• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு: மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவு | Kavignar Kannadasan son file case seeking electricity connection to his house

Byadmin

May 10, 2025


சென்னை: தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தொடர்ந்த வழக்கில், மின்சார வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

அதற்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மின்சார வாரியம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கண்ணதாசனின் மகன்கள், தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், துணை மின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011-ல் உத்தரவிட்டது,

இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கோரி அண்ணாதுரை கண்ணதாசன் விண்ணப்பித்திருந்தார். ஆனால் மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை பாதையாக பயன்படுத்துவதாகக் கூறி இணைப்பு வழங்க மின்சார வாரியம் மறுத்து விட்டது.

இதை எதிர்த்து அண்ணாதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘‘காலியாக கிடந்த பகுதியை பாதையாகப் பயன்படுத்திக் கொள்ள தாம்பரம் நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளதால், வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். கீழமை நீதிமன்ற உத்தரவுப்படி துணை மின் நிலையம் அருகே உள்ள காலியிடத்தை பாதையாக அறிவிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.



By admin