
241 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்குமார் ரமேஷ். “அதிர்ஷ்டசாலியாக” உணர்வதாக ரமேஷ் கூறும் அதே சமயம், உடல் மற்றும் மன ரீதியாக பெரும் துயரத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற போது விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ரமேஷ் நடந்து வந்த காட்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
தான் தப்பித்தது ஓர் “அதிசயம்” என்று ரமேஷ் கூறுகிறார்.
ஜூன் மாதம் நடந்த அந்த விமான விபத்தில், அதே விமானத்தில் சில இருக்கைகள் தொலைவில் இருந்த தனது தம்பி அஜய் உயிரிழந்ததால் அனைத்தையும் இழந்துவிட்டதாக உணர்வதாக ரமேஷ் வருந்துகிறார்.
பிரிட்டனில் தனது வீட்டிற்கு திரும்பிய பிறகு, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு காரணமாக ரமேஷ் மிகவும் போராடி வருவதாகவும், அவரது மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் அவரால் இயல்பாக பேச முடியவில்லை என்றும் அவரது ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பற்றியது.
அப்போது பகிரப்பட்ட வீடியோவில், பின்னணியில் புகை மண்டலமாய் இருக்க, விஸ்வாஸ் குமார் ரமேஷ், காயங்களுடன் இடிபாடுகளில் இருந்து வெளியே நடந்து வருவது தெரிந்தது.
பட மூலாதாரம், Getty Images
‘ஒரு அதிசயம்’
குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட அவர் பிபிசியிடம் பேசியபோது உணர்ச்சிவயப்பட்டார். “நான் மட்டும்தான் உயிர் பிழைத்த ஒரே நபர். இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இதுவொரு அதிசயம் என்றாலும், எனது தம்பியை இழந்து விட்டேன். என் தம்பிதான் எனது முதுகெலும்பு. கடந்த சில ஆண்டுகளாக அவர் எப்போதும் எனக்கு துணையாக இருந்தார்,” என்று கூறினார்.
அந்தச் சம்பவம் குடும்பத்தில் ஏற்படுத்திய மோசமான தாக்கத்தைப் பற்றியும் அவர் விவரித்தார்.
“இப்போது நான் தனியாக இருக்கிறேன், தனியாக இருப்பதையே விரும்புகிறேன். அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன், மனைவி, மகனுடன் பேசுவதில்லை” என்றும் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவமனையில் இருந்தபோது, தனது படுக்கையில் இருந்து பேசிய அவர், எப்படி சீட் பெல்ட்டை அவிழ்த்து, இடிபாடுகளில் இருந்து ஊர்ந்து வெளியே வந்தார் என்பதை விவரித்தார்.
மேலும், அவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
விபத்தில் உயிரிழந்த பயணிகள் மற்றும் பணியாளர்களில் 169 இந்தியர்களும், பிரிட்டனைச் சேர்ந்த 52 பேரும் அடங்குவர். மேலும், விமானம் விழுந்தபோது தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை மாதம் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதாகக் கூறப்பட்டது.
விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. ரமேஷ் மற்றும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்குவது “எங்கள் முதன்மையான முன்னுரிமை” என்று ஏர் இந்தியா தெரிவித்தது.
39 வயதான ரமேஷ், பிரிட்டனுக்குத் திரும்பிய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது இதுதான் முதல் முறை. அப்போது அவரது அறையில் ஒரு ஆவணப்படக் குழுவும் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நேர்காணலுக்கு முன், பிபிசி ரமேஷின் ஆலோசகர்களுடன் அவரது நலன் குறித்து விரிவாகப் பேசியது.
விபத்து நடந்த நாளின் நினைவுகள் குறித்து கேட்டபோது, “அதைப் பற்றி இப்போது என்னால் எதையும் சொல்ல முடியாது,” என்று அவர் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘மிகுந்த வேதனையில் உள்ளேன்’
உள்ளூர் சமூகத் தலைவர் சஞ்சீவ் படேல் மற்றும் செய்தித் தொடர்பாளர் ராட் சீகர் ஆகியோருடன் லெஸ்டரில் உள்ள படேலின் வீட்டில் நடந்த நேர்காணலில், விஸ்வாஸ்குமார் ரமேஷ், விபத்தை நினைவுகூர்வது மிகவும் வேதனையாக இருப்பதாகக் கூறினார்.
நேர்காணலின்போது சில இடங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
தானும் தனது குடும்பத்தினரும் இப்போது அனுபவிக்கும் வேதனையை அவர் விவரித்தார்.
“இந்த விபத்துக்குப் பிறகு… எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
”உடல், மன ரீதியாக நானும், எனது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த நான்கு மாதங்களாக, என் அம்மா தினமும் கதவருகே உட்கார்ந்து கொண்டு, எதுவும் பேசாமல் இருக்கிறார்.
“நான் வேறு யாரிடமும் பேசுவதில்லை. பேச விருப்பமுமில்லை.
“என்னால் அதிகம் பேச முடியவில்லை. இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன், மனதளவில் மிகவும் அவதிப்படுகிறேன்
“ஒவ்வொரு நாளும் எங்கள் முழு குடும்பத்திற்கும் துயரமான நாளாகவே இருக்கிறது” என்று ரமேஷ் பகிர்ந்து கொண்டார்.
விபத்தில் ஏற்பட்ட உடல் காயங்களைப் பற்றியும் அவர் பேசினார்.
தனது இருக்கையான 11A, அவசர கால வழிக்கு அருகில் இருந்ததால், தான் தப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
தனது கால், தோள்பட்டை, முழங்கால் மற்றும் முதுகில் தொடர்ந்து இருக்கும் வலியால் அவதிப்படுவதாகவும், விபத்துக்குப் பிறகு வேலை செய்யவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும் ரமேஷ் கூறுகிறார்.
மேலும் “நடக்கும்போதும் சரியாக நடக்க முடியவில்லை. மிகவும் மெதுவாக நடக்கிறேன். என் மனைவிதான் உதவுகிறார்,” என்றார்.

இந்தியாவில் மருத்துவமனையில் இருந்தபோதே ரமேஷுக்கு அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் பிரிட்டனுக்குத் திரும்பியதிலிருந்து இதற்கான எந்த மருத்துவ சிகிச்சையும் அவருக்கு கிடைக்கவில்லை என்று அவரது ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
ரமேஷ், மனதளவில் உடைந்துபோய், தற்போது அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருவதாக விவரித்தனர். விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் அவரை சரியாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், விமான நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
“அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியில் உள்ளார்,” என்று சஞ்சீவ் படேல் கூறினார்.
மேலும், “இந்த விபத்து அவரது குடும்பத்தையே சிதைத்து விட்டது.
“இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
‘சரி செய்யுங்கள்’
ரமேஷுக்கு ஏர் இந்தியா 21,500 பவுண்டுகளை இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது.
அவர் அதை ஏற்றுக்கொண்டாலும், இந்தத் தொகை அவரது உடனடியான தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று அவரது ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
விபத்துக்கு முன், இந்தியாவின் டையூவில் ரமேஷ் தனது தம்பியுடன் நடத்தி வந்த குடும்ப மீன்பிடி தொழில் இப்போது முற்றிலும் வீழ்ந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
”ஏர் இந்தியாவை மூன்று முறை சந்திப்புக்கு அழைத்திருந்தோம், ஆனால் அந்த மூன்று சந்திப்புகளும் புறக்கணிக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது” என்று அவர்களது குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் சீகர் கூறினார்.
அதனால், நான்காவது முறையாக கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான வழியாகவே இந்த ஊடக பேட்டிகளை நடத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.
“இன்று இங்கு அமர்ந்து, அவரை (விஸ்வாஸ் குமாரை) இவ்வாறு பேச வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது மிகவும் கவலையளிக்கிறது ” என்ற சீகர், “இன்று இங்கே அமர்ந்திருக்க வேண்டியவர்கள், ஏர் இந்தியா நிர்வாகிகள்தான். இந்த நிலையை சரிசெய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
“தயவுசெய்து எங்களுடன் வந்து பேசுங்கள். அப்போது தான் குறைந்தபட்சம் இந்த துயரத்தை சற்று குறைக்கும் வழியை தேட இயலும்” என்றும் கூறினார்.

டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா, மூத்த அதிகாரிகள் குடும்பங்களைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருவதாகக் கூறியது.
மேலும், “இது போன்றதொரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ரமேஷின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். தொடர்ந்து தொடர்பில் இருப்போம், நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறோம்,” என்றும் தெரிவித்தது
ரமேஷ் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதற்கு முன்பே சந்திப்புக்கு முன்மொழிந்ததாக ஏர் இந்தியா பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு