• Wed. Jan 14th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுலா எண்ணெய் வருவாய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்: ஒப்பந்தம் கைச்சாத்து!

Byadmin

Jan 14, 2026


உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை அமெரிக்கா நேரடியாகக் கட்டுப்படுத்தும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வருவாய் அமெரிக்கக் கருவூல கணக்குகளில் பாதுகாக்கப்படுவதுடன், எந்தவிதமான கடனாளர்கள் அல்லது சட்டரீதியான கோரிக்கைகள் மூலமாகவும் அந்த நிதியை கைப்பற்ற முடியாத வகையில் தடையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவை தொடர்புடைய ஒரு தேசிய அவசரநிலையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த நிர்வாக ஆணை, வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை மூன்றாம் தரப்பினர் கைப்பற்றுவதை முழுமையாகத் தடுக்கிறது. நீதிமன்ற உத்தரவுகள், கடன் வசூல் நடவடிக்கைகள் போன்ற எந்த காரணத்திற்காகவும் அந்த நிதியை பறிமுதல் செய்ய முடியாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய நலன்களை பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கம் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த அவசர ஆணையின் கீழ், வெனிசுலாவின் எண்ணெய் வருவாய் அந்நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அமெரிக்கா அனுமதிக்கும் பரிமாற்றங்களைத் தவிர, வேறு எந்த நோக்கத்திற்கும் அந்த நிதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதன்மூலம், வெனிசுலா எண்ணெய் வருவாயின் முழுக் கட்டுப்பாடும் அமெரிக்காவின் கையில் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னணியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் வரை, அந்நாட்டு நிர்வாகத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாட்டின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கைக்குச் சென்றுள்ளதாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

பொதுவாக உலகில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகள் என்றால் மத்திய கிழக்கு நாடுகளையே நினைப்போம். ஆனால் உண்மையில், உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடு வெனிசுலா ஆகும். சுமார் 303 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு அங்கு உள்ளது. கிழக்கு வெனிசுலாவில் உள்ள ஓரினோகோ பெட்ரோலியம் பெல்ட் இந்த பெரும் வளத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

இவ்வளவு பெரிய எண்ணெய் இருப்பு இருந்தும், உலக எண்ணெய் வர்த்தகத்தில் வெனிசுலாவின் பங்களிப்பு தற்போது 0.35 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. காரணம், அந்நாட்டின் கச்சா எண்ணெய் மிகவும் கனமானதும், அதிக பிசுபிசுப்பும் சல்பர் உள்ளடக்கமும் கொண்டதுமாகும். இதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கூடுதல் தொழில்நுட்பங்களும் அதிக செலவுகளும் தேவைப்படுகிறது. நீராவி உட்செலுத்துதல், இலகுரக எண்ணெயுடன் கலத்தல் போன்ற முறைகள் அவசியமாக இருப்பதால் உற்பத்திச்செலவு பல மடங்கு அதிகரிக்கிறது.

ஒருகாலத்தில் தினசரி பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்த வெனிசுலா, தற்போது தினம் 1.0 முதல் 1.2 மில்லியன் பீப்பாய் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் சர்வதேச பொருளாதார தடைகள் ஆகியவை வளங்கள் நிறைந்தாலும் பணமில்லாத நாட்டாக வெனிசுலாவை மாற்றியுள்ளன.

இந்த சூழ்நிலையில்தான், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், வெனிசுலாவிலிருந்து பெருமளவு எண்ணெய் வாங்கி வந்த சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கை சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் அளவிற்கு அமெரிக்காவுக்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

By admin