• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

வி. வசந்திதேவி மறைவு: ஜெயலலிதாவை எதிர்த்த துணிச்சலும் கல்விக்கான பங்களிப்பும்

Byadmin

Aug 1, 2025


தமிழ்நாட்டின் முக்கிய கல்வியாளர் வி. வசந்தி தேவி காலமானார்

பட மூலாதாரம், VASANTHI DEVI

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் முக்கிய கல்வியாளர் வி. வசந்தி தேவி காலமானார்

தமிழ்நாட்டின் முக்கியமான கல்வி ஆளுமைகளில் ஒருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வி. வசந்தி தேவி சென்னையில் வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் காலமானார்.

சென்னை வேளச்சேரியில் வசித்துவந்த அவருக்கு, வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

1938ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் வழக்கறிஞரும் திண்டுக்கல் நகராட்சியின் தலைவருமான வி. வெங்கடதாஸிற்குப் பிறந்த வி. வசந்திதேவி, சென்னை ராணி மேரி கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் பயின்றார்.

இதற்குப் பிறகு, பிலிப்பின்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய அவர், ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றும்போது 1987ல் நடந்த கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதற்குப் பிறகு, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்ர் வசந்திதேவி

பட மூலாதாரம், VASANTHI DEVI

படக்குறிப்பு, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் வசந்திதேவி

கல்வி சீர்திருத்தங்களில் ஆர்வம்

இதன் பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது (1992 – 1998) துணைவேந்தராகவும் செயல்பட்டவர்.

அவர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில்தான், அதற்கான பிரதான கட்டடம் புதுமையான பாணியில் கட்டப்பட்டது.

இதற்குப் பிறகு தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் (2002-05) அவர் நியமிக்கப்பட்டார். சில காலம், சென்னையில் உள்ள சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். கல்வி தொடர்பான சீர்திருத்தங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்த வி. வசந்திதேவி, அதற்கான ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கிவந்தார். 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

“அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோதுதான் மனித உரிமைகள் குறித்து அடிப்படை படிப்பு ஒன்றைத் துவங்கினார். தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அந்த காலகட்டத்தில் பல அமைப்புகளோடு சேர்ந்து இயங்கினார் அவர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பான, பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்கேற்றார்.

மக்கள் கண்காணிப்பகம் மதுரையில் மனித உரிமைகள் தொடர்பான கல்வியை வழங்க இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் ரைட்ஸ் எஜுகேஷன் என்ற கல்வி நிறுவனத்தைத் துவங்கியபோது அதன் தலைவராகச் செயல்பட்டார். அவரது தலைமைத்துவத்தில் இந்தியாவில் 22 மாநிலங்களில் மனித உரிமைகள் கல்வியை அந்த அமைப்பு வழங்கியது. கொரானாவுக்கு முன்பாக கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்று துவங்கி, செயல்பட்டுவந்தார்” என அவருடனான நாட்களை நினைவுகூர்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன்.

ஜெயலலிதாவை எதிர்த்த துணிச்சலும், கல்வியில் ஆளுமையும் கொண்ட வி. வசந்திதேவி மறைவு

பட மூலாதாரம், VASANTHI DEVI

‘துணிச்சலும் நேர்மையும் அடிப்படைப் பண்புகள்’

தமிழ்நாட்டில் கல்வி தனியார்மயமாக்கத்திற்கு எதிரான உறுதியான குரல் அவருடையதாக இருந்தது.

“அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில்தான் தனியார் கல்வி நிலையங்கள் பெருக ஆரம்பித்திருந்தன. அந்தக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதில், முறைப்படுத்துவதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்” என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

துணிச்சலும் நேர்மையும் அவருடைய அடிப்படைப் பண்புகளாக இருந்தன என்கிறார் அவர்.

“வி. வசந்திதேவி அடிப்படையில் ஆசிரியர் சங்கப் பின்னணியில் இருந்துவந்தவர். ஆனால், ஆசிரியர்கள் மீது அவர் விமர்சனங்களை வைக்கத் தயங்கியதேயில்லை. ஒரு முறை அவர் ஆசிரியர்களைக் குறித்து விமர்சனம் வைத்தபோது, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கோரப்பட்டது. ஆனால், அவர் பின்வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக மிக மோசமான அவதூறுப் பிரசாரம் பல்கலைக்கழகத்திற்குள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால், அவர் அசரவேயில்லை. அவருக்கு பயம் என்பதே கிடையாது” என்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வி. வசந்திதேவி பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, செயற்பாட்டாளரான மேதா பட்கரை அழைத்துவந்து ஒரு கூட்டத்தை நடத்தினார். அப்போது பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான எம். ஃபாத்திமா பீவி, இது குறித்து துணைவேந்தரிடம் கேள்வியெழுப்பினார்.

“இதுபோன்ற ஆளுமைகளை வைத்து கூட்டங்களை நடத்துவதுதான் பல்கலைக்கழகங்களின் பணி என்று பதிலளித்தார். அவர் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில்தான் தொ. பரமசிவன், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும்போது பணியிடங்கள் அனைத்தும் மிக நேர்மையாக நிரப்பப்பட்டன. ஒவ்வொரு நாளும் மாலையில் வளாகம் முழுவதையும் சுற்றிவருவார் அவர்” என நினைவுகூர்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வி. வசந்திதேவி போட்டியிட்டார்.

“வி.சி.கவின் சார்பில் என்னைப் போட்டியிடும்படி என்னைக் கேட்டது எனக்குக் கிடைத்த பெருமை” என வி. வசந்திதேவி அந்தத் தருணத்தில் குறிப்பிட்டதாகச் சொல்கிறார் ஹென்றி திஃபேன்.

சென்னையில் வசித்துவந்த வி. வசந்திதேவிக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin