• Thu. Nov 28th, 2024

24×7 Live News

Apdin News

வீதிகள் எங்கும் பட்டொளி வீசிப் பறக்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள்!

Byadmin

Nov 28, 2024


தமிழீழத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த மறவர்களை – மாவீரர்களை – காவிய நாயகர்களை தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும். கொட்டும் மழைக்கு மத்தியிலும், இயற்கை இடர்பாடுகளைத் தாண்டியும் இன்றைய நாளில் மாவீரர்களை அஞ்சலிப்பதற்குத் தமிழர் தாயகம் தயாராகியுள்ளது.
தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தேசத்தின் விடுதலையை அதியுன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்துக்காக சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களைப் போற்றி வணங்கும் தூய்மையான நாள் இன்று.

இன்றைய நாள், ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக தம்மை மாற்றிக்கொண்டவர்களை நினைந்துருகும் நாள். தமிழினத்தின் இருப்புக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை தமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நிறுத்தி தமிழர்கள் நினைவுகூரும் நாள். தமிழர் தாயகம் சுதந்திரத் தாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் மகத்தான நாள். தமிழர் தாயகத்தின் விடிவுக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்மினிய வீரர்களை தமிழர்கள் தங்களின் இதயக் கோவில்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்.

எதனையும் தாங்கும் இதயத்துடன் சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் சாவைத் தழுவியவர்கள்தான் மாவீரர்கள். அவர்களின் துயிலுல் இல்லங்கள் தாயகத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அல்லது சீரழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தரைமட்டமாக்கப்பட்ட துயிலும் இல்லங்களின் எச்சங்களை மீட்டெடுத்து இன்றைய மாவீரர் நாளை எழுச்சியுடன் கடைப்பிடிக்கத் தாயக தேசம் தயாராகியுள்ளது.

வீதிகள் எங்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. மாவீரர் அலங்கார வளைவுகள் மிடுக்குடன் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம், உடுத்துறை, சாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன. இதனை விடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், ஏராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவுக் கடற்கரை, இரட்டை வாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அலம்பிள், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளமம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுல் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

அதேபோல் வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவாலயங்கள், மாவீரர் நினைவிடங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.

The post வீதிகள் எங்கும் பட்டொளி வீசிப் பறக்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள்! appeared first on Vanakkam London.

By admin