0
வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் வருவாய் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகை வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
வெனிசுலா தொடர்பான விவகாரங்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வெள்ளை மாளிகை ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் Exxon, Chevron, ConocoPhillips உள்ளிட்ட முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவம் கைது செய்த பின்னர், வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.