0
வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : விசாரட் கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : சமுத்திரக்கனி, பரத் , ரித்தீஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரோடி, சுரபி லட்சுமி, கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சி பாடகி பி.கே.மேதினி மற்றும் பலர்.
இயக்கம் : அனில் வி. நாகேந்திரன்
மதிப்பீடு : 3/5
இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்றிருக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் தென்பகுதியான கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களுக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை விட, காலம் காலமாக உயர் ஜாதி- தாழ்ந்த ஜாதி, ஜமீன் அடிமைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய அடிமை தளைகளில் இருந்து விடுதலை பெறுவது தான் அவசியம் என போராடினர்.
அவர்களுடைய சமூக விடுதலை போராட்டத்தை அதே வீரியத்துடனும், அதே அடர்த்தியுடனும் இந்த காலகட்ட 2k கிட்ஸ்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் சமூக முன்னேற்றத்திற்கான உழைப்பினை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட படைப்புதான் வீர வணக்கம். இது சிவப்பு சிந்தனையாளர்களைக் கடந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பொதுவாக எம்முடைய தேசத்தின் தற்போதைய மக்கள் நலக் கொள்கைகள் அனைத்தும் கடந்த கால வரலாற்றில் இருந்தும்… அதற்காக போராடிய தலைவர்களின் கருத்தியல்களில் இருந்தும் …தான் வகுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இத்தகைய தருணங்களில் இந்தியாவின் தென்பகுதியான கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்களில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவர் பி. கிருஷ்ணப்ப பிள்ளை.
அவருடைய போராட்டங்கள் நிறைந்த சுயசரிதையை இப்படத்தின் இயக்குநரான அனில் வி. நாகேந்திரன் இன்றைய காலகட்ட ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் வழங்க முயற்சி செய்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கேரளாவில் இன்றும் வாழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சி பாடகியான 93 வயதான மேதினி அம்மாவின் பார்வையில் கம்யூனிஸ்ட்வாதியான பி. கிருஷ்ணப்ப பிள்ளையின் வரலாறு விவரிக்கப்படுகிறது.
நிகழ்காலத்தில் பரத் கம்யூனிச வாதியாகவும், வசதி படைத்தவராகவும் இருக்கிறார். இவருடைய மகள் தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவரை காதலிக்கிறார். இந்நிலையில் இவருடைய பக்கத்து ஊரில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு அவர்களை கம்யூனிச கொள்கைக்கு ஆதரவாக செயல்பட வைக்கும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சி பாடகியான மேதினி அம்மா அவர்களை சந்திக்க வைக்கிறார்.
ஆண்டாண்டு காலமாக அடிமை தொழிலை செய்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தோழர் கிருஷ்ணப்ப பிள்ளையின் போராட்டம் நிறைந்த வாழ்வை அவர்களுக்கு உணர்வுபூர்வமாக மேதினி அம்மா விவரிக்கிறார்.
போராட்ட வீரரின் சுயசரிதையை அவருடன் களத்தில் நின்ற ஒருவர் மூலமாக விவரித்திருப்பது கதைக்கு நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. அதே தருணத்தில் இயக்குநரின் இந்த திரைக்கதை உத்தி ரசிகர்களையும் கவர்கிறது.
கிருஷ்ணப்ப பிள்ளையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி அந்த பாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதனை உடல் மொழியாலும், கண் பார்வையாலும், வசன உச்சரிப்பாலும் மெருகேற்றி பார்வையாளர்களின் கண்முன் தோழராகவே தெரிகிறார்.
பரத் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இயக்குநரின் கற்பனை என்றாலும் ரசிக்க வைக்கிறது. இருப்பினும் அவருடைய தோற்ற பின்னணியில் அமையப்பெற்றிருக்கும் குறியீடுகள் புரியாத புதிராகவே இருக்கிறது.
1940 ஆண்டு காலகட்டத்திய கேரள மாநில நிலவியல் பின்னணியையும், மக்களின் வாழ்வியலையும் ஒளிப்பதிவாளர் கவியரசு நேர்த்தியாக பதிவு செய்து ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
பல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய இருந்தாலும் பாடல்களும் பின்னணி இசையும் பட மாளிகையில் படைப்பை ரசிக்கும் ரசிகர்களுக்கு உறுத்தலாக இல்லை.
இன்றைய சூழலில் சமூக வலைதள அரசியலின் ஆதிக்கம் மட்டுமே ஓங்கி இருக்கும் நிலையில் கம்யூனிச சிந்தனைகளையும், கம்யூனிஸ்ட்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும் உணர்வு பூர்வமாக விவரித்திருப்பதை வரவேற்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் கேரள நிலவியல் பின்னணியில் ஜமீன்களின் ஆதிக்க அட்டகாசம் பார்வையாளர்களின் நெஞ்சை உலுக்கினாலும்… அவர்கள் வீழும் போது மனம் இயல்பாகவே கரவொலி எழுப்புகிறது.
சிவப்பு சிந்தனையாளர் தோழர் கிருஷ்ணப்ப பிள்ளையின் சுயசரிதையை நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் படக்குழுவிற்கு தாராளமாக வாழ்த்து தெரிவிக்கலாம்.
வீரவணக்கம் – செங்கொடி வணக்கம்.