
அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டு மாதங்களாக கரீபியன் கடலில் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், கடற்படையினர், ஆளில்லா விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை குவித்து வருகிறது. இது பல தசாப்தங்களாக அங்கு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ராணுவக் குவிப்பாகும்.
பி-52 ரக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் வெனிசுலா கடற்கரையில் “குண்டுவீச்சுத் தாக்குதல் செயல்விளக்கங்களை” நடத்தியுள்ளன. டிரம்ப் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வை வெனிசுலாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளார், மேலும் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் (aircraft carrier) அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வெனிசுலாவில் இருந்து “போதைப்பொருள்” மற்றும் “போதைப்பொருள் பயங்கரவாதிகளை” ஏற்றிச் செல்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டும் சிறிய கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லது விவரங்களையும் அது வழங்கவில்லை.
இந்தத் தாக்குதல்கள் அப்பகுதியில் கண்டனங்களை ஈர்த்துள்ளன, மேலும் நிபுணர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையையும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராக அமெரிக்காவால் கூறப்பட்டாலும், இதன் அறிகுறிகள் யாவும், இது உண்மையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்ற முயலும் ஒரு மிரட்டல் நடவடிக்கை என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.
“இது ஆட்சி மாற்றத்தைப் பற்றியது. அவர்கள் படையெடுக்க மாட்டார்கள்; ஆனால் ஒருவித சமிக்ஞை கொடுப்பதே இதன் நோக்கம் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்,” என்று சட்டாம் ஹவுஸ் சிந்தனைக் குழுமத்தின் (Chatham House think tank) லத்தீன் அமெரிக்காவிற்கான மூத்த ஆய்வாளர் கிறிஸ்டோபர் சபாதினி கூறுகிறார்.
இந்த ராணுவக் குவிப்பு வெனிசுலாவின் ராணுவம் மற்றும் மதுரோவின் உள்வட்டாரத்தில் “பயத்தை ஏற்படுத்தி”, அவர்கள் மதுரோவுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்பதைக் காட்டும் ஒரு பலத்தைக் காட்டும் நடவடிக்கை என்று அவர் வாதிடுகிறார்.
அப்பகுதியில் உள்ள அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் விமானங்களை பற்றி பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களை பிபிசி வெரிஃபை கண்காணித்து, அதன் மூலம் டிரம்பின் படைகள் எங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய முயற்சிக்கிறது.
இந்த ராணுவக் குவிப்பு மாறிக்கொண்டே இருப்பதால், நாங்கள் தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வருகிறோம்.
அக்டோபர் 23ஆம் தேதி நிலவரப்படி, அப்பகுதியில் 10 அமெரிக்க ராணுவக் கப்பல்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றில் வழிகாட்டப்பட்ட ஏவுகணை தாங்கி அழிப்புக் கப்பல்கள் (guided missile destroyers), நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்தும் கப்பல்கள் (amphibious assault ships) மற்றும் கடலில் எரிபொருள் நிரப்புவதற்கான எண்ணெய் டேங்கர்கள் ஆகியவை அடங்கும்.
உள்வட்டாரத்தின் விசுவாசத்தை சோதிக்கும் 50 மில்லியன் டாலர் வெகுமதி
அமெரிக்க நிர்வாகம், குறிப்பாக வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, மதுரோ பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவதை காண விரும்புகிறார்கள் என்பது ரகசியமல்ல.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் மதுரோவை ஒரு “பயங்கரமான சர்வாதிகாரி” என்று கூறியதுடன், மதுரோ வெளியேற வேண்டும் என்று நீங்கள் கோருகிறீர்களா என்று கேட்டபோது, “நாங்கள் அந்தக் கொள்கையில் செயல்படுவோம்” என்று பதிலளித்தார்.
ஆனால், ரூபியோவைப் போல மதுரோவை வெளிப்படையாக விமர்சிப்பவர்களுக்குக்கூட, வெனிசுலாவில் ராணுவ ஆதரவுடனான ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பது கடினம்.
டொனால்ட் டிரம்ப் 2016-ல் ஆட்சி மாற்றத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார், “வெளிநாட்டு ஆட்சிகளைக் கவிழ்ப்பதை நிறுத்துவதாக” உறுதியளித்தார். சமீபத்தில், அவர் “முடிவில்லாத போர்களில்” ஈடுபடுவதை கண்டித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் கடைசித் தேர்தல் சர்வதேச அளவில் மற்றும் வெனிசுலாவில் உள்ள எதிர்க்கட்சிகளாலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் இல்லை என்று நிராகரிக்கப்பட்டதால், அமெரிக்கா மதுரோவை வெனிசுலாவின் அதிபராக அங்கீகரிக்கவில்லை. டிரம்பின் முதல் அதிபர் பதவிக் காலத்தில் 2019 இல் கராகஸில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.
