பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தன்னை வெனிசுவேலாவின் ‘தற்காலிக அதிபர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் டிரம்பின் அதிகாரப்பூர்வ படத்துடன் ‘தற்காலிக அதிபர்- வெனிசுவேலா’ என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது அதிபர் என்றும், அவர் 2025 ஜனவரி 20 அன்று பொறுப்பேற்றார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், டெல்சி ரோட்ரிக்ஸ் தான் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக இருக்கிறார்.
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான’ தாக்குதலை நடத்தியது. அதில் அந்நாட்டு நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார்.
மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது “போதைப்பொருள் கடத்தல்” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வேண்டிய 5 கோடி பேரல் எண்ணெய் வந்துகொண்டிருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர் என்றும் கூறினார்.
பட மூலாதாரம், TruthSocial
அதிகாரம் யார் வசம் இருந்தது?
வெனிசுவேலா மீதான நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், “அதிகார மாற்றம் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான முறையில் நடக்கும் வரை” அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும் என்றார்.
“வெனிசுவேலா மக்களின் நலனில் அக்கறை இல்லாத ஒருவர் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயத்தை நாம் எடுக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
வெனிசுவேலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், கடந்த வாரம் தான் முறைப்படி நாட்டின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார்.
முன்னதாக, வெனிசுவேலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிடம் 5 கோடி பேரல் உயர்தர எண்ணெயை வழங்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இது சந்தை விலையில் விற்கப்படும் என்றும், இதிலிருந்து கிடைக்கும் வருமானம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“இது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிபர் என்ற முறையில், இந்த நிதி எனது கட்டுப்பாட்டில் இருக்கும். எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட்டிடம் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துமாறு கூறியுள்ளேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா பற்றி டிரம்ப் இப்போது கூறியது என்ன?
அமெரிக்க நடவடிக்கைக்குப் பிறகு வெனிசுவேலாவின் நிலை குறித்து ஞாயிற்றுக்கிழமை டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “வெனிசுவேலா உண்மையிலேயே சிறப்பாகச் செயல்படுகிறது. நாங்கள் அவர்களின் தலைமையுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். விஷயங்கள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.” என்றார்
வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பற்றி கேட்டபோது, “அவர் நல்லவர். நாங்கள் 5 கோடி பேரல் எண்ணெயை எடுத்துச் செல்லலாம் என்று அவர் எங்களிடம் கூறினார், நான் சரி என்று சொன்னேன். இதன் மதிப்பு 4.2 பில்லியன் டாலர் (சுமார் 35,000 கோடி ரூபாய்), இது தற்போது அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது” என்றார்.
முன்னதாக, வெனிசுவேலாவில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் 18 மாதங்களுக்குள் முழுமையாகச் செயல்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இதன் மூலம் வெனிசுவேலாவில் பெரிய முதலீடுகள் வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும், வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் கோடி டாலர்கள் செலவாகும் என்றும், இதற்கு பத்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் ஆய்வாளர்கள் பிபிசியிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
வெனிசுவேலாவிடம் எவ்வளவு எண்ணெய் உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்று சமீபகாலமாக டொனால்ட் டிரம்ப் வாதிட்டு வருகிறார்.
வெனிசுவேலாவிடம் சுமார் 303 பில்லியன் பேரல் எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பாகக் கருதப்படுகிறது.
ஆனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.
டிரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவின் இந்த எண்ணெய் இருப்புகளை பெரிய வாய்ப்பாக கருதுகிறது
இருப்பினும், வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அமெரிக்க நிறுவனங்களுக்குக் கடும் செலவு மிக்கதாக இருக்கலாம்.
தவிர, வெனிசுவேலாவின் எண்ணெய் கனரக கச்சா எண்ணெய் வகையைச் சார்ந்தது, இதைச் சுத்திகரிப்பதும் கடினம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு