பட மூலாதாரம், TRUTH SOCIAL/DONALD TRUMP
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும், நிகோலஸ் மதுரோவைக் கைது செய்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள் விமர்சித்துள்ளன.
இந்த விவகாரத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலைக்குரியவை. அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் இரான் நேரடியாக அமெரிக்காவை குறி வைத்துப் பேசியுள்ளது, ஹெஸ்பொலா அமைப்பும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
“வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க, பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்க அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமை இரவு, வெனிசுவேலா பயணங்கள் தொடர்பாக இந்தியா தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியது. வெனிசுவேலாவிற்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு இந்திய அரசு குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், ANI
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 24 மணிநேரத்தில் வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மீற முடியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சில நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவில் நீடித்து வரும் ‘நெருக்கடிக்கு’ முற்றுப்புள்ளி வைக்க, நிதானத்துடனும் பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும் செயல்படுமாறு பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமைவேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளும் ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி தீர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“பாகிஸ்தான் வெனிசுவேலா மக்களின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த நாட்டில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து கவலை கொண்டுள்ளது,” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறியது.
வெனிசுவேலாவில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாகிஸ்தான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இரான் கருத்து
பட மூலாதாரம், IRANIAN LEADER PRESS OFFICE/Anadolu via Getty Images
“வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதலையும், அந்த நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ள செயலையும் இரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டிக்கிறது” என்று இரானின் வெளியுறவு அமைச்சகம் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
“வெனிசுவேலா மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல் என்பது ஐ.நா சாசனத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையும் தெளிவாக மீறும் செயலாகும். குறிப்பாக, அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஐ.நா சாசனத்தின் பிரிவு 2(4)-ஐ இது மீறுகிறது, எனவே இது ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகக் கருதப்படுகிறது.”
“ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருக்கும் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடான வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு, பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகும். இதன் விளைவுகள் ஒட்டுமொத்த சர்வதேச அமைப்பையும் பாதிப்பதோடு, ஐ.நா சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தி சிதைக்கும்” என்றும், “வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துவதற்கு, அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் சட்ட ரீதியான மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பதை இரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்துகிறது”என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசியா விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு மலேசிய வெளியுறவு அமைச்சகமும் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திப் பதிலளித்துள்ளது.
“மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் எந்த வடிவிலான வெளிநாட்டுத் தலையீட்டையும், பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ” மலேசியா எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
“வெனிசுவேலாவில் நடக்கும் நிகழ்வுகளை நான் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன்… அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும், பதவியில் இருக்கும் ஒரு அரசாங்கத்தின் தலைவரை வெளிப்புற நடவடிக்கை மூலம் வலுக்கட்டாயமாக அகற்றுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது சர்வதேச ஒழுங்கைத் தாங்கி நிற்கும் சட்டக் கட்டமைப்பைச் சிதைக்கிறது”என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும்,”வெனிசுவேலா மக்களுக்கு தங்கள் சொந்த அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உரிமை உண்டு. நாடுகளுக்கிடையிலான அமைதியான உறவுகளுக்கு சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை மீதான மரியாதை அவசியம் என்று மலேசியா கருதுகிறது,” என்றும் அவரது பதிவு கூறுகிறது.
கத்தார் கூறியது என்ன?
பட மூலாதாரம், @MofaQatar_EN
கத்தார் வெளியுறவு அமைச்சகமும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுவேலாவின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து கத்தார் அரசு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சூழலில், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றங்களைக் குறைக்குமாறும், நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க பொருத்தமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான சாசனத்தின் கீழான கடமைகள் உட்பட, ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கத்தார் அரசின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”
“உடனடியாக அமைதியான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு சர்வதேச முயற்சிக்கும் பங்களிக்க கத்தார் அரசு தயாராக உள்ளது என்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தகவல் தொடர்பு வழிகளைத் திறந்து வைத்திருப்பதில் தனது உறுதியையும் அமைச்சகம் மீண்டும் வலியுறுத்துகிறது”என்றும் கூறப்பட்டுள்ளது.
துருக்கி கருத்து
“வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுவேலாவின் நிலைத்தன்மை, மக்களின் அமைதி மற்றும் நலனுக்கு துருக்கி முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலை பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில், அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் தீர்வு காண, எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் வழங்க துருக்கி தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்கா மீது ஹெஸ்பொலா குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
இந்தச் செய்தி எழுதப்படும் வரை, வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
இருப்பினும், லெபனானைத் தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா அமைப்பு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய ‘அல் மனார்’ தொலைக்காட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வெனிசுவேலாவின் தேசிய இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா சாசனம் ஆகியவற்றின் மீதான “அப்பட்டமான மற்றும் முன்னெப்போதும் நடந்திராத மீறல்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் “பொய்யானவை” என்று ஹெஸ்பொலா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் லட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் சட்டவிரோதமாக நுழைவதற்குக் காரணமானவர் மதுரோ தான் என்று குற்றம் சாட்டி வரும் அதிபர் டிரம்ப், அவர் மீது தொடர்ந்து இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
‘ட்ரென் டி அராகுவா’ மற்றும் ‘கார்டெல் டி லாஸ் சோல்ஸ்’ ஆகிய இரண்டு வெனிசுவேலா கும்பல்களை “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்” என டிரம்ப் பட்டியலிட்டுள்ளார்.
இதில் இரண்டாவது குழுவை மதுரோவே நேரடியாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சமீபத்திய சம்பவம் அமெரிக்க நிர்வாகத்தின் “ஆதிக்கம், ஆணவம் மற்றும் கொள்ளையடிக்கும்” மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சர்வதேச பாதுகாப்பைக் குலைப்பதாகவும், காட்டாட்சியை ஊக்குவிப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
வெனிசுவேலா மக்கள், அதன் தலைமை மற்றும் அரசாங்கத்துடன் தாங்கள் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்பதாக ஹெஸ்பொலா கூறியுள்ளது.

ஜப்பான் கூறியது என்ன?
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மற்றும் தலையீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் ஒரு ஜி7 நாடாக தனது நிலப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
“வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும், அங்கு நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கும்” ஆதரவளிப்பதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது அமெரிக்கா வெளிப்படையாகப் படைபலத்தைப் பயன்படுத்தியதையும், அந்நாட்டு அதிபருக்கு எதிரான அதன் நடவடிக்கைகளையும் சீனா வன்மையாகக் கண்டிக்கிறது, இது எங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை அளிக்கிறது” என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டம் மற்றும் வெனிசுவேலாவின் இறையாண்மையை மீறுவதோடு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளன.” என்று சீனா கூறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு