பட மூலாதாரம், Reuters
(இது சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார்.
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Reuters
டிரம்ப் கூறியது என்ன?
வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார்.
வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், “இடியை விட வலிமையானதாகவும்” இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார்.
கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது.
“என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின,” என்று அவர் கூறினார், “வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்”, “அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்” கூறினார்.
நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார்.
தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும்.
மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது.
“அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது” என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் “வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்” மற்றும் “நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்” நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் “சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
“நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
பட மூலாதாரம், Reuters
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார்.
வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா “எதிர்க்கும்”, நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான “மிக மோசமான ஆக்கிரமிப்பை” எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற ‘மதுரோவின் உத்தரவுகளை’ வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார்.
“அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது” என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு