வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப் பொருளில் இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தக் குழாய் வழித்தடம் பூமிக்கடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரை விட விலை குறைவு. தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்என்ஜி எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இது வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயுவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 2.30 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்திலும் 2,625 சிஎன்ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும், இயற்கை எரிவாயு விநியோகிக்க ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்க பூமிக்கு அடியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இப்பணிகள் முடிவடைந்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை அணுகி குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றன.
இதுவரை 1.47 லட்சம் வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 12,500 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.