பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
எதிர்பாராத, முன்னெப்போதும் இல்லாத மற்றும் வியக்கத்தக்க நடவடிக்கையாக அமெரிக்கப் படையினர் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அந்நாட்டின் தலைநகர் கராகஸில் வைத்தே சிறைபிடித்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளன.
இதைத்தொடர்ந்து, வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா பயன்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“பாதுகாப்பான, நியாயமான மற்றும் விவேகமான அதிகார மாற்றம் நடைபெறும் வரை வெனிசுவேலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
இதுவரை உலகில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளங்களில், தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில்தான் மிக அதிக எண்ணெய் இருப்பு உள்ளது.
இத்தகைய சூழலில், வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் அதிகார மாற்றத்தை விட எண்ணெய் தொடர்பானவை என்றே பலர் கருதுகின்றனர்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்து, அந்நாட்டின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விருப்பமாகும். இதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணெய் அதிக அளவில் எடுக்கப்படலாம்.
கடுமையாக சேதமடைந்துள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் கட்டியெழுப்பி, அதிலிருந்து லாபம் ஈட்டும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், வெனிசுவேலாவின் எண்ணெய் தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எந்த கொள்கை ஆவணத்தையும் வெளியிடவில்லை.
அதிபர் டிரம்பின் பேராவல் மிக்க இந்தத் திட்டம் பல சவால்களை எதிர்கொள்கிறது. வெனிசுவேலாவின் எண்ணெய் கையிருப்புகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு பெரும் முதலீடு மட்டுமல்ல, அதிகமான காலமும் தேவைப்படும்.
உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்பு
பட மூலாதாரம், AFP via Getty Images
வெனிசுவேலாவில் சுமார் 303 பில்லியன் பீப்பாய்க்கு மேற்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிது.
சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு, வெனிசுவேலாவில் சிக்கியுள்ள சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் கடனைத் திரும்பப் பெற ஒரு வழி பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது.
எண்ணெய் துறையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில், பிடிஐ செய்தி நிறுவனம் இந்தக் கூற்றை வெளியிட்டுள்ளது.
சொல்லப்போனால், வெனிசுவேலாவின் எண்ணெய் வர்த்தகத்திற்கு அமெரிக்கா கடுமையான தடைகள் விதிப்பதற்கு முன்பு, இந்தியா அந்நாட்டின் கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளராக இருந்தது.
வெனிசுவேலாவின் கனமான கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் தொழில்நுட்பமும் திறனும் கொண்ட உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
பிடிஐ தகவலின்படி, ஒரு காலகட்டத்தில் இந்தியா தினமும் 4 லட்சம் பீப்பாய் வரை கச்சா எண்ணெயை வெனிசுவேலாவில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், 2020-ல், அமெரிக்கத் தடைகள் மற்றும் சட்ட இணக்கம் பற்றி அதிகரித்த கவலைகள் காரணமாக, இந்தியா வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை கிட்டத்தட்ட நிறுத்தியது.
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 2025 வரை, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெனிசுவேலாவிலிருந்து வந்தது வெறும் 0.3 சதவீதம் மட்டுமே.
வெனிசுவேலாவில் இந்தியாவின் முதலீடு
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இந்தியாவின் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் (ஓவிஎல்), கிழக்கு வெனிசுவேலாவில் உள்ள சான் கிறிஸ்டோபல் எண்ணெய் வயலை கூட்டாக இயக்கியது.
ஆனால், அமெரிக்கா விதித்த தடைகளால் அங்கு எண்ணெய் உற்பத்தி லாபகரமாக இல்லாமல் போனது. தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, ஓவிஎல் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த எண்ணெய் வயலில் ஓவிஎல்-க்கு 40 சதவிகித பங்கு உள்ளது. செய்தி நிறுவனம் பிடிஐ கொடுத்த தகவலின்படி, 2014-ஆம் ஆண்டு வரை வெனிசுவேலா, ஓவிஎல்-க்கு 536 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால், அந்தத் தொகையை வெனிசுவேலாவால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
மேலும், ஓவிஎல் நிறுவனமும் வெனிசுவேலாவுக்கு கிட்டத்தட்ட அதே அளவு தொகை கடன்பட்டிருப்பதாகவும், அதுதொடர்பாக தணிக்கை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பிடிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாற்றங்கள் இந்தியாவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், Federico PARRA/AFP via Getty Images
இப்போது, வெனிசுலாவில் நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இதன் விளைவாக, வெனிசுலாவில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவிற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவை இந்தியாவிற்குப் பலன் தருமா என்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன.
இந்த விவகாரத்தில் ஆய்வாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இருப்பினும், இது பெரும்பாலும் வெனிசுவேலா எண்ணெய் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையைப் பொறுத்தே இருக்கும்.
சர்வதேச சரக்கு நுண்ணறிவு நிறுவனமான கெப்ளர்-ன் மூத்த ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் நிகில் துபே, இது வெனிசுவேலா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்துகிறதா என்பதைப் பொறுத்தது என்கிறார்.
அதே நேரத்தில், குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா வெனிசுவேலாவில் உள்ள கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா தனது கட்டுப்பாட்டைத் தொடர விரும்பும் என்பதால் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவுக்கு நேரடி நன்மை கிடைப்பது கடினம் என்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் மற்றும் எண்ணெய் நிபுணர் நரேந்திர தனேஜா, வெனிசுவேலாவின் கனமான கச்சா எண்ணெயை சுத்திகரிக்க தேவையான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இருப்பதால், நீண்ட கால அடிப்படையில் இந்தியா இதனால் பயனடையக்கூடும் என்கிறார்.
“வெனிசுவேலா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா தளர்த்தினால், அதன் தாக்கம் இந்தியாவில் மெதுவாகவே காணப்படும். ஆனால், உத்தி ரீதியில் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். வெனிசுவேலாவின் கனமான மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட கச்சா எண்ணெயை இந்தியாவின் மேம்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரித்த அனுபவம் உள்ளது. வெனிசுவேலா கச்சா எண்ணெயின் விநியோகம் மீண்டும் தொடங்கினால், இந்த எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த நிலைமை இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும்” என்று நிகில் துபே கூறினார்.
வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவே சுத்திகரித்து, அதன் பின்னர் சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
“வெனிசுவேலாவின் எண்ணெய் துறையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டாலும், அமெரிக்காவிற்கே தனது உள்நாட்டு தேவைகளுக்காக கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆகவே, அந்த எண்ணெயை உள்நாட்டு பயன்பாட்டுக்காக சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உலக சந்தையில் விற்கும். எனவே, இதனால் இந்தியாவுக்கு பெரிய நன்மையோ பெரிய இழப்போ எதுவும் இல்லை.” என்றும் அவர் கூறினார்.

வெனிசுவேலாவின் எண்ணெய் இருப்புகளும், அதனுடன் தொடர்புடைய அமெரிக்க நலன்களும் குறித்து வலியுறுத்திய மூத்த பத்திரிகையாளர் நரேந்திர தனேஜா, தனது நடவடிக்கைக்கு உலகளாவிய எதிர்வினைகள் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்கிறார். இது, அமெரிக்காவின் பார்வை முழுவதும் வெனிசுவேலாவின் எண்ணெய் மீது தான் இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
“உலகம் முழுவதும் எதிர்ப்பு எழும் என்பதை முன்கூட்டியே கணித்தும், அமெரிக்கா ஏன் இவ்வளவு தீவிரமாக வெனிசுவேலாவில் தலையிட்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குக் காரணம், வெனிசுவேலாவிடம் உள்ள பெரும் எரிசக்தி வளங்களே. அங்கு உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் கையிருப்பு உள்ளது. சில மதிப்பீடுகளின்படி அது 300 பில்லியன் பீப்பாய் வரை உள்ளது. அதோடு, இயற்கை எரிவாயு, தங்கம் மற்றும் முக்கியமான கனிம வளங்களும் பெருமளவில் அங்கு உள்ளன” என்று தனேஜா கூறுகிறார்.
“அதுதான் உண்மையான ஈர்ப்பு” என்று கூறும் தனேஜா, “அமெரிக்கா எரிசக்தியில் தன்னிறைவை விரும்புகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீது உள்ள தனது சார்பை குறைக்க நினைக்கிறது. வெனிசுவேலா அமெரிக்காவின் அண்டை நாடாக இருப்பதால், வெனிசுவேலாவின் எண்ணெய் கையிருப்புகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே அமெரிக்கா இத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது தெளிவாகிறது” என்று கூறுகிறார்.
எண்ணெய் தேவை மற்றும் பொருளாதார கோணத்தில் மட்டும் பார்த்தால், வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இந்தியாவுக்கு நல்ல செய்தி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“இந்தியாவின் பார்வையில், வெனிசுவேலாவில் மிகப் பெரிய எண்ணெய் கையிருப்புகள் உள்ளன. ஆனால் தடைகள் காரணமாக முதலீடுகள் தடுக்கப்பட்டதால், தற்போது அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி தினமும் சுமார் 8 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உள்ளது. அங்கு ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனத்துக்கு சொத்துகள் உள்ளன. ஆனால் அவை இன்னும் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை. அதிபர் டிரம்ப் குறிப்பிட்டதுபோல் அமெரிக்க நிறுவனங்கள் அங்கு நுழைந்தால், ஒன்றரை ஆண்டுக்குள் உற்பத்தி தினமும் 25 லட்சம் பீப்பாய்கள் வரை, இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் பீப்பாய்கள் வரை உயரலாம். இவை ஏற்கனவே உருவாக்கப்பட்ட எண்ணெய் வயல்களே. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும். உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும்” என்று நரேந்திர தனேஜா கூறினார்.
இந்தியா வெனிசுவேலா கச்சா எண்ணெயை பெறுமா?
பட மூலாதாரம், Reuters
இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த சில ஆண்டுகளில், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான இந்தியாவின் சார்பு அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை குறைத்து வருவதாக இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் அளவை குறைக்காவிட்டால், இந்தியா மீது மேலும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
“இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களை தொடர்ந்து பன்முகப்படுத்தி வருகிறது. விநியோகத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது சார்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. இது, ரஷ்ய கச்சா எண்ணெய் மீது உள்ள சார்பை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்கா தலைமையிலான விரிவான அணுகுமுறையுடனும் ஒத்துப்போகிறது” என்கிறார் ஆய்வாளர் நிகில் துபே.
இத்தகைய சூழலில், வெனிசுவேலா கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு ஒரு நல்ல மாற்று வாய்ப்பாக அமையக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“இந்தச் சூழலில், இந்தியாவின் மிகவும் நவீனமான சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளக்கூடிய மிகச்சிறந்த தள்ளுபடி விலையிலான ‘ஹெவி குரூட்’ வகை எண்ணெய் தேர்வுகளில் ஒன்றாக வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உருவெடுத்துள்ளது. இந்த எண்ணெய் பீப்பாய்களை அணுக முடிவது, ரிலையன்ஸின் ஜாம்நகர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் எம்ஆர்பிஎல் ஆகியவை போட்டி விலையில் உற்பத்தியை மேற்கொள்ளவும், ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றவும் மற்றும் அவற்றின் லாப வரம்புகளை பராமரிக்கவும் உதவும்,” என்கிறார் நிகில் துபே.
இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், மற்ற ‘ஹெவி குரூட்’ எண்ணெய் விநியோகஸ்தர்களிடம் பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் என்றும் துபே நம்புகிறார்.
இருப்பினும், இந்தியாவிற்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் நேரடியாகக் கிடைக்கும் என்பதற்கு உறுதியான அறிகுறி எதுவும் இல்லை என்று அஜய் ஸ்ரீவஸ்தவா நம்புகிறார்.
“இதற்கு உறுதியான அடிப்படை எதுவும் இல்லை. நான் தெளிவாக இருக்கிறேன்: இந்தியாவிற்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் நேரடியாகக் கிடைக்காது. அந்த எண்ணெய் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு சுத்திகரிக்கப்படும். அமெரிக்கா தனது வர்த்தக ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகச் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு விற்கும். ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களில், சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகள் குறித்தே அமெரிக்கா உறுதியளித்துள்ளது, கச்சா எண்ணெயை கொடுப்பதற்கான அல்ல,” என்கிறார் ஸ்ரீவஸ்தவா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு