாய்ந்த பால்வீட் தாவரங்களை உண்டு வளரும் பூச்சிகள், அந்தத் தாவரத்தின் நஞ்சு தங்கள் உடலின் சோடியம்-பொட்டாசியம் பம்ப் உடன் இணைய முடியாதவாறு பரிணாம மாற்றம் அடைந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கலிஃபோர்னியா கிரவுண்ட் அணில்கள், ராட்டில்ஸ்னேக் பாம்பின் நஞ்சில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஒரு தனித்துவமான உத்தியைக் கையாளுகின்றன.
பரிணாம தீர்வுகள்
ராயல் கிரவுண்ட் பாம்புகளுக்கு, அவற்றின் கல்லீரல் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. பாம்புகளின் கல்லீரல் சாற்றில் உள்ள ஏதோ ஒன்று டார்ட் தவளைகளின் நஞ்சில் இருந்து அவற்றைப் பாதுகாக்கிறது என்று டார்வின் குழு, செல் வளர்ப்பு சோதனைகளில் கண்டறிந்தது.
மனித உடல் எப்படி ஆல்கஹால் மற்றும் நிக்கோடினை எடுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே, கொடிய நச்சுகளை பாதிப்பில்லாதவையாக மாற்றும் நொதிகள் பாம்புகளில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
பாம்பின் கல்லீரல்களில் நச்சுப் பொருட்களுடன் பிணைந்து, அவை இலக்குகளை அடைவதைத் தடுக்கும் புரதங்களும் இருக்கலாம். இவை நச்சுகளை பஞ்சு போல் உறிஞ்சிக் கொள்கின்றன. சில நச்சுத் தவளைகள் தங்கள் உணவின் மூலம் பெறும் கொடிய சாக்சிடாக்சின் (saxitoxin) மற்றும் அல்கலாய்டு நச்சுகளை எதிர்க்க உதவும் இதேபோன்ற ‘நச்சு உறிஞ்சும் பஞ்சு’ (toxin sponge) புரதங்களை, அவற்றின் ரத்தத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவில் காணப்படும் ராட்டில்ஸ்னேக் (Rattlesnake) பாம்பின் நஞ்சு, ரத்த நாளங்களைச் சிதைப்பது, ரத்தம் உறைவதைத் தடுப்பது உள்ளிட்ட டஜன் கணக்கான நச்சுகளின் கலவையாகும்.
கலிஃபோர்னியா கிரவுண்ட் அணில்கள், அந்தப் பாம்பின் இவ்வளவு கொடிய நஞ்சில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தனித்துவமான உத்தியைக் கையாளுகின்றன.
பாம்புகளின் பிரத்யேக நஞ்சு சுரப்பிகளில் இருந்து நஞ்சு வெளியேறினால், அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பாம்புகளே சில புரதங்களைப் பயன்படுத்துகின்றன. அதேபோன்ற புரதங்கள் இந்த அணில்களின் ரத்தத்திலும் உள்ளன; இவை சில நஞ்சுகளால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன.
பாம்புகளின் வகைகளுக்கு ஏற்ப நஞ்சுகளின் கலவை மாறுபடுகிறது. ‘இந்த அணில்களின் நச்சு எதிர்ப்புத் திறன், உள்ளூர் பாம்புகளின் நச்சுத் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது’ என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் பரிணாம உயிரியலாளர் மேத்யூ ஹோல்டிங் கூறுகிறார்.
இத்தகைய பாதுகாப்பு அமைப்புகள் சிறந்த கவசம் என்று சொல்லவிட முடியாது. அணில்களின் தகவமைப்புகளைச் சமாளிக்க ராட்டில்ஸ்னேக் பாம்புகள் தொடர்ந்து புதிய நஞ்சுகளை உருவாக்கி வருகின்றன. அதோடு, தனது சொந்த நஞ்சையே அளவுக்கு அதிகமாகச் செலுத்திக் கொண்டால் ஒரு ராட்டில்ஸ்னேக் பாம்பேகூட உயிரிழக்க நேரிடலாம் என்கிறார் ஹோல்டிங்.
நச்சுப் பொருட்களுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட விலங்குகள்கூட, தற்காப்பு நடவடிக்கையாக முதலில் அந்த நஞ்சைத் தவிர்க்கவே முயல்கின்றன. எனவேதான், நிலம் சார்ந்து வாழும் பாம்புகள் தங்கள் இரையைத் தரையில் தேய்க்கின்றன; சில ஆமைகள் நச்சுத்தன்மை வாய்ந்த நியூட்களின் (Newts) வயிற்றுத் தோலையும், உள்ளுறுப்புகளையும் மட்டுமே சாப்பிடுகின்றன. கொடிய முதுகுத் தோலை அவை உண்பதில்லை.
பல விலங்குகள் தாங்கள் உட்கொள்ளும் நச்சுப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, அவற்றைத் தங்கள் சொந்த பாதுகாப்புக்காகப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, ஐரிடெசென்ட் டாக்பேன் (Iridescent dogbane) என்ற வண்டு, தனது உணவுத் தாவரங்களில் இருந்து கார்டியாக் கிளைகோசைடுகளை எடுத்து, ஏபிசிபி (ABCB) டிரான்ஸ்போர்ட்டர்களை பயன்படுத்தி, பாதுகாப்பிற்காக அவற்றை அதன் முதுகுப் பகுதிக்கு நகர்த்துகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் (பெர்க்லி) பரிணாம உயிரியலாளர் மற்றும் மரபியல் நிபுணரான நோவா வைட்மேன் மற்றும் அவரது சகாக்கள், கார்டியாக் கிளைகோசைடு (Cardiac glycoside) நச்சுகளை எதிர்க்கும் வகையில் பரிணமித்த நான்கு விலங்குகளை அடையாளம் கண்டனர். இந்தத் திறன் காரணமாக அவற்றால் மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளை உண்ண முடிகிறது.
இதில் ஒன்று, கருப்புத் தலை க்ரோஸ்பீக் பறவை. மெக்சிகோவின் மலை உச்சியில் உள்ள ஃபிர் காடுகளுக்கு குளிர்காலத்தைக் கழிக்க வரும் மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளை இந்தப் பறவை விரும்பி உண்கிறது.
”இதைச் சிந்தித்துப் பாருங்கள், ஒன்டாரியோ புல்வெளியில் உள்ள பால்வீட் தாவரம் ஒன்றில் உருவாகும் ஒரு நச்சு, அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள காட்டில் வாழும் ஒரு பறவையின் உயிரியலை, அது பாதுகாப்பாக உணவு உண்ணும் வகையில் வடிவமைத்துள்ளது. அந்தச் சிறிய மூலக்கூறின் பயணமும், பரிணாம வளர்ச்சியில் அதன் தாக்கமும் ஆச்சரியமளிக்கிறது,” என்று வைட்மேன் கூறுகிறார்.