0
வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிடம் வலியுறுத்தி வந்தார். மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அரசே உடந்தையாக இருந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அமெரிக்கா நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் பயணித்த படகுகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா தன்னை ஆட்சியில் இருந்து அகற்றவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் திட்டமிடுவதாக நிக்கோலஸ் மதுரோ தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். வெனிசுலா மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை அமெரிக்கா வெனிசுலா மீது தீவிர தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்று குண்டுகளை வீசியதாக கூறப்படுவதுடன், இதன் காரணமாக நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புளோரிடாவில் உள்ள தனது தனியார் கிளப்பில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்த டிரம்ப், அங்கிருந்தபடி தனது சமூக வலைத்தளத்தில் வெனிசுலா தாக்குதல் தொடர்பான தகவலை வெளியிட்டார். அதில், அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், வெனிசுலா தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலேயே, வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை அவர் மேற்பார்வை செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.