• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

வீரப்பன் தேடலில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் ‘கெடு’ | HC time fixation to compensation for villagers affected by task force in search for Veerappan

Byadmin

Mar 13, 2025


சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் இழப்பீடாக வழங்கியது. பாக்கித் தொகை ரூ.3 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவில்லை. இந்த தொகையையும் வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அதுதொடர்பான பயனாளிகள் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமென விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி விட்டதாக விடியல் மக்கள் நல அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், “அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு விட்டது. பாக்கி இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அந்த தொகையை வழங்க மூன்று வார கால அவகாசம் தேவை,” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டுத் தொகையை மூன்று வார காலத்தில் வெளிப்படையாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.



By admin