பட மூலாதாரம், Reuters
மதுரோவின் விசுவாசமான உள்வட்டாரத்தில் உள்ளவர்கள் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கான ஒரு தூண்டுதலாக அவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை தருவோருக்கு அமெரிக்கா அறிவித்த வெகுமதியை 50 மில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. ஆனால், இதன் மூலம் எந்தவிதமான கட்சி தாவல்களும் நடக்கவில்லை.
வெனிசுலாவின் சட்டப் பேராசிரியரும், சிஎஸ்ஐஎஸ் தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுமத்தின் மூத்த இணை ஆய்வாளருமான ஜோஸ் இக்னாசியோ ஹெர்னாண்டஸ், வெனிசுலாவின் உயரடுக்கு நபர்களுக்கு 50 மில்லியன் டாலர் “ஒரு பொருட்டே அல்ல” என்று கூறுகிறார்.
வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் மிக்க ஒரு நாட்டில் ஊழல் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். முன்னாள் கருவூலத் தலைவர் அலேஜான்ட்ரோ ஆண்ட்ரேட், தண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு பில்லியன் டாலர்களை லஞ்சமாகப் பெற்றார்.
எந்தவொரு ஆட்சி மாற்றத்திற்கும் வெனிசுலா ராணுவம்தான் முக்கியமாகும் என்பதில் பல ஆய்வாளர்கள் உடன்படுகிறார்கள். ஆனால், அவர்கள் மதுரோவுக்கு எதிராகத் திரும்பி அவரை வெளியேற்ற வேண்டுமானால், அவர்களும் வழக்குத் தொடரப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கோருவார்கள்.
“நாங்களும் ஏதோ ஒருவகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர்கள் நினைப்பார்கள்,” என்று ஹெர்னாண்டஸ் மேலும் கூறுகிறார்.
லத்தீன் அமெரிக்கா குறித்து விரிவாக ஆய்வு செய்து வெளியிடும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மைக்கேல் ஆல்பர்டஸ், 500 மில்லியன் டாலர் வெகுமதி கூட மதுரோவின் உள்வட்டாரத்தை அவரைக் காட்டிக் கொடுக்கத் தூண்டும் என்று நம்பவில்லை.
“சர்வாதிகாரத் தலைவர்கள் எப்போதும் தங்கள் உள்வட்டாரத்தினரைக்கூட சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் அவர்களைக் கண்காணிப்பதற்கும் விசுவாசத்தை உறுதி செய்வதற்கும் வழிமுறைகளை உருவாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
வெனிசுலாவின் மீதான பொருளாதாரத் தடைகள் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன, ஆனால் அவை மூத்த பிரமுகர்களை தங்கள் தலைவருக்கு எதிராகத் திருப்பும் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை.
இது ஏன் போதைப்பொருள் பற்றியது மட்டும் அல்ல?
டொனால்ட் டிரம்ப் இதை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான போர் என்று அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 16 அன்று அமெரிக்கா தாக்கிய ஒரு கப்பலில் “பெரும்பாலும் ஃபெண்டானைல்” ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறினார்.
ஆனால் ஃபெண்டானைல் முதன்மையாக மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படுகிறது, தென் அமெரிக்காவில் அல்ல. மேலும், இது தென் எல்லையைக் கடந்து அமெரிக்காவிற்குள் வருகிறது.
“இது போதைப்பொருள் பற்றியது அல்ல,” என்று சபாதினி கூறுகிறார். “ஆனால் இது ஒரு சர்வாதிகாரம் மட்டுமல்ல, ஒரு கிரிமினல் ஆட்சி என்ற வெனிசுலா எதிர்க்கட்சியின் மொழியை அவர் ஏற்றுக்கொண்டார்.”அதிபர் மதுரோ ஒரு போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாத அமைப்பை வழிநடத்துவதாக 2020 முதல் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டி வந்திருக்கிறது. அவர் இதை மறுக்கிறார். வெனிசுலாவில் இருந்து “போதைப்பொருட்கள் வருவது” சிஐஏ ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்ததற்கான காரணங்களில் ஒன்று என் டிரம்ப் கூறியுள்ளார்.
வெனிசுலா அதிக அளவில் கொகெய்ன் உற்பத்தி செய்வதில்லை – அது முக்கியமாக கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவில் நடக்கிறது. வெனிசுலா வழியாகச் சிறிது கொகெய்ன் கடத்தப்படுகிறது. இதைத் தாங்களே கட்டுப்படுத்தி வருவதாக வெனிசுலா அரசாங்கம் கூறுகிறது.
2025 ஆம் ஆண்டின் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் அறிக்கை, அமெரிக்காவில் கைப்பற்றப்பட்ட கொகெய்னில் 84% கொலம்பியாவில் இருந்து வருகிறது என்று கூறுகிறது. மேலும், அதன் கொகெய்ன் பிரிவில் மற்ற நாடுகளைக் குறிப்பிட்டாலும் வெனிசுலாவைக் குறிப்பிடவில்லை.
பசிபிக் கடலுடன் ஒப்பிடும்போது போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பாதை அல்லாத கரீபியனில் முதல் ஏழு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்த தாக்குதல்கள் பசிபிக் பெருங்கடலில் நடத்தப்பட்டன.
மதுரோ போதைப்பொருள் கடத்தல் அமைப்பை வழிநடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா விவரிக்கவில்லை. மதுரோ இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறார். மேலும், அமெரிக்கா ஏகாதிபத்தியம் செய்வதாகவும், பொருளாதாரத் தடைகள் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள் இருக்கின்றன.
2016 இல், நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் மதுரோ மனைவியின் இரண்டு உறவினர்கள் கொகெய்னை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்ய சதி செய்ததாகத் தண்டனை அளித்தது. அவரது மனைவியின் அரசியல் பரப்புரைக்கு நிதியளிக்க அவர்கள் பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தத் திட்டமிட்டதாக இந்த வழக்கு கூறியது. பின்னர் அவர்கள் அமெரிக்காவுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்கக் கடல் மற்றும் விமான பலத்தை வலுப்படுத்துதல்

அமெரிக்க ராணுவம் அப்பகுதிக்கு ஒரு விமானம்தாங்கி தாக்குதல் குழுவை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதில் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் அடங்கும்.
அமெரிக்காவின் ராணுவத் தளம் உள்ள புவெட்டோ ரிகோவைச் (Puerto Rico) சுற்றி நாங்கள் கண்காணித்த அமெரிக்கக் கப்பல்களுடன், ட்ரினிடாட் மற்றும் டொபாகோவுக்குக் கிழக்கே சுமார் 123 கிமீ (75 மைல்கள்) தொலைவில் இரண்டு கப்பல்களையும் துணைக்கோள் படங்கள் காட்டின.
ஒன்று யுஎஸ்எஸ் லேக் எரி என்ற வழிகாட்டப்பட்ட ஏவுகணை தாங்கிக் கப்பலாகும்.
மற்றொன்று எம்வி ஓஷன் டிரேடர் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டனும், இப்போது ராண்ட் கார்ப் நிறுவனத்தில் மூத்த கொள்கை ஆராய்ச்சியாளருமான பிராட்லி மார்ட்டின் அடையாளம் கண்டார்.
இது வணிகப் போக்குவரத்துடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறப்புப் படைகளின் பணிகளுக்கு ஆதரவளிக்கும் மாற்றியமைக்கப்பட்ட சரக்குக் கப்பலாகும். இதில் ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய படகுகள் இருக்கலாம்.
இவை தாக்குதல்களுக்குத் தயாராவதற்கான உளவு பார்ப்பது உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படக்கூடும். ஆனால் அது இருக்கிறது என்ற காரணத்தாலேயே “அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன என்று இருக்கவேண்டிய அவசியமில்லை” என்று மார்ட்டின் கூறுகிறார்.
கடலில் போதைப்பொருட்களை இடைமறிப்பதற்கு தற்போதைய அமெரிக்க ராணுவத்தின் அளவுக்குப் பெரிய ஒரு படை தேவையில்லை என்று ராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா அப்பகுதியில் தனது விமான பலத்தையும் வலுப்படுத்தியுள்ளது – பிபிசி வெரிஃபை புவெட்டோ ரிகோ முழுவதும் பல அமெரிக்க ராணுவ விமானங்களை அடையாளம் கண்டுள்ளது.
மெக்கென்சி இன்டலிஜென்ஸ் சர்வீசஸின் மூத்த ஆய்வாளர் ஸ்டூ ரே, அக்டோபர் 17 அன்று எடுக்கப்பட்ட ஒரு துணைக்கோள் படம் ஓடுபாதையில் எஃப்-35 போர் ஜெட் விமானங்கள், அநேகமாக எஃப்-35பிஎஸ் இருக்கலாம் என்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார்.
இவை குறுகிய டேக்-ஆஃப் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறனுக்காகப் பாராட்டப்படும் மிகவும் மேம்பட்ட ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் ஆகும்.
சமூக ஊடகங்களில், ஒரு ஜெட் விமானி புவெட்டோ ரிகோவில் உள்ள ரஃபேல் ஹெர்னாண்டஸ் விமான நிலையத்தில் படமாக்கப்பட்ட எம்.கியூ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் மாலியில் தாக்குதல்கள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ள அமெரிக்கா இவற்றைப் பயன்படுத்தியுள்ளது.
அக்டோபர் தொடக்கத்தில், கரீபியன் முழுவதும் பறந்து வெனிசுலா கடற்கரைக்கு அருகில் வந்த மூன்று பி-52 குண்டுவீச்சு விமானங்களை பிபிசி வெரிஃபை கண்காணித்தது.
இந்த விமானங்கள் “குண்டுவீச்சுத் தாக்குதல் செயல்விளக்கத்தில்” பங்கேற்றதாக அமெரிக்க விமானப்படை பின்னர் உறுதிப்படுத்தியது.
பி1 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பி-8 போஸிடான் உளவு விமானங்களின் பயணங்களும் விமான கண்காணிப்பு தளங்களில் காணப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ கடற்கரையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் செயல்படுவதையும் காட்டியுள்ளன.
இவற்றில் அமெரிக்க சிறப்பு படைகளால் பயன்படுத்தப்படும் ‘கில்லர் எக்ஸ்’ என அழைக்கப்படும் போயிங் MH-6M லிட்டில் பேர்ட்ஸ் விமானங்களும் அடங்கும்
வெனிசுலாவுக்குள் சிஐஏ என்ன செய்ய முடியும்?
மதுரோவைக் “கவிழ்ப்பதற்கு” சிஐஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, டொனால்ட் டிரம்ப் , பதிலளிப்பது “நகைப்புகுரியதாக இருக்கும்” என்று கூறினார்.
அமெரிக்கா “இப்போது நிலத்தை நோக்குகிறது” என்றும் வெனிசுலா மண்ணில் ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியம் குறித்து அவர் கூறினார்.
ரகசிய தலையீடுகள், ஆட்சி மாற்ற முயற்சிகள், குறிப்பாக சிலி மற்றும் பிரேசிலில் கடந்த கால வலதுசாரி ராணுவ சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு அளித்தது போன்ற நீண்ட வரலாறு காரணமாக லத்தீன் அமெரிக்காவில் உள்ள பலரால் சிஐஏ அதிக சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது..
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கப் பிரதிநிதியின் துணைவரும், இதற்கு முன்பு சிஐஏ மூத்த ஆய்வாளராகவும், வெளியுறவுத்துறை மூத்த ஆலோசகராகவும் இருந்த நெட் பிரைஸ், சிஐஏ ரகசிய நடவடிக்கை “பல வடிவங்களை எடுக்கலாம்” என்று கூறினார்.
“அது தகவல் செயல்பாடுகளாக இருக்கலாம். அது நாசவேலை நடவடிக்கைகளாக இருக்கலாம். அது எதிர்க்கட்சிகளுக்கு நிதியளிப்பதாக இருக்கலாம். அது ஒரு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு கூடச் செல்லலாம். குறைந்த மற்றும் உயர்ந்த விருப்பங்களுக்கு இடையில் பல தேர்வுகள் உள்ளன.”
இதில் வெனிசுலாவிற்குள் கடத்தலில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களை குறிவைக்க முகவர்களைப் பயன்படுத்துவதும் அடங்கும். அமெரிக்காவின் சொந்த வரையறையின்படி, இதில் மதுரோவும் அடங்குவார்.

போதைப்பொருட்களுக்கு வெனிசுலா ஒரு முக்கிய உற்பத்தி மையம் அல்ல என்பதால், அங்கே அழிப்பதற்கு கொகெய்ன் அல்லது ஃபெண்டானைல் ஆய்வகங்கள் எதுவும் இல்லை. ஆனால், அமெரிக்கா குறிவைக்கக்கூடிய விமான ஓடுதளங்கள் அல்லது துறைமுகங்கள் உள்ளன என்று சபாதினி கூறுகிறார்.
“அவர் ஆக்ரோஷமாக இருக்க விரும்பினால், அவர் ஒரு ராணுவ முகாமிற்குள் ஏவுகணையை செலுத்தலாம். ராணுவத்தின் சில பிரிவுகள் கொகெய்ன் கடத்தலில் ஈடுபட்டுள்ளன என்பதற்கு நம்பகமான உளவுத் தகவல் உள்ளது.”
மதுரோ அல்லது அவரது தளபதிகளில் சிலரைக் கைது செய்து, அவர்களை அமெரிக்காவில் சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் அது ஒரு “தாக்கி கைப்பற்றும் சூழ்நிலையாக”வும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்
இந்த ராணுவக் குவிப்பின் முதன்மை நோக்கம் மதுரோவை அச்சுறுத்துவதாயின், கட்சி தாவல்களைத் தூண்டுவதற்கு இது போதுமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அது மதுரோ ஆட்சியை பலவந்தமாக அகற்ற ஒரு உண்மையான முயற்சிக்கு வழிவகுக்குமா என்று அறிவது கடினம் என பேராசிரியர் ஆல்பர்டஸ் நினைக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